திங்கள், 25 மே, 2009

"மார்கழித் திங்கள்"

கருத்து;--மார்கழி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசியில் இந்த வ்ரதம் ஆரம்பமாகிறது. அன்று நக்ஷத்திரம் கார்த்திகை. அன்றிரவு நாலு நாழிகைதான் இருட்டு. அது மறுநாளின் உஷத் காலமானதாலும் அன்றுமுதல் மூன்று தினங்கள் பகலும் இரவும் பகலாதலாலும் காலம் இரவின்றி நித்யம் பகலாயிருக்கும் வைகுண்ட மாக்கிற்று. ஸகல பரத்வ சௌலப்யங்களையும் ஏககாலத்தில் வெளிக் காட்டிக் கொண்டு ஸ்ரீ லக்ஷ்மீகாந்தன் விளையாடின குழந்தை விளையாட்டுடையவிடம் ஆய்ப்பாடி யானதால் அந்த இடத்தில் நிகழ்வதாகத் தன் செய்கையை அநுவர்த்திக்கிறான்.
மதி நிறைந்த -- இருட்டின்றிப் பகலாகவே பகவதநுபவம் செய்யக் கிடைக்கும் வைகுண்டத்திற் போன்ற காலம்.நல் -- ஏற்றமிகுந்த உயர்ந்த என்னும் பொருள்களில் பொருந்திய நாள் -- ' மாஸாநாம் மார்க்கசீர்ஷோஹம்' என்று கீதையில் குறிப்பிட்ட காலத்தில் வைகுண்டத்திற் போலக் காலமுண்மையால் தேவதாராதனத்திற்குப் பொருத்தமும் மற்றெல்லா தினங்களைக் காட்டிலும் அந்த மூன்று தினங்களுக்கு ஏற்றமும் குறிக்கப் பெறுகின்றன.
ஆல் -- ஆரல் கார்த்திகை நக்ஷத்திரம் என்பது பரிபாடல் 5 அடி 43 "வடவயின் விளங்கா லுரையெழும் களிருள்" சாமிநாதய்யர் பதிப்புப் பக்கம் 35.நேர் -- ஒத்த இழையீர் -- பிறப்புக்குத் தகுந்த இடைத் தொழிலாகிய ஸ்வதர்மத்தை (உடைத் தவத்தை)ச் செய்கிறவர்களே! தவஞ்செய்தல் தன் கருமஞ் செய்தல் நேர் -- பொருந்திய ஸ்வாபிகதர்மம். பிறப்பினாலே வகுக்கப்பட்ட ஜாதித் தொழில். இந்த ஆராதனத்தின் பயனை அடையும் காலத்தில் இவர்களே 'சேயிழையா'ராக 30ஆவது பாட்டில் மாறிவிடுகிறார்கள். வயிற்றுப் பிழைப்புக்குச் செய்யும் இடைத் தொழில் ஸ்வகர்மாவானதால் அதை நேர்ந்த கர்மா என்றாள். இவர்கள் கர்மங்கள் அவனருளால் மாற்றப்பெற்று பகவத் பாகவத கைங்கர்யமே ஸ்வரூபமென்னும் நிலை கிடைக்கும்போது நேரிழை சேயிழையாயிற்று.ஸ்வபாவறியதம் கர்மா. ஸர்வோத்க்ருஷ்ட -- எல்லாவற்றிலும் செய்யச் சிறந்த கர்மாவாயிற்று. 'சிறுமீர்காள்' என்பதன் முழுப் பொருளும் 28ஆவது பாட்டில் விவரணம். இவ்வித ஆகிஞ்சந்ய பராகாஷ்டை நிலைத்திருத்தல்தான், அவன் அருள் பெறுவதற்கு மிகப்பெரிய சாதனமென்பதைத் தெரிவிப்பவன் கவிகள் நாணச் சிறுமைக்குப் பெருமை கற்பித்து அந்த ஆகிஞ்சந்யத்தை உங்கள் உண்மைப் பொருளாக உடையீர்களானதால் நீங்கள், எல்லாரும் எம்பெருமான் செல்வமாக வளர்க்க உரிமையுடையீர்கள் என்பது பையன்களோடு யமுனை மணற்குன்றிற் கண்ணன் அவர்கள் எச்சிலைத் தான் சுவைத்துத் தன்னெச்சிலை அவர்களுக்குக் கொடுத்தும் சோறுண்டதும் அதைப் பிரம்மாதி லோகங்களில் உள்ளவர்கள் கண்டு அதிசயித்ததும் இடைப் பெண்களுடன் இவன் ராஸக்ரீடை செய்ததும் சகல சாஸ்த்ர விசாரதர்களுக்கு எந்நாளும் கிட்டியதாக நூல்களிற் காணவில்லையே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக