Sunday, July 23, 2017

நம்மாழ்வார் வைபவம்

1.திருவிருத்தம்.

இது க‌ட்ட‌ளைக் க‌லித்துறை என்கிற‌ வ்ருத்தத்தில் 100 பாட்டுக்க‌ள் அட‌ங்கிய‌தாயிருக்கும். “இவ‌ர் த‌ம் வ்ருத்தாத்த‌ங்க‌ளை முன்னிடுகையாலே திருவிருத்த‌ம் என்று பேர்பெற்ற‌ ப்ர‌ப‌ந்தத்தின்” என்று ஸ்ரீ உப‌கார‌ ஸ‌ங்க்ர‌ஹ‌ம் என்னும் ர‌ஹ‌ஸ்ய‌த்தில் ஸ்ரீ தேசிக‌ன் இத‌ன் திருநாம‌த்திற்குக் கார‌ண‌த்தை நிரூபித்திருக்கிறார். அதாவது விருத்தம் – வ்ருத்தம், முன்னால் நடந்தபடிகளை இதில் வெளியிடுகிறபடியினால் இத்திருநாமம் என்றபடி. அதாவது’பொய்நின்ற ஞானமும்’ என்று தொடங்கி, ’இன்னின்ற நீர்மை’ என்னுமளவாகத் தமக்கு நடந்த படிகளை அருளிச் செய்து, ’உயிரளிப்பான் என்னின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் இமையோர் தலைவா’ என்று எம்பெருமான் தன்திறத்தில் இதற்குமுன் செய்தருளின உபகார பரம்பரைகளையும் ஸங்க்ரஹேண காட்டியருளி, இனிச் செய்யவேண்டிய உபகாரங்களை ’மெய்நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே’ என்று ப்ரார்த்தித்திருப்பதினால் இது வ்ருத்த கீர்த்தனமாய் நின்றது என்றதாய்யிற்று. விருத்தம் என்றது விரோதி என்பதைக் குறிக்குமாகையினால்இந்த ஸம்ஸாரம் விரோதி என்கிற ஆகாரம் இதில் நிரூபிக்கப்படுகிறபடியினால் இத்திருநாமம் என்றபடியாகவுமாம். திரு என்கிற விசேஷணம் பூஜ்யோக்தி. இதில் 100 பாட்டுக்களிலும் நூறுவிதங்களான இலக்கியத் துறைகள் நிரூபிக்கப் பட்டிருக்கின்றன என்பர்கள். இதிலுள்ள நூறு பாட்டுக்களும் திருவாய்மொழியின் 100 திருவாய்மொழிகளினுடைய அனுபவத்தைக் குறிக்கும் என்றும் சிலர் கூறுவர்கள். இதுமேலே திருவிருத்த ப்ரபந்தத்தில் குறிப்பிடப் படுகிறது. இதுவும் ஆழ்வாருடைய மற்றைய மூன்று ப்ரபந்தங்களும் அந்தாதித்தொடரில் அருளிச் செய்யப்பட்டவைகளாயிருக்கும்.

இதில், ’ஈனச்சொல்லாயினுமாக ..... மற்றெல்லாயவர்க்கும் ஞானப்பிரானையல்லால் இல்லை நான் கண்ட நல்லவே’ என்கிற பாட்டின் அர்த்தத்தை அருளிச் செய்யும்பொழுது அஸ்மத் ஸ்வாமி – ‘இது பாரீர்! பராங்கசாவதாரத்தில் ஸ்வமதத்தை வெளியிட்டபடி. ஸ்ரீகீதோபநிஷதாசார்யன் தன்னுடைய மதத்தை "ஜ்ஞாநீ த்வாத் மைவ மே மதம்" என்று உத்கோஷித்தான். அவனே பின்பு குருவரராய் அவதரித்து இதன் உட்கருத்தை ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகையில் "ஜ்ஞாநீ து மே ஆத்மைவ இதி மதம் – வேதாந்தத்தில் ஏற்பட்ட ஸித்தாந்தமாயிருந்தாலும் இருக்கட்டும், இல்லாமல் போனாலும் போகட்டும், க்ருஷ்ணனுடைய ஸித்தாந்தமிது" என்றல்லவோ வெளியிட்டது. அதைப்போலே ஆழ்வாரும் ஸ்வமதத்தை "மற்றெல்லாயவர்க்கும் ஞானப்பிரானையல்லால் இல்லை நான் கண்டதுவே" என ஸ்ரீபராங்குசா சார்யனான காலத்தில் வெளியிட்டருளினார். ஸ்ரீகீதாபாஷ்ய தாத்பர்யசந்த்ரிகா வாக்யத்தை இங்கும் அனுஷங்கித்துக்கொள்ளவும். அதாவது ‘திருத்தம் பெரியவர்சேரும் துறையில் செறிவிலர்க்கு, வருத்தம் கழிந்த வழி அருள் என்ற நம் மண்மகளார், கருத்தொன்ற ஆதி வராகம் உரைத்த கதி’யன்றோ இது. இந்த சரணாகதியாகிற உபாயம் வேதாந்தங்களில் நிரூபிக்கப் பட்டிருக்கட்டும், நிரூபிக்கப்படாமல் இருக்கட்டும், இதுவே பராங்குசனுடைய மதம் என்றறியவும் என்றபடி. இந்த இரண்டிடங்களுக்கும் இது வேதாந்தங்களில் ப்ரதிபாதிக்கப்பட்டதே ஆயினும் உண்மையைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிற நீ சொல்லுகிறபடி வேதாந்தங்களில் இவ்வர்த்தம் சொல்லப்படவில்லை என்றாலும் பாதகம் இல்லை, ஏனெனில் அந்த வேதாந்தங்களை ப்ரவர்த்தனம் செய்தருளிய பகவானே இதை ப்ரவசனம் செய்தபடியினால் நீ அத்யயனம் செய்யாத வேதாந்தத்தில் இது கூறப்பட்டிருக்கிறது என்றறிக என்று கூறுவதில் கருத்து, இதுவேதான் ஸ்ரீராமாவதாரத்திலும், ஸ்ரீக்ருஷ்ணாவதாரத்திலும் உத்கோஷிக்கப்பட்டது.

இதில்,

நானிலம்வாய்க்கொண் நன்னீரறமென்று கோதுகொண்ட

வேனிலம் செல்வன் சுவைத்துமிழ்பாலை கடந்த பொன்னே!

கானிலதோய்ந்து விண்ணோர்தொழும் கண்ணன் வெஃகாவுது, அம்பூந்

தேனிளம் சோலை அப்பாலது எப்பாலைக்கும் சேமத்ததே.

என்கிற பாட்டில் திருத்தண்காவில் ஸ்ரீதேசிகன் அவதரிக்கப்போகிறார் என்பதை ஸூசிப்பிக்கிறார் என்று அஸ்மத் ஸ்வாமி நிர்வஹித்தருளும். இப்பாட்டில் தலைமகன் உகந்தருளின நிலங்களைக் காட்டித் தேற்றும் துறை கூறப்படுகிறது. பாலைவனத்தைக் கடந்துவிட்டோம், இதோ அருகில் தோன்றுவது என்பதை "வெஃகாவுது" என்றும், "அம்பூந்தேனிளம்சோலை அப்பாலது" என்று கொஞ்சம் தூரத்தில் தோன்றும் திருத்தண்காவைக் காட்டி, அது "எப்பாலைக்கும் சேமத்ததே" என்றுமல்லவா இப்பாட்டில் அனுஸந்தானம்! திவ்யதேசங்களுக்குள் ஏற்றத்தாழ்வு சொல்ல முடியாதாகையினால் "எப்பாலைக்கும் சேமத்ததே" என்பதற்கு ஒரு விசேஷம் திருத்தண்காவிற்குச் சொல்லவேண்டும். இதுதான் ஆசார்ய ஸார்வபௌமனுடைய திருவவதாரம். வாழித்திருநாமத்தில் திருமலைமால் திருமணியாய் அவதரித்து, செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்துரைத்தாராய் நின்றார். சந்தப்பொழிலாகிய திருத்தண்காவில் அவதரித்தருளி தஞ்சப் பரகதியைத் தந்தருளுவன் என்றார்கள். அதாவது பகவான் அவதரித்து ஹிதோபதேசம் செய்ததையே இவ்வாசார்யன் திவ்ய ப்ரபந்தங்களிலும் உத்கோஷிக்கப்பட்டவை என்று பல க்ரந்தங்களில் அருளிச் செய்தார். அத்துடன் நின்றுவிடாமல் ஆசார்ய ஸமாச்ரயணம் செய்தால்தான் மோக்ஷம் அடையலாம் என்றும் நிரூபித்தபடியினாலே அப்படி ஆச்ரயிப்பவர்கள் எக்காலத்தியவரேயாகிலும் மோக்ஷம் அடைவார்கள் என்று ஸ்தாபித்தபடியினாலே அப்படிப்பட்ட ஆசார்யன் திருவவதரித்தருளிய திருத்தண்கா எப்பாலைக்கும் சேமத்தையுடையதாயிற்று என்றபடி.