Monday, August 8, 2016

இராம‌ நாட‌க‌ம் பாதுகா ப‌ட்டாபிஷேக‌ம்

ஐந்தாங் களம்

இடம்: அயோத்தி அரண்மனையில் ஒரு தனியிடம்
காலம்: காலை
பாத்திரங்கள்: வசிஷ்டர், வாமதேவர், சுமந்திரர்

வசிஷ்டர்:-- (தமக்குள்ளாக) லக்கினம் நெருங்கிவிட்டது. சக்கரவர்த்தியைக் காணோம். மந்திரி போனவரும் வரவில்லை. ஒன்றுந் தெரியவில்லையே! (வாமதேவர் வருகிறார். வசிஷ்டர் அவரைப் பார்த்து) வாமதேவரே! சுமந்திரர் இன்னும் வரவில்லையா?

வாமதேவர்:-- சக்கரவர்த்தி கைகேயியின் அந்தப்புரத்தில் இருப்பதாகத் தெரிந்து சுமந்திரர் அங்கு சென்றார். அங்கே அவர் சக்கரவர்த்தியைப் பார்க்கவில்லையாம். இராமரை அழைத்து வரும்படி கைகேயியார் கட்டளையிட்டாராம். அதன்மேல் இராமரை அழைத்துக்கொண்டு சென்றார். சென்று வெகு நேரமாயிற்று. யாது காரணமோ இன்னும் வரவில்லை.

வசிஷ்டர்:-- இராமனும் இன்னும் திரும்பி வரவில்லையோ?

வாமதேவர்:-- இல்லை. என்ன காரணமோ தெரியவில்லை. கைகேயி அம்மை இராமரை எதற்காக அழைத்திருக்கக் கூடும்?

வசிஷ்டர்:-- எதற்காயிருக்குமோ? மகுடாபிஷேக விஷயமாயிருக்கலாம். அவளுக்கு இராமனிடத்தில் மிகவும் பிரியம். கோசலைக்குக்கூட அவன்மீது அவ்வளவு அன்பு இராதென்று நினைக்கிறேன். கைகேயி தன் மகன் பரதனிடத்திலுங்கூட அவ்வளவு பிரியம் உள்ளவளல்ல.

வாமதேவர்:-- இருக்கலாம். என்ன இருந்தாலும் தன் மகனிருக்க, சக்களத்தி மகனுக்குப் பட்டமாவதென்றால் அவளுக்குக் கொஞ்சம் வருத்தமாய்த்தானிருக்கும். சக்களத்திப் போராட்டம் சகஜந்தானே!

வசிஷ்டர்:-- உண்மைதான். ஆனால் கைகேயி அப்படிச் சக்களத்தி த்வேஷம் கொள்பவளல்ல. ஒருகால் காலவித்தியாசத்தால் அவளை அண்டிச் சீவனம் செய்யும் கீழ்மக்கள் அவள் மனதைக் கலைத்தால் உண்டு.

வாமதேவர்:-- பட்டாபிஷேக முகூர்த்தம் நெருங்கிவிட்டது. சக்கரவர்த்தி இவ்வளவு தாமதமாயிருக்கக் காரணம் என்ன?

வாமதேவர்:-- எல்லாம் சுமந்திரர் வந்தால் தெரியும். இதோ அவரும் வந்துவிட்டார். (சுமந்திரர் வருகிறார். வசிஷ்டர் அவரைப் பார்த்து) சுமந்திரரே! என்ன காலதாமதம்? சக்கரவர்த்தி எங்கே? நீர் ஏன் முகம் தளர்ந்திருக்கிறீர்?

சுமந்திரர்:-- பட்டாபிஷேகத்திற்கு விக்கினம் வந்துவட்டது.

வாமதேவர்:-- விக்கினமா? என்ன அது? யாரால், எப்படி நேரிட்டது?

சுமந்திரர்:-- சக்கரவர்த்தி நேற்றிரவு கைகேயி அரண்மனைக்குச் சென்றார். அதற்குமுன் அங்கே என்ன சதியாலோசனை நடந்ததோ தெரியவில்லை. சக்கரவர்த்திக்கும் தெரியாதாம். சம்பராசுர யுத்தத்தில் கைகேயி அம்மை சாரதியாகச் சென்றபொழுது சக்கரவர்த்திக்கு ஏதோ உதவி செய்தார்களாம். அதற்காக சக்கரவர்த்தி அவருக்கு இரண்டு வரங்கள் கொடுத்தாராம். அவ்வரங்களை கைகேயி அம்மை இதுவரை கேட்கவில்லையாம்; அவைகளை இப்பொழுது கேட்டுப் பெற்றுக் கொண்டார்களாம். வரங்களிரண்டில் ஒன்றால் ஸ்ரீராமர் பதினான்கு வருஷம் வனவாசஞ் செய்யவேண்டியதாம்; மற்றொன்றால் பரதருக்குப் பட்டமாக வேண்டியதாம்.

வாமதேவர்:-- என்ன அது? என்ன அது? பட்டாபிஷேகம் பரதனுக்கா? இராமன் காட்டுக்குச் செல்வதா? என்ன விபரீதம்! யாருடைய சதியாலோசனை இது?

சுமந்திரர்:-- யாருடைய சதியாலோசனையோ தெரியவில்லை. சக்கரவர்த்தி அந்தப்புரம் செல்வதற்குச் சற்றுமுன்னம் மந்தரைதான் கைகேயியோடு பேசிக்கொண்டிருந்தாள் என்று புலம் வெளியாகிறது.

வசிஷ்டர்:-- கைகேயி இராமனை அழைத்துவரச் சொன்னதெதற்காக?

சுமந்திரர்:-- ஆசீர்வதிப்பதற்காக இருக்குமென்று நான் எண்ணினேன். பிறகு பார்த்தால் இராமரைக் காட்டுக்குப் போகும்படி உத்தரவு செய்வதற்காக இருந்தது. உத்தரவும் ஆய்விட்டது. இராமருஞ் சம்மதித்து விடைபெற்றுக்கொண்டு கோசலை அரண்மனைக்குப் போயிருக்கிறார்.

வாமதேவர்:-- சக்கரவர்த்தியா வனம் போகும்படி இராமருக்குக் கட்டளையிட்டார்?

சுமந்திரர்:-- சக்கரவர்த்தி மூர்ச்சையாய்க் கிடக்கிறார். ஆதலால் கைகேயி அம்மையே இராமருக்குக் கட்டளை யிட்டிருக்க வேண்டும்.

வாமதேவர்:-- ஆ, என்ன கொடுந்தொழில் செய்தாள்?

வசிஷ்டர்:-- வாமதேவரே!

வெவ்வினை யவள்தர விளைந்த தேயுமன்
றிவ்வினை யிவன்வயி னெய்தற் பாற்றுமன்
றெவ்வினை நிகழ்ந்ததோ வேவ ரெண்ணமோ
செவ்விதி னொருமுறை தெரியும் பின்னரே.

இந்தக் கொடுஞ்செயல் அவளால் நிகழ்ந்ததுமல்ல. நற்குண நாயகனாகிய நம் இராமனுக்கு இவ்விதி வரத்தக்கதுமல்ல. இது விளைந்ததெவ்வாறோ? எவருடைய எண்ணத்தாலோ? எதற்காகவோ? எல்லாம் பிறகு செவ்வையாய்த் தெரியும். நல்லது, சுமந்திரரே! வாரும். இராமனைப் பார்த்துவிட்டுப் பிறகு சக்கரவர்த்தியைப் போய்ப் பார்ப்போம். கைகேயிக்கும் புத்திமதியைச் சொல்லி அவள் மனத்தைத் திருப்ப முயலலாம்.

சுமந்திரர்:-- ஆம். நம்மாற் கூடிய முயற்சியைச் செய்வோம்.

(எல்லோரும் போகின்றனர்)