Friday, October 30, 2015

மும்மணிக்கோவை

ஸ்வாமி ஸ்ரீ தேசிகன்
அருளிச் செய்த
மும்மணிக்கோவை

அருள் தரும் அடியர்பால் மெய்யை வைத்துத்
தெருள் தரநின்ற தெய்வநாயக நின்
அருள் எனும் சீர் ஓர் அரிவையானதென
இருள் செக எமக்கு ஓர் இன்னொளி விளக்காய்
மணிவரையன்ன நின் திருவுருவில்
அணியமராக(த்து) அலங்கலாய் இலங்கி
நின்படிக்கெல்லாம் தன்படி ஏற்க
அன்புடன் உன்னோடவதரித்தருளி
வேண்டுரை கேட்டு மீண்டவை கேட்பித்து
ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று
தன்னடி சேர்ந்த தமர் உனை அணுக
நின்னுடன் சேர்ந்து நிற்கும் நின்திருவே. 1.


அருள்தரும் --- அருளைக் கொடுக்கும்; அடியர்பால் -- (உன்) தாஸ பூதர்கள் விஷயத்தில்; மெய்யை -- ஸத்யத்தை (அல்லது சரீரத்தை அதாவது திருமேனியை); வைத்து -- ஸ்தாபித்து; தெருள் தர -- ஞானத்தைக் கொடுப்பதற்காக; நின்ற -- நிற்கின்ற; தெய்வநாயக --- தேவநாதனே; நின் --- உன்னுடைய; அருள் எனும் --கருணை என்னும்; சீர் -- (கல்யாண) குணம்; ஓர் அரிவை ஆனது என --- ஒரு ஸ்திரீ (ரூபம்) கொண்டது என்னும் படியாக; இருள் --- அஜ்ஞானமாகிற இருட்டு; செக -- நாசமடையும்படியாக; எமக்கு -- எங்களுக்கு; ஓர் இன் ஒளி -- ஒப்பற்ற இனிமையான (போக்யமான) பிரகாசத்தையுடைய; விளக்காய் -- தீபமாகி; மணிவரையன்ன--ரத்ன பர்வதம் போன்ற ; நின் திருவுருவில் --உனது அழகியரூபத்தில்; அணிஅமர் -- திருவாபரணங்கள் அமைந்துள்ள; ஆகத்து -- திருமார்பில்; அலங்கலாய் -- மாலையைப்போல் விசேஷ அலங்காரமாக இலங்கி --- பிரகாசித்துக் கொண்டு; நின்படிக்கெல்லாம் -- உன்னுடைய பிரகாரங்களுக்கெல்லாம்; தன் படி -- தன் பிரகாரங்கள் ஏற்க -- ஒத்திருக்கும்படி; அன்புடன் --- பிரீதியுடன்; உன்னோடு -- உன்னோடுகூட; அவதரித்தருளி -- அவதாரம் செய்தருளி; வேண்டு உரை --- (சேதனர்கள்) பிரார்த்திக்கின்ற (அல்லது உனக்கு) வேண்டுவதான வார்த்தைகளை; கேட்டு --- தான் கவனமாய்க் கேட்டு; மீண்டு அவை ---- மறுபடி அந்த வார்த்தைகளை; கேட்பித்து -- நீ (அல்லது) அந்தச் சேதனர்கள் கேட்கும்படியாகச் செய்து; ஈண்டிய வினைகள் -- திரண்ட பாபங்கள்; மாண்டிட --- முழுவதும் நாசமடையும்படி; முயன்று -- பிரயத்னம் செய்து; தன்னடி சேர்ந்த தமர் --- தன் திருவடிகளை ஆச்ரயித்த பக்தர்கள்; உனை அணுக  -- உன்னை அடையும்படி; நின்னுடன் சேர்ந்து -- உன்னுடன் எப்போதும் பிரிவில்லாமல்,  எப்போதும் சேர்ந்து; நிற்கும் -- நிலையாக நிற்கின்ற (அல்லது நிற்பாள்); நின் திருவே  -- உன்னுடைய லக்ஷ்மியே.
   
   
    ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன் அருளிச்செய்த தமிழ்ப் பிரபந்தங்களுள் முதலாவது மும்மணிக்கோவை என்பது பெரியோர் கொள்கை. ஆதலால் இந்தப் பாசுரம் மும்மணிக் கோவைக்குமட்டுமல்லாமல், ஸ்வாமிதேசிகனுடைய தமிழ்ப் பிரபந்தங்கள் அனைத்துக்குமே மங்களப் பாசுரமாகும். அருளில் ஆரம்பிக்கிறது. ஸகல மங்களங்களுக்கும் அதி தேவதையான பெரிய பிராட்டியார் விஷயமான பாசுரம் இது. “அகர முதலவெழுத்தெல்லா” என்ற திருவள்ளுவர் வாக்கின்படி எழுத்துக்களுள் முதலான அகாரத்தைக் கொண்டு இம்முதற் பாட்டுத் தொடங்குகிறது. “அ” என்னும் அக்ஷரம் ஸ்ரீமந் நாராயணனைச் சொல்லும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அந்த எழுத்தைக் கொண்டே அவ்வெம்பெருமான் விஷயமாகப் பாடப் பெறும் இந்த நூல் ஆரம்பிக்கப்படுகிறது.
    “மும்மணிக்கோவை” என்பது தமிழில் 96 வகையான பிரபந்தங்களுள் ஒன்று. அது முப்பது பாசுரங்கள் கொண்டதென்றும், ஆசிரியப்பா (அகவல்), வெண்பா, கலித் துறை இம்மூன்றுவிதப் பாக்களும் அந்தாதியாக முறையே மாறி மாறி வரவேண்டும் என்றும் தமிழர்கள் அதற்கு இலக்கணம் வகுத்திருக்கிறார்கள். இவ்விதம் வரிசையாகக் கோக்கப்பட்ட மும்மணிகளால் ஆனதால், இது “மும்மணிக்கோவை” எனப்படுகிறது.
    ஸ்ரீதேசிகன் வடமொழியில் காவ்யம், நாடகம், ஸந்தேசம், ஸ்தோத்ரம் என்று பல்வேறு முறைகளில் க்ரந்தங்கள் இயற்றியிருப்பதுபோலவே சந்தமிகு தமிழிலும் தமிழர்கள் மரபையொட்டிப் பல துறைகளிலும் பிரபந்தங்களை அருளிச் செய்திருக்கிறார்.
    அவற்றுள் “மும்மணிக்கோவை” என்கிற இவ்வழகிய பிரபந்தம் திருவஹீந்த்ரபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீதேவநாதனைப் பற்றியது. இந்த எம்பெருமான் விஷயமாக ஸ்ரீதேசிகன் ஸம்ஸ்கிருதம், பிராகிருதம், தமிழ்  இம்மூன்று மொழிகளிலும் அநேக விதமான ஸ்தோத்ரங்களைச் செய்துள்ளார். இவற்றில் அவ்வெம்பெருமானுடைய திவ்ய மங்கள விக்ரஹம், அங்க ப்ரத்யங்க ஸௌந்தர்யம், அதில் தமக்குள்ள வ்யாமோஹம் இவைகளைப் பரக்கப் பேசியுள்ளார். ஜீவாத்மாவை ஸ்திரீயாகவும், புருஷோத்தமனைப் புருஷனாகவும், பக்தியைக் காமமாகவும் பாவித்து வர்ணிக்கும் தமிழர் மரபை இந்தப் பெருமான் விஷயத்தில்தான் இவ்வாசார்ய வள்ளல் அனுபவித்திருக்கிறார். 
    ஊன்றிப் பார்க்குமிடத்து “மும்மணிக்கோவை” என்ற பெயர்கொண்ட இப்பிரபந்தத்தில் கவிஸார்வ பௌமனான நம் தேசிகன் யாப்பிலக்கண முறையில் மட்டுமன்றி இன்னும் மற்றவிதங்களிலும் இதை மும்மணிகளின் கோவையாக விசித்திரமாக அமைத்திருக்கிறார் என்று நினைக்கவேண்டி யிருக்கிறது. இந்நூலைச் செவ்வனே படித்து ஆராய்ந்து அவைகளையெல்லாம் அறிதல் அவசியம். ஒவ்வொரு பகுதியிலும் ஆசிரியப்பா, வெண்பா, கலித்துறை என்கிற மூன்றுவிதமான பாக்கள் இருப்பது போலவே, ஒவ்வொன்றிலும் நாம் அவச்யம் அறிய வேண்டிய தத்துவம், ஹிதம், புருஷார்த்தம் என்ற மூன்றும் கூறப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. (இதைப்பற்றி மேலே காணலாம்)
தொடரும்…….