Friday, August 17, 2012

சுப மந்த்ரார்த்த ப்ரச்ந பாஷ்யம் 13

4ம் கண்டம்

16 விவாஹ ஹோம மந்த்ரங்கள்

1, 2, 3, 4 : ஸோமாய :- இந்த கந்யகையை முதலில் அடைந்த ஸோமதேவனுக்கு இந்த ஹோமம் செய்கிறேன். இரண்டாவதாக கந்தர்வனுக்கும், மூன்றாவதாக அக்நிக்கும் ஹோமம் செய்கிறேன். (இந்த மூவரும்தான் இவளைக் காப்பாற்றி இந்த வரனுக்குக் கொடுத்துள்ளார்கள்).

4. கந்யலா :- இவள் பிறந்த வீட்டை விட்டு கணவனின் இல்லத்தை அடைவதால் இவன் தன் கந்யை என்ற தீiக்ஷ அதாவது நியமத்திலிருந்து நீங்கிவிட்டாள்.

5. ப்ரேதோமுஞ்சாதி :- இஷ்டங்களை பூர்த்தி செய்து வைக்கும் ஓ இந்த்ர தேவனே! இவளுக்கு அவள் பித்ரு க்ருஹத்திலுள்ள அபிமானங்களை (பற்றுதலை) விடுவிக்கவேண்டும். கணவனாகிய என்னுடைய குலத்தில் பற்றுதல் மிகவேண்டும் (பற்றுதல் இல்லாமல் போய்விடக் கூடாது). இவளுக்கு நல்ல புத்திரர்களும், நல்ல ஸம்பத்துக்களும் வழங்கி இவளை இந்த புக்ககத்தில் மனம் லயித்துப்போகும்படியாகச் செய்வீராக.

6. இமாந்த்வம் :- வேண்டியவர்களின் அனைத்து வேண்டுதலையும் மழை போல் பொழிந்து நிறைவேற்றும் இந்த்ரனே! இவளுக்கு நிறை பிள்ளைச் செல்வங்களை ஆசீர்வதியும். பத்து குழந்தைகளை இவள் பெற்றாலும் 11வதாக (கடைசியாக)ப் பெற்ற குழந்தையிடத்தில் அன்பு செலுத்துவதுபோல் என்னிடம் எப்பொழுதும் இவள் அன்பு செலுத்தவேண்டும்.

7. அக்நிரைது :- ஓ அக்நி மற்றும் வருண தேவர்களே! இந்த பெண்ணிடம் பிறக்கவுள்ள புத்திரர்களுக்கு அபம்ருத்யு எனும் அகால மரணம், துர்மரணம் எதுவும் நேரிட்டுவிடாமல், இவள் எக்காரணம் கொண்டும் புத்ர சோகத்தினால் இவள் கண்ணீர்விட்டு அழும்படியான நிலை இவளுக்கு ஏற்படாமலிருக்க ஆசீர்வதிப்பீர்களாக.

8. இமாம் அக்நி: :- விவாஹ அக்னி இவளை ரக்ஷிக்கட்டும். இவளிடம் பிறக்கும் பிள்ளைகள் நீண்ட ஆயுளைக் கொண்டவர்காளக இருக்கட்டும். இவள் மடியில் எப்பொழுதும் ஒரு குழந்தை தவழந்த வண்ணம் இருந்து - அவள் மடியை ஒருபோதும் வெறுமையாக்காமல் இருக்கட்டும். நீண்ட ஆயுளை உடைய அந்தக் குழந்தைகளை தினமும் காலை உறங்கி எழுந்தும் கொஞ்சி உறவாடும்படியான பாக்யத்தைக் கொடும்.

9. மாதே க்ருஹே :- ஹே கல்யாணி! உன் வீட்டில் நள்ளிரவில் அழுகுரல் கேட்கவேண்டாம். அழச் செய்யும் அனைத்து துர்தேவதைகளும் உன்னிடமிருந்து விலகி வேறிடத்திற்குச் செல்லட்டும். தலைவிரி கோலமாய் மார்பிலடித்துக்கொண்டு அழவேண்டிய நிலை உனக்கு எப்போதும் வரவேண்டாம். உன் கணவன், குழந்தைகள் நீண்ட ஆயுளுள்ளவர்களாகவும் அவர்களுடன் காலமெல்லாம் சந்தோஷமாக இருப்பாயாக.

10. த்யௌஸ்தே ப்ருஷ்டம் :- உன் ப்ருஷ்டத்தை (முதுகு, ஆஸனம் ஆகிய பின் பகுதிகள்) ஆகாசம் ரக்ஷிக்கட்டும். உன் இரு துடைகளையும் வாயு ரக்ஷிக்கட்டும். அச்விநீ தேவர்கள் உன் ஸ்தனங்களை (மார்பகங்களை) ரக்ஷிக்கட்டும். உன் குழந்தையை ஸவிதா எனும் சூரிய தேவன் காப்பாற்றட்டும். பிறந்த குழந்தை துணி உடுத்தும் காலம் வரும் வரை ப்ருஹஸபதி தேவன், அச்விநீ தேவர்களும் காப்பாற்றட்டு;ம்.

11. அப்ரஜஸ்தாம் :- உன்னிடம் குழந்தை பெறமுடியாத மலட்டுத்தன்மை இருந்தாலும், உனக்கு பிறந்த குழந்தைக்கு கேடுவிளைவிக்கும் புத்ர தோஷம் இருந்தாலும் மற்ற எந்த பாபகரமான தோஷங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் வாடிய பூவை தலையிலிருந்து எடுத்து எறிவதுபோல் உன் சத்ருக்களாகிய பகைவர்களிடம் எறிகிறேன்.

12. இமம்மே வருண, 13. தத்வாயாமி, 14. தவன்னோ அக்நே, 15. ஸத்வந்நோ அக்நே, 16. துவமக்நே அயாஸி ஆகிய மந்த்ரங்களுக்கான விளக்ககங்கள் உபநயனத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன.

12, 13. இமம்மே வருண, தத்வாயாமி... ‘வருண தேவனை ஸ்துதி செய்கிறேன், இதுவரை நான் ப்ரார்தித்த அனைத்தும் விரைவில் நிறைவேற அருள்புரியும் என்று, வருணன் குற்றங்களைப் பொறுத்து, கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றை அவற்றை அனுபவிக்க தீர்காயுளையும் கொடுப்பாராக.

14. த்வந்நோ, 15.ஸத்வந்நோ அக்நே, 16. த்வமக்நே .... ‘அக்நிதேவன் மற்ற தேவர்களுக்கு வழங்கப்படும் ஹவிஸ்ஸை சுமந்து செல்பவர், அதனால் அந்த அக்நிதேவன் வருண தேவனை நிர்பந்தித்து என் கோரிக்கைகளை நிறைவேற்றச் செய்யவேண்டும். மேலும் அக்நி பகவாந் எப்போதும் நாங்கள் அளிக்கும் ஹவிசுகளைப் ஏற்றுக்கொண்டு எங்களுக்கு நல்லாசிகள் வழங்கிக்கொண்டிருக்கவேண்டும்.