வியாழன், 15 நவம்பர், 2012

திருஅரங்கர் தத்தைவிடு தூது

ஹம்சத்தைத் தூது விட்டார் ஸ்வாமி தேசிகன். மேகத்தைத் தூது விட்டான் கவி காளிதாஸன். நம் மதுரகவி ஸ்ரீநிவாஸ அய்யங்காரோ (ஏற்கனவே லக்ஷத்துக்கும் அதிகமான கவிதைகள் இயற்றிய இவரைப் பற்றிப் பலமுறை இங்கே எழுதியிருக்கிறேன். ) திருஅரங்கனுக்கு கிளியைத் தூது அனுப்பியிருக்கிறார். தமிழறிந்த பலரும் இதை முன்பே படித்து ரசித்திருக்கலாம். இன்றுதான் இந்நூலைப் படிக்க வாய்ப்புக் கிடைத்தது. காப்புரிமை இருக்கிறது. என்றாலும் நல்ல தமிழை, அரங்கனிடம் ஈடுபாட்டால் இன்னமுதாய்ப் பொங்கிவந்திருக்கும் ஒரு அருமையான நூலை அனைவரும் படித்து மகிழவேண்டும் என்ற ஆசையால் காப்புரிமையை மீறத் துணிந்திருக்கிறேன். இங்கு படிப்பவரில் ஒரு சிலராவது காப்புரிமை வைத்திருக்கும் திரு கோவிந்தராஜனை (எண்8, நர சிம்மபுரம்,மைலாப்பூர், சென்னை) அணுகி நூலை வாங்கிப் படிக்க இது ஒரு தூண்டுதலாக அமைந்தால் மிக மகிழ்வேன். வழக்கமாக மதுரகவி நூல்களுக்குச் சிறு குறிப்புகள் வழங்கி உதவும் திரு. ‘கம்பன்’ இந்நூலுக்கும் எழுதியுள்ள குறிப்புகளுடன் இனி நூலைப் படித்து ரசியுங்கள். வழக்கம்போல், தினம் கொஞ்சம்.  

மதுரகவி
திருஅரங்கர் தத்தைவிடு தூது.

காப்பு

1.மாருதி துதி

சீர்மருவுந் தென்னரங்கர் சேவடிமேற் செந்தமிழால்
தார்மருவும் வாசிகையான் சாற்றுதற்கு – நீர்மருவும்
அஞ்சத்தான் எண்புயத்தான் ஆகத்தான் வந்தருளுங்
கஞ்சத்தார் மாருதிதாள் காப்பு.

சீர்மருவும் தென்அரங்கர் – சிறப்பு அமைந்த அழகிய அரங்கநாதப் பெருமாளின், சேவடிமேல் – சரணங்களில், செந்தமிழால் – செவ்விய தமிழ் மொழியால், தார் மருவும் –மலர்கள் பொருந்திய, வாசிகை – மாலை, யான் சாற்றுதற்கு – நான் உரைப்பதற்கு, நீர் மருவும் – நீரில் பொருந்திய, அஞ்சத்தான் – அன்னவாகனன் பிரமன், எண்புயத்தான் – சிவபெருமான், ஆகத்தான் – ஆகும்படிதானே, வந்து –தோன்றி, அருளும் – அனுக்கிரகிக்கும், கஞ்சத்தார் – தாமரை மலர்கள் பொருந்திய, மாருதி தாள் – அனுமன் திருவடிகள், காப்பு – சரணம்.

2. எதிராசர் துதி

செல்லியலுஞ் சோலை திருவரங்க நாதனுக்குச்
சொல்லியதோர் தத்தைவிடு தூதுக்கு – நல்அரணாம்
வாதூர் புறஇருட்கு மன்னுகதி ராகிவரும்
பூதூர் முனிஇருதாட் போது.

செல் இயலும் – மேகம் தவழும், சோலை – பொழில்களை உடைய, திருவரங்க நாதனுக்கு – ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு, சொல்லிய – கூறிய, ஓர் தத்தை விடு தூதுக்கு – ஒரு கிளி விடு தூது என்னும் சிற்றிலக்கியத்துக்கு, வாது ஊர் புற இருட்கும் – வாதம் தவழும் புறச்சமயமாம் இருளுக்கும், மன்னு – விளங்கும், கதிராகி, சூரியனாகி, வரும் – ஒளி செய்து வரும், பூதூர் முனி – எதிராசர், இருதாள்போது – இரு மலர்ச் சரணங்கள், நல் அரணாம் – நல்ல காப்பாகும்.

2 கருத்துகள்:

  1. நல்லதொரு நூல் அறிமுகம்... முகவரிக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மதுரகவி பிறந்து வாழ்ந்தது உங்களூரின் அருகாமையில் இருக்கும் கம்பம் அநுமந்தன்பட்டி ! அவர்கள் குடும்பத்துக்குச் சொந்தமான அநுமன் கோவிலை மதுரகவியின் பேரன் இப்போது கவனித்து வருகிறார். சுமார் 150 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மதுரகவி இயற்றிய லக்ஷக்கணக்கான கவிதைகளில் இப்போது கிடைப்பது சில ஆயிரங்களே! நாம் தமிழைப் பேணுகிற லக்ஷணம் இப்படி!

      நீக்கு