Sunday, April 15, 2012

வைத்தமாநிதி -25

குற்றம் ஒன்றும் இல்லாத கோபியருடன் விளையாட்டு

   தொடுவே செய்து இள ஆய்ச்சியர் கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் பிரான் முற்றிலும் தூதையும் முன்கைமேல் பூவையும்,
சிற்றில் இழைத்துத் திரிதருவோர்களை,
பற்றிப் பறித்துக் கொண்டு ஓடி, ஆடி அசைந்து,
மதுவை வார்குழலார் குரவை பிணைந்து குடம் ஆடி,
முற்றா இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம் விளைவித்து,
படஅரவு அல்குல் பாவை நல்லார் பயிற்றிய நாடகம் பயின்று,
மன்றுஆர குடம் கலந்து ஆடி,
கன்றப்பறை கறங்க கண்டவர்தம் கண்களிப்ப,
மன்றில் மரக்கால் கூத்து ஆடி,
வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில் விசித்திரப் படவீதி வாய்த்தெள்ளி இழைத்த கோலம் அழித்து,
சிற்றிலோடு சிந்தையும் சிதைத்து,
சுழலக் குடங்கள் தலைமீது எடுத்துக்கொண்டுஆடி,
இமில் ஏற்றுவன் கூன்கோட்டிடை உவந்து கூத்து ஆடினான்.
வல்லிசேர் நுண்இடை ஆய்ச்சியர் தம்மொடும் கொல்லைமை செய்து குரவை பிணைந்தான்
கார்ஆர் குழல் எடுத்துக்கட்டி, கதிர்முலையை வார்ஆரவீக்கி, மணிமேகலை திருத்தி,
ஆர்ஆர்அயில் வேல்கண் அஞ்சனத்தின் நீறு அணிந்து
சீர்ஆர் செழும் பந்து கொண்டு அடியா நிற்க
நீர்ஆர் கமலம்போல் செங்கண்மால் என்று ஒருவன்,
பாரோர்கள் எல்லாம் மகிழ, பறை கறங்க,
சீர்ஆர் குடம் இரண்டு ஏந்தி, நின்றார் முகப்புச் சிறிதும் நினையாது,
செழுந்தெருவே ஆர்ஆர் எனச்சொல்லி, ஆடும்.
அதுகண்டு,
ஏர்ஆர் இளமுலையார் அறிவு அழியும் காவிமலர் நெடுங்கண்ணார் கைதொழ வீதிவந்து,
ஆயர் மகளிர் கையில் பாவை பறித்து, உவந்தான்.
இன்று முற்றும் முதுகு நோவிருந்து,
வட்டவாய்ச் சிறுதூதையோடு சிறுசுளகும் மணலும்கொண்டு வளைக்கைகளால் சிரமப்பட்டு,
இட்டமா விளையாடுவோங்களைச் சிற்றில் ஈடழித்து,
தொட்டு உதைத்து நலிந்து,
வீதிவாய் விளையாடும் ஆயர்சிறுமியரை வாதித்தான் வசுதேவர் மகன்.
ஆற்றில் இருந்து விளையாடுவோங்களைச் சேற்றால் எறிந்து,
வளைதுகிற்கொண்டு,
காற்றிற் கடியனாய் ஓடி அகம்புக்கு மாற்றமும் தாரான்.
அஞ்சனவண்ணன் மஞ்சனம் ஆடி மனைகள்தோறும் திரிந்து,
பற்று மஞ்சள் பூசிப் பாவைமாரொடு பாடியிற் எங்கும் தீமை செய்து,
நன் மணிமேகலை நங்கைமாரொடு நாள்தொறும் பொன்மணி மேனி புழுதியாடி,
வண்ணக் கருங்குழல் மாதர் வந்து அலர் தூற்றிடப் பண்ணிப் பல செய்து,
அவ்வவ் இடம்புக்கு அவ்ஆயர் பெண்டிர்க்கு அணுக்கனாய்க் கொவ்வைக்கனிவாய்க் கொடுத்துக் கூழமை செய்து
“வல்ஆன் ஆயர் தலைவன்ஆய்”
வள்ளி நுடங்கு இடை மாதர் வந்து அலர் தூற்றிடத்துள்ளி விளையாடித் தோழரோடு திரிந்து உகந்தான்.

இனிதிரைத் திவலைமோத எறியும் தண்பொய்கை தன்னில்,
கோழி அழைப்பதன் முன்னம் குள்ளக் குளிரக் குடைந்து நீராடுவான் போந்த,
துளைஆர் கருமென்குழல் ஆயர் மடமக்களை,
பின்னே சென்று ஒளித்திருந்து,
அவர் கொய்ஆர் பூந்துகிலும் கோலச்சிற்றாடை பலவும் வாரிக் கொண்டிட்டு,
விண்தோய் பூங்குருந்து மரம் ஏறி,
மதுவின் துழாய் மாயன் இருப்ப
பங்கய நீர் குடைந்து ஆடுகின்ற அரவுஏர் இடையார்,
பரக்க விழித்து எங்கும் நோக்கி பட்டைக் காணாமே,
”கோமள ஆயர் கொழுந்தே, இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய், தொழுதோம் துகிலைப் பணித்தருளாயே! எல்லே! ஈது என்ன இளமை? குரக்கு அரசு ஆவது அறிந்தோம்; பொல்லாங்கு ஈது என்று கருதாய்; எம் அனைமார் காணில் ஒட்டார்; பல்லாரும் காணாமே போவோம், பட்டை பணித்தருளாயே! ஏழைமை ஆற்றவும் பட்டோம்; படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்தருளாயே!  நீரிலே நின்று அயர்க்கின்றோம்; நீதி அல்லாதன செய்தாய்! இனி என்றும் பொய்கைக்கு வாரோம்; தடத்து அவழ் தாமரைப் பொய்கைத் தாள்கள், கயலொடு வாளை எம் காலைக்கதுவ, விடத்தேள் எறிந்தாலே வேதனை ஆற்றவும் பட்டோம் ; சேமமேல் அன்று இது சால, சிக்கென நாம் இது சொன்னோம் இரக்கமேல் ஒன்றும் இலாதாய்! குருந்திடைக் கூறை பணியாய்; ஆர்வம் உனக்கே உடையோம், முற்று இலாத பிள்ளைகளோம், முலைபோந்திலாதோமை ஈடழித்து என்பயன் கண்டாய்! போரவிடாய் எங்கள் பட்டை”
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தருளாயே! என்று இரப்ப
”மங்கை நல்லீர் வந்து கொள்மின்” என்ன,
பிறகு துடியிடையார் கரிகுழல் பிழிந்து உதறித் துகில் உடுத்து ஏறினர்.

      “ வடக்கில் அகம்புக்கு இருந்து ஒரு கன்னியை வேற்றுருவம் செய்துவைத்து,
கரும்பர் மென்குழற் கன்னி ஒருத்திக்கு ஆழ்வலை வைத்துத் திரியும் அரம்பன்,
தொத்தார் பூங்குழற் கன்னி ஒருத்தியைச் சோலைத்தடம் கொண்டுபுக்கு முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை மூவேழு சென்றபின் வந்தான்.
தாய்மார் மோர் விற்கப் போவர்;
தமப்பன்மார்கற்றாநிரைப் பின்பு போவர்
நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை நேர்படவே கொண்டுபோதி”
என்று ஆயர்மங்கை ஊடி உரைத்தாள்.
”காதில் கடிப்பு இட்டு, கலிங்கம் உடுத்து தாது நல்லதண் அமர் துழாய்கொடு அணிந்து போதுமறுத்து, புறமே வந்து நின்றான்.
ஏதுக்கு, இது என், இது என்னோ!
துவர் ஆடை உடுத்து, ஒரு செண்டு சிலுப்பி, கவர் ஆக முடித்து,
கலிக்கச்சுக்கட்டி, சுவர்ஆர் கதவின் புறமே வந்து நின்றான்.
மருளைக்கொடு பாடிவந்து இல்லம் புகுந்து இருளத்து,
சுற்றும் குழல்தாழ சுரிகை அணைத்து,
மற்றும் பல மாமணி, பொன்கொடு அணிந்து,
கூன்ஆயது ஓர் கொற்றவில் ஒன்று கையேந்தி,
ஆன் ஆயரும் ஆநிரையும் அங்கு ஒழிய
போனார் இருந்தாரையும் பார்த்து முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றான்.
கருமலர்க்கூந்தல் ஒருத்தி தன்னைக் கடைக்கணித்து,
ஆங்கே ஒருத்தி தன்பால் மருவி மனம் வைத்து, மற்றொருத்திக்கு உரைத்து,
ஒரு பேதைக்குப் பொய்குறித்து புரிகுழல் மங்கை ஒருத்தி தன்னை புணர்தி,
அவளுக்கும் மெய்யன் இல்லை.
உன் வளர்த்தியூடே வளர்கின்றதால் உன்தன் மாயை!
ஆய்மிகு காதலோடு யான் இருப்ப, யான் விடவந்த என் தூதியோடே
நீ மிகு போகத்தை நன்கு உகந்தாய் அதுவும் உன் கோரம்புக்கு ஏற்கும் அன்றே”  என்று இள ஆய்ச்சிமார்கள்,  அல்லிக்கமலக் கண்ணனை,
எல்லிப்பொழுதினில் ஏலத்து ஊடி எள்கி உரைத்தனர்.