புதன், 7 மார்ச், 2012

வைத்தமாநிதி 12

கோகுலத்தில் மங்கள விழா!

சீதக்கடலுள் அமுது அன்ன தேவகி, கோதைக்குழலாள்,
அசோதைக்குப் போத்தந்த பேதைக்குழவி,
கண்ணன், கேசவன், நம்பி, திருவோணத்தன்
பிறந்தினில் முற்றம் கலந்து அளறு ஆக,
எண்ணெய் சுண்ணம் எதிர்எதிர் தூவிட,
ஓடுவார் விழுவார் உகந்து ஆலிப்பார், நாடுவார்;
உறியை முற்றத்து உருட்டி
பல்பறை கொட்டநின்று ஆடுவார் ஆயரே;
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
அண்டர் மிண்டி புகுந்து நெய்யாடினார்;
செறிமென் கூந்தல் அவிழத்திளைத்து
எங்கும் அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே;
பத்து நாளும் கடந்த இரண்டாம் நாள்
எத்திசையும் சயமரம் கோடித்து
உத்தானம் செய்து உகந்தனர்;
கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர் பைய ஆட்டிப்
பசுஞ்சிறு மஞ்சளால் ஐயநாவழித்த
மைத்தடங்கண்ணி அங்காந்திட
வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே!
வாயுள் வையகம் கண்ட மடநல்லாரும்
ஆயர்புத்திரன் அல்லன் அருந்தெய்வம் என்று மகிழ்ந்தனர்.
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை உறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்,
மிடுக்கு இலாமையால் மெலிந்தாள்
வார்மலிகொங்கை யசோதை;
பணைத்தோள் இள ஆய்ச்சிபால் பயந்த
கொங்கை அணைத்து, ஆர உண்டு,
வந்த மழலைக்குழாத்தை வலி செய்து,
அன்னநடை மடவாள் அசோதை
தாம்பால் ஓச்ச பயத்தால் தவழ்ந்து, அழுது, ஏங்கி,
தந்தக் களிறுபோல் தாயர்மகிழத்தானே விளையாடி,
கொண்டு வளர்க்க குழவியாய்த்தான்
வளர்ந்தான் கோபாலக் கோளரி.

பூதனை மோட்சம்

தீமனத்தான் கஞ்சன் கறுக்கொண்டு மாய்த்தல் எண்ணி
நின்மேல் கருநிறச்செம்மயிர்ப் பேயை வஞ்சிப்பதற்கு விடுக்க
கஞ்சனது வஞ்சனையால் திரியும்
கலை உடுத்த அகல்அல்குல் வன்பேய் மகள் அழக்கொடி,
யாயும் பிறரும் அறியாத யாமத்து வஞ்சனை செய்ய,
பொற்றொடித் தோள் மடமகள் தன்வடிவு கொண்டுவந்த
பொல்லாத வன்மாய வலவைப் பெண் பூதனை
பெற்று எடுத்த தாய்போல் ஒக்கலை வைத்து
“செக்கர் இளம்பிறைதன்னை வாங்கி நின்கையில் தருவன்!
கோவலக்குட்டா! ஒக்கலைமேல் இருந்து அம்மம் உவந்து
அகம்குளிர இனிது உண்ண வாராய்”
என்று தன் மகன்ஆய்,
வன்பேய்ச்சிதான் முலை உண்ணக் கொடுக்க,
தூயகுழவிஆய், இடைக்கு இருந்து,
ஒளிநிறம்கொள் கொங்கை வாங்கி,
நஞ்சுதோய் கொங்கைமேல் அம்கை வாய்வைத்து,
விடநஞ்ச முலை சுவைத்து,
விடப்பால் அமுதா அமுது செய்து,

வெந்தழல்போல் கூந்தல் வஞ்சப் பகுவாய்க்கழுதுக்கு இரங்காது,
வன்மகன்ஆய் அவள் நாளை உண்டு ஆவி வாங்கி,
தாய் உருவாகி பெண்மைமிகு வடிவுகொடு வந்தவளைப்
பெரிய பேயினது உருவுகொடு மாள, கண் சோர,
வெம்குருதி வந்து இழிய, அலறி மண் சேர
செக்கம்செக அன்று அவள்பால் உயிர்செக முனிந்து
உண்டிட்டு உறங்குவான் போல் கிடந்தான்
கருமாமுகில்வண்ணன் கண்ணன்;
பேய்ச்சி முலை உண்ணக்கண்டு பின்னையும் நில்லாது,
நெஞ்சம் அஞ்சாதே, ஆய்ச்சியர் எல்லாரும் கூடி அழைக்கவும்
அசோதை முலை தந்தாள்.
இந்நீர்மைக்கு அன்று வரன்முறையால்
நீ அளந்த மாகடல்சூழ் ஞாலம்
பெருமுறையால் எய்துமோ பேர்த்து.


1 கருத்து: