Friday, September 30, 2011

புல்லணையில் அமர்ந்த புருஷோத்தமா!

ஏற்கனவே பலமுறை இங்கு குறிப்பிட்டதுபோல, திருப்புல்லாணி போன்று சிறு கிராமங்களில் வாழ்வதிலே பல பாக்யங்கள் உண்டு. அதிலும் திருப்புல்லாணியோ,  பெருமாளின் திருவடி என்று வர்ணிக்கப் படுவது. அதனாலேயே அங்கு வாழ்பவர்களுக்கு பல விதமான பாக்யங்களைப் பெருமாள் அருள்கிறார்.

பெரு நகரங்களில் வாழ்வதில் பல சௌகர்யங்கள் உண்டுதான். ஆனால், அங்கெல்லாம், யதிகளையோ, மஹான்களையோ, பற்பல துறை வல்லுநர்களையோ தேடிச் சென்று சந்திக்க வேண்டும். அவர்கள் இருப்பது தெரிய வேண்டும். அவர்களைச் சந்திக்க நேரம் கிடைக்க வேண்டும் இத்யாதி இத்யாதி எத்தனையோ பிரச்சினைகள். ஆனால், திருப்புல்லாணியில் அதெல்லாம் கிடையாது. ஸ்ரீ ஆதி ஸேது மஹிமையால், ஆசார்ய சிரேஷ்டர்கள், வேத விற்பன்னர்கள், ஆசார சீலர்கள், நாடு அறிந்த பெரும் புகழாளர்கள் என்று எத்தனையோ பேர் இங்கு எங்களைத் தேடி வந்து எங்களை ஆசீர்வதித்து, மகிழ்வித்துச் செல்லும் பெரும் வாய்ப்பு எங்களுக்கு உண்டு. ஊரோ உள்ளங்கை அகலமே அதனால் யாருக்கும் தெரியாமல் இங்கு வந்து செல்லவும் முடியாது.

(கதை வேண்டாம் விஷயத்துக்கு வா! தலைப்புக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ? தமிழ் சினிமா மாதிரி இருக்கிறது என்று நங்கநல்லூரில் ஒருவர் பல்லைக் கடிக்கும் சப்தம் கேட்கிறது)

இப்படி இங்கு இன்று வந்தவர் இன்னொரு 74 வயது மூதாட்டி. தற்சமயம் மதுரையில் வாழ்ந்தாலும், எங்களூர் தான். திருப்புல்லாணியில் மிகச் சமீபத்தில் கொடி கட்டிப் பறந்த என்று சொல்வார்களே அப்படி வாழ்ந்த ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் நாட்டுப் பெண்.  இந்த ராஜகோபாலாச்சாரியார்தான் 42ம் பட்டம் அழகியசிங்கர் காலத்திலே, அன்று சிறு சந்நிதியாக இருந்த ஸ்ரீ அஹோபில மடத்தை புனருத்தாரணம் செய்து பெரும் மண்டபமாகக் கட்டி வைத்தவர். அன்று மடத்துக்கு அழகிய சுதை கோபுரமும் இருந்தது. (அதை இப்போது வசதிப்படுத்துகிறேன் என்று இடித்து விட்டது ஒரு வருத்தமான சேதி) பங்குனி ப்ரும்மோத்ஸவத்தில் அவர் நடத்திய ததீயாராதனம் பிரமிக்கத் தக்கது. அதைக் காட்டிலும், அருளிச் செயல், வேத பாராயண கோஷ்டிகளைப் பெரிய அளவில் வரவழைத்து பெருமாளை மகிழ்வித்தவர் அவர். காஷ்மீர் ராஜா முதல் அந்த நாளில் இருந்த பெரிய மனிதர்கள் வீட்டுக் கதவுகள் அவருக்காக என்றும் திறந்திருக்கும். அப்படி வாழ்ந்தவர்.  சமீபத்தில் இங்கு வந்திருந்த TVS ஸ்ரீ வேணு ஸ்ரீநிவாசன், தங்கள் மாளிகைக்கு அவர் வந்து சென்ற அனுபவங்களைப் பரவசத்துடன் பகிர்ந்து கொண்டார். அப்படி வாழ்ந்தவர்.

இந்த மூதாட்டியைப் பெற்றவரோ திருவெண்ணைநல்லூர் அருகிலுள்ள ஏமப்பூர் கோசகாச்சார் ஸ்வாமி. இங்கு ஸ்ரீ அஹோபில மடத்தில் வெகு காலம் முத்ராதிகாரியாகச் சிறப்பாகப் பணியாற்றியவர்.

வெகு சிறப்பாக இந்த ஊரில் வாழ்ந்தாலும், பல வேறு காரணங்களால் இப்போது மதுரையில் வாழ்கின்ற இந்த ஸ்ரீமதி கமலா --- எங்களுக்கெல்லாம் பேபி மன்னி –  மதுரை டிவிஎஸ் நகர் அதிமுக கவுன்ஸிலர் ராஜா ஸ்ரீநிவாசனின்  தாயார். இன்று இங்கு வந்திருந்தார்.

அவரே பாட்டும் எழுதுவார். இனிமையாகப் பாடவும் செய்வார். ஓரிரு மணி நேரமே இருக்க முடிந்த நிலையில் வந்த அவரை வழக்கம் போல் வற்புறுத்தி பாடச் சொன்னேன். அவர் பாடிய பாடல்  “புல்லாணியில் அமர்ந்த புருஷோத்தமா” இங்கே!