ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

சங்குச் சக்கரச் சாமி வந்து

இந்தப் பதிவு பெரியவர்களுக்கு – ஆனால் அவர்களுக்காக மட்டுமில்லாமல் அவர்கள் வீட்டுக் குழந்தைகளை குஷிப் படுத்துவதற்காக அதே சமயத்தில் அவர்களுக்குப் பெருமாளைப் பற்றியும் சொல்வதற்காகவும் பயன்படலாம் என்ற நோக்கில் எழுதுகின்ற பதிவு.

இரா.ராகவய்யங்கார் --- இவரைப் பற்றி அறியாத தமிழ் மக்கள் இருக்கவே முடியாது. எங்கள் சேது மண்ணிற்கு  உள்ள பல பெருமைகளில் மிகப் பெரும் பெருமை இவர் இந்த மண்ணில் வாழ்ந்தார், மூன்று சேதுபதிகளின் அவையிலே ஆஸ்தானப் புலவராய் புகழுடன் வாழ்ந்தார் என்பது.  அரிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகள், பல பல தலைப்புகளிலே அருமையான நூல்கள், அந்தாதிகள் பல என்று இப்படிப் புலவர் பெரு மக்களுக்காகவும், தமிழ் அறிஞர்களுக்காகவும்  பல எழுதிய அவர், தன்னுடைய பேரனுக்காகவே எழுதிய ஒரு சிறு பாடல் அன்றைய இராமநாதபுரம் அக்ரஹாரத்திலே பிரபலம். அந்தப் பேரன் திரு டாக்டர் விஜயராகவன், மும்பை அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தில் முக்கிய பொறுப்பு வகித்து ஓய்வு பெற்று இப்போது சமீபத்தில் தன்னுடைய சதாபிஷேகத்தைக் கொண்டாடவிருக்கிறார். தாத்தாவிடமிருந்தும், அதன்பின் பெரும் தமிழறிஞராக விளங்கிய தன் தந்தை ஸ்ரீ ராமாநுஜம் அய்யங்காரிடமிருந்தும் கற்று, தானும் ஒரு நல்ல தமிழறிஞராக விளங்குபவர். இவர்களுக்கு அடியேன் உறவினன் என்பது ம், ஸ்ரீ ராமாநுஜம் அய்யங்காரின் மாணவர்களில் அடியேனும் ஒருவன் என்பதும் அடியேனுக்கு ஒரு பெருமை. தாத்தா தனக்காவே எழுதிய பாடலுக்காக, டாக்டர் ஸ்ரீ விஜயராகவன் காலில் கொலுசு கட்டி ஆடிய அந்தப் பாடல், நம் எல்லோர் வீட்டுக் குழந்தைகளுக்காகவும் இங்கே.

சங்குச் சக்கரச் சாமி வந்து
சிங்கு சிங்கென ஆடுமாம் – அது
சிங்கு சிங்கென ஆடுமாம்!

உலகம் மூன்றும் அளக்குமாம் – அது
ஓங்கி வானம் பிளக்குமாம்!
கலகல எனச் சிரிக்குமாம் – அது
காணக் காண இனிக்குமாம்!

கொட்டுக் கொட்டச் சொல்லுமாம் – அது
கூத்தும் ஆடப் பண்ணுமாம்!
எட்டு எழுத்துச் சொன்ன பேர்க்கு
எந்த வரமும் அளிக்குமாம்!

யாரும் காண அரியதாம் – அது
யாரும் காண எளியதாம்!
பேரும் ஊரும் உள்ளதாம் – அது
பெரிய பெருமை கொண்டதாம்!

ஆதிமூலம் என்று சொன்ன
யானை முன்பு வந்ததாம்!
ஜோதி ரூபம் ஆனதாம் – அது
தூய வீடு தருவதாம்  (சங்குச் …. )

என்ன எளிமையான வார்த்தைகளில் எம்பெருமானின் பெருமைகளையெல்லாம் குழந்தைகளையும் பாடி ஆட வைத்திருக்கிறார்! 

3 கருத்துகள்:

  1. Dear Swamin,

    My attimber the late Sri Kanaiyazhi Kasturirangan used to sing this song for my youngest sister first when she was five years old, then to his own 3 three children. Uptill now I only remembered the firstverse. So I am delighted to have the whole song and I am encouranging my brothers and sisters, nieces and nephews to learn the whole song so they all can remember to sing it for their grandchildren.

    I am very grateful to you for this excellent kainkaryam.

    Nalini

    பதிலளிநீக்கு
  2. Nostalgic memories.. My grandma used to sing this

    பதிலளிநீக்கு
  3. I just knew the first two lines. Not sure how I knew them. I almost sing this song with all the kids in my house, taking them up my shoulder and dancing. All I knew was that it was Perumal who is the subject of the song. Now I got it. The full verse. Thanks for Sharing!!

    பதிலளிநீக்கு