சனி, 29 ஜனவரி, 2011

வைணவ ஆசாரியர்கள்

 

10. அத்திகிரியில் இளையாழ்வாரைக் கண்டமை.

வைப்பென நாதமுனி வணங்குமுரு தன்னை
ஒப்பரும் பத்தியெழ வொன்றமனத் துய்த்துச்
செப்பருஞ் செல்வனிலஞ் செழிக்கவருங் காலம்
தப்பில தணித்தெனவே தேறிமுனி வாழ்ந்தான்.               .92.

இந்த அவதார புருடனைக் காணும் காலம் அணித்துள்ளது என மகிழ்ந்தார் யமுனைத் துறைவர். செல்வன்+நிலம் = செல்வனிலம். வைப்பு – பொருள்,நிதி.

கச்சியி னின்றிருவர் கலைவலவர் வந்தார்
அச்சுத னரங்கனடி வாழ்த்தியடி யார்கள்
மெச்சிடு மேதையனை முனிவரனை மேவி,
”இச்சகஞ் செய்ததவ மென்னவொரு செல்வன்,                  .93.

கொந்தலர் பொழில்தழுவு பூதபுரி தன்னில்
வந்தவன் புகரவிழும் வதனனிருங் கண்ணான்
சந்தமுறச் சானுவரை நாடுகரன் சான்றோர்
சிந்தையிற் சேருமவன் நாமனிளை யாழ்வார்,                      .94.

விதியனை மேதையினன் விரிகலைகள் வல்லான்
மதியுடை யாதவனின் சீடனவன் சீற்றப்
பொதியினி னுணங்கிவரு புனிதனிளஞ் சீயம்
வதிகுநன் வரதனவன் முன்னிலையி” லென்றார்.                  .95.

திருக்கச்சியினின்றும் வந்த பெரியோர் இருவர் இளையாழ்வாரைப் பற்றி யமுனைத்துறைவரிடம் கூறியது. இராமாநுசருக்கு இயற்பெயர் இளையாழ்வார்; இவரே நம்மாழ்வார் நாதமுனிகளுக்குக் காட்டிய அவதார புருடன். கொந்து அலர் பொழில் – பூங்கொத்துக்கள் மலர்கின்ற பொழில்கள். பூதபுரி – ஸ்ரீபெரும்பூதூர். இராமாநுசன் அவதரித்த தலம். புகர் அவிழும் வதனன் – சோதி பிறங்குகின்ற முகம் வாய்ந்தவன். இருங்கண்ணான் – அகன்ற கண்களையுடையவன். சந்தம் உற – அழகு பொருந்த. சானு – முழங்கால். சானுவரை நாடு கரன் – கரங்கள் முழந்தாள் வரையில் நீண்டுள்ளவன். விதி அனை – பிரமனைப் போன்று. யாதவன் – யாதவப்ரகாசன். அவன் சீற்றப் பொதியினில் நுணங்கிவரும் – யாதவப்ரகாசனின் சினமாகிய பெரும் பாரத்தால் துவளும். வரதன் அவன் முன் நிலையில் வதிகுநன் – வரதராசனது சந்நிதியில் வசிப்பவன்.

மூப்பினி லெய்த்துவரும் முனிவனிது கேட்டான்,
”ஆப்புறு மக்களினங் காக்கவரு மன்பன்
மீப்பெரு மேதையினன் இன்னவனே” என்றே
கோப்புடை யத்திகிரி நாடிவர தன்றாள்,                                   .96.

இளையாழ்வாரைக் காண ஆளவந்தார் அத்திகிரி சேர்ந்தமை. ஆப்பு உறும் – சமுசாரபந்த வாழ்க்கையால் வருந்தும். கோப்பு உடை அத்திகிரி – சீர் நிரம்பிய அத்திகிரி. நாடி, வரதன் தாள் எனப் பிரிக்க.

தோய்ந்தனன் கோயிறனிற் சீடர்புடை சூழ
ஆய்ந்தவ னியாதவனு மச்சுதனை யேத்தப்
போந்திடக் கண்டனனக் குழுவுதனிற் புகரே
பாய்ந்திட நின்றதனி விபுதனுரு பார்த்து,                                  .97.

ஆங்குக் கோயிலிலே இளையாழ்வாரை ஆளவந்தார் கண்டமை. யாதவப்ரகாசன் தன் சீடருடன் வரதனை வணங்க வந்தபோழ்து, அந்தக் கூட்டத்தில் ஆளவந்தார் இளையாழ்வாரைக் கண்டார்.

“மாதவன் நாதமுனி மாழையென நல்கு
மேதகு சோதியுரு தன்னுடனே வேய்ந்த
கோதறு மேனியெழில் கொண்டவிவ னாவன்
ஆதவன் கலியிருளுக் காகவரு மன்பன்,”                                 .98.

“கலியிருளைக் கெடுக்கும் ஆதவன் இவனேயாம்” என யாமுனர் ஓர்ந்தமை. மா தவன் – சிறந்த தவத்தினன். மாதவன்………..மேனி எழில் --- நாதமுனிகள் தம்மிடம் செல்வமெனச் சேர்ப்பித்த திருவுருவத்தின் எழிலொடு இசைந்த எழில். மாழை – பொன்.

எனவுளங் கொண்டிவனை யிணைவிழியி னோக்கி,
”மனநல மண்ணவருண் முன்னவனே யாவை”
எனவருள் செய்துவர தன்கழலை யேத்தி,
”இனனென நமதுதரி சனமிவனை யேற்க,                              .99.

ஆளவந்தார் இளையாழ்வாரைக் குளிர நோக்கி, “ மண்ணவருள் நீ முதல்வனாவாய்” என வாழ்த்தி, வரதனிடம் வேண்டிக் கொண்டது. மண்ணவருள் மன நல முன்னவனே ஆவை -------. என அருள் செய்து, வரதன் கழலை ஏத்தி எனப் பிரிக்க. இனன் – அரசன், சூரியன். நமது தரிசனம் இவனை இனன் என ஏற்க, அருள் பெய்திடுக என்று, வரும் பாவுடன் இயைக்க.

“பேரருள் வரத!அருள் பெய்திடுக” வென்று
வாரம தோங்கியெழ வணக்கமுட னோதி
ஆரிய னியாமுனனவ் வரங்கநகர் தன்னில்
ஆரமு தாந்தமிழின் மறைபரவ வாழ்ந்தான்.                            .100.

ஆளவந்தார் திருவரங்கத்திற்கு மீண்டு தமிழ் மறையின் பொருள்களைச் சீடருக்கு ஓதி வந்தார்.

அரியதாந் தரிசன மடர்ந்து தழைத்தற்
குரியனா மாரியன் இளையாழ் வார்தனை
விரவிடப் பெற்றிடும் விரகை யாய்ந்தனன்
பரிவுடை மனத்தினன் பண்ண வன்முனி.                                .101.

இளையாழ்வாரைப் பெறும் விதம் யாதென ஆளவந்தார் ஆய்ந்து வந்தார். விரகு – உபாயம்.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக