Saturday, January 22, 2011

வைணவ ஆசாரியர்கள்

9.துறவு.

மூவகையாம் பகையறுத்து முக்குணத்து
       ளிரண்டகற்றி யொன்றி லூன்றி
மாவருசீ ரகலத்தான் மாலோன்றன்
       தனந்தன்னைத் தன்பா லீர்த்த
மீவரிய விசயத்தான் வேய்வருமுக்
       கோலோடுந் துவர தேற்றுப்
பாவலர்தங் கோவாகிப் பாட்டன்றன்
       ஆணையதே பரவ வாழ்ந்தான்.                                 .82.

ஆளவந்தார் துறவேற்று நாதமுனியின் ஆணையைப் பரப்பி வந்தமை. மூவகை ஆம் பகை – உயர்குலப் பிறப்பு, மிகுந்த செல்வமுடைமை, கல்வியுடைமை இவை மூன்றும் மக்களுக்கு அகங்காரத்தை விளைவிப்பதால் பகை எனப்படுவன. முக்குணத்து இரண்டு அகற்றி – சத்துவம், ரஜஸ், தமஸ் என்பனவற்றுள் பின்னிரண்டை நீக்கி. ஒன்றினில் ஊன்றி – சத்துவத்தில் பொருந்தி. மா வரு சீர் …… மாலோன் – பிராட்டி பொருந்துவதால் பெருமையுற்ற மார்பினனாகிய திருமால். மீ அரிய விசயத்தான் – மிகவும் அரிதான வெற்றியுடையவன். வேய்வரு முக்கோல் --- மூங்கிலாலாகிய முக்கோல். துவர் – துவராடை.

நிறைமதியின் நிலவெனவே நரையுற்ற
        நின்மலனாம் மணக்கால் நம்பி
குறையறவே குலையவென நாதமுனி
        தன்கனவிற் கூறக் கேட்டுக்
கறையறவே கலியிதனைக் கடியவென
        வருவான்றன் கவினார் மூர்த்தி
செறிகதிரன் முனிவனிடஞ் சேர்த்”தமல!
         செல்வமென வுந்தை முந்தை,                                         .83.

நாதமுனி நம்மாழ்வாரிடம் பெற்ற திருவுருவை மணக்கால் நம்பி ஆளவந்தாரிடம் சேர்த்தமை. குறை அறவே குலைய என நாதமுனி தன் கனவில் கூறக் கேட்டு. நாதமுனி தம் மனத்திலுள்ள குறையை ஓதி, இது நீங்குமாறு இத்திருவுருவை ஆளவந்தாரிடம் சேர்க்குமாறு கனவில் பகர, இதுகேட்டு, கறை அறவே ------- கலியின் கொடுமை, விடம் நீங்குமாறு. கவின் ஆர் மூர்த்தி – அழகு நிரம்பிய திருவுரு. செறிகதிரன் --- ஒளி வாய்ந்த திருமேனியுடைய மணக்கால் நம்பி.

“சடகோப னருள்பெய்யத் தான்பெற்ற
        தமிழோடுங் கலியிற் பொங்கும்
அடமோய வவதரிப்பா னொருவன்றன்
         னணியுருவங் கொண்டா னிஃதே
திடமாக நீயிந்தச் சீரியனைக்
         காணும்பே றுடையை யென்றான்
இடவாகு மிதுவுன்றன் னுள்ளத்து
         ளுண்மையிது தேர்வா” யென்றான்.                                  .84.

நம்பி பகர்ந்தது: கலி கெடுமாறு தோன்றும் புருடனை நீ நேரிற் காணும் பேறு வாய்ந்துளை. சீரியன் – சிறந்தவன். இது தன்னை உன் உள்ளத்து இட ஆகும். இதனை நீ உள்ளத்தில் கொள்வாய். இது உண்மை தேர்வாய் -------.

மறைக்கடலை மாறன்றன் நாவாகும்
        மந்தரத்தால் திரித்துப் பெய்த
பெறற்கரிய வானமுதா மாயிரத்தின்
         வளனெல்லாம் மணக்கால் நம்பி
மறைக்கடல்யா முனமுனிக்குத் தானோதி
         வலன்நாத முனிவன் றன்னால்
முறைப்படுநற் றரிசனத்தைக் காக்கவெனத்
        தானோதி முத்த னானான்.                                                       .85.

மணக்கால் நம்பிஆளவந்தாருக்குத் திருவாய்மொழியின் பொருளை ஓதி, நாதமுனியால் உருவாக்கப் பெற்ற அறநெறியைப் பாதுகாக்க ஆசையிட்டு விண்ணெய்தினார். மறைக்கடலை மாறன், தன் நா ஆகும் மந்தரத்தால் திரித்துப் பெய்த --- மறையாகிய ஆழ்கடலை மாறன் தன்னுடைய நாவாகிய மந்தரத்தாற் கடைந்து, குவாலாக வெளியிட்ட. வான் அமுது ஆம் ஆயிரத்தின் --- சிறந்த அமுதமாகிய ஆயிரம் பாக்களின் . வலன் – வல்லவன். முத்தன் ஆனான் --- மண்ணினை நீத்து விண் சென்றான்.

மாதவன்கட் பத்தியெனும் வளநாட்டின்
        தனிமன்னாம் முனிவன் றன்பால்
போதமுறு மேலவர்கள் பெரியதிரு
        மலைநம்பி பெரிய நம்பி
மீதகவின் திருக்கோட்டி யூர்நம்பி
        திருக்கச்சி நம்பி மேலான்
தீதறவே வந்துதித்த தெருள்மாற
        னேர்நம்பி யன்றிச் செல்வ,                                                    .86.

குரவரனாந் திருமலை யாண்டானும்
         மன்தெய்வ வாரி யாண்டான்
உரவரவர் புகழ்வான மாமலையாண்
        டானன்றிச் சீய னாண்டான்
விரதியர்தங் கோனீச னாண்டானும்
         விறல்வளவ னனைய பல்லோர்
வரமுடைய மதியுடையார் வணக்குடனே
          சீடரெனச் சார்ந்தார் தாமே.                                                .87.

மாதவன் …..மன்  -- மாதவனிடம் பக்தி எனப்படும் தனி நாட்டிற்கு இறைவன், அஃதாவது பக்தர்களுள் முதல்வன். போதம் – அறிவு. சீடர்கள் – பெரிய திருமலை நம்பி, பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருக்கச்சி நம்பி, மாறனேர் நம்பி, திருமலையாண்டான், தெய்வ வாரியாண்டான், வானமாமலையாண்டான், சீயனாண்டான், ஈசனாண்டான், சோழ மன்னன் மற்றும் பலர். மன் தெய்வ வாரியாண்டான் --- சிறந்தவனாகிய தெய்வ வாரியாண்டான். உரவர் அவர் புகழ் வானமாமலையாண்டான் ---, உரவர் – அறிவுடையோர். விரதியர் – தவமுடையவர்.

நாதமுனி தானருளப் பெற்றவொரு
         யோகத்தில் நட்ட சீரான்
மாதவனாங் குருகைக்கா வலப்பன்பால்
        யாமுனனு முயோகு கொள்ள
ஆதரத்தி லணுகியிட வன்னவனும்
         முறியொன்றில் தன்னா ளோயும்
போததனைக் குறித்தவணே போதவென
       இயம்பினனாற் பரிவ தோங்க.                                                   .88.

நாதமுனியிடம் யோகத்தைப் பயின்ற குருகைக்காவலப்பன்பால் யோகம் பயில யாமுனர் செல்ல, அவர் ஒரு நாளை முறி ஒன்றிற் குறித்து அன்று தம்மைக் காணுமாறு கூறினார். சீரான் – யோகச் செல்வமுடையவன். மாதவன் – அரிய தவத்திலுற்றவன். போது அதனை – காலத்தை. அவணே – அவ்விடத்திற்கே.

திருவனந்த புரத்துறையுந் திருமாலைத்
              தொழவெனவே நடந்த பத்தித்
திருவனந்த நகர்தன்னில் தாதருடன்
             தொழுதிருப்பக் காவ லப்பன்
தருமனந்த நாளதனைக் குறித்தமுறி
         தனைநினைந்து பார்த்த யர்வே
தருமனந்த கைத்திடவே யாமுனனும்,
         “அந்நாளு மின்றே” என்றான்.                                                     .89.

யாமுனர் திருவனந்தபுரம் சென்று, அங்கு ஒரு நாள் அந்த ஓலையைப் பார்க்கக் குருகைக் காவலப்பன் குறித்த நாள் அதுவாக உணர்ந்து வருந்தினார். பத்தி திருவன் – பக்தியாகிய செல்வத்தை உடைய யாமுனர். அந்த நகர் தன்னில் --- காவலப்பன் தருமன் அந்த நாளைக் குறித்த முறிதனை என்றியைக்க. அயர்வே தரு மனம் தகைத்திடவே --- வருத்தத்தைத் தரும் எண்ணம் இவரை வாட்ட.

“கெட்டேன்நா னணித்திலனே கிளரொளியான்
          அவனென்பாற் பெய்யு மருளுக்
கெட்டேன்நா னவனன்றி யுளராரார்
          உயோகிதனை யோர்வா ரனத்தப்
பட்டேன்நான் பிதாமகனார் திருவுளமுங்
           கலங்கிடுமே படியின் பாலன்
பட்டேன்நான் பாருய்ய இதுதானும்
          பரப்பிடுவாய்ப் பற்றே” னென்றான்.                                           .90.

யாமுனர் வருந்திக் கூறியது. நான் அணித்திலன் – குருகைக்காவலப்பன் அருகில் இல்லையே. அவன் என்பால் பெய்யும் அருளுக்கு எட்டேன் -----. அவன் அன்றி உயோகு இதனை ஓர்வார் ஆர்--------. அனத்தப் பட்டேன் – அனர்த்தமுற்றேன். படியின்பால் அன்பு அட்டேன் --- பாரோர் உய்யவென நான் யோகம் பயில விரும்பினேன். இது கூடாததால் இந்த விருப்பம் குலைந்தது. பார் உய்ய இதுதானும் பரப்பிடு வாய்ப்பு அற்றேன். படியின்பால் அன்பு அட்டேன் -------.

மெலிவெழச் சீட ரோடும் மீண்டன னரங்க மையன்
கலியிறத் தோன்று மேலோன் றன்னையே காணு மாசை
மலிவுறு மனத்த னாகி மாறனி னருணி னைந்து
பொலிக வென் றோது பாக்கள் தம்பொருட் புந்தி யுய்த்தான்.           .91.

யாமுனர் திருவரங்கத்திற்கு மீண்டு, கலிகெடத் தோன்றும் புருடனைக் காணும் ஆசையுடையவராய், இப்புருடனைப் பற்றி தம்மாழ்வார் “பொலிக” என்றருளிய பாக்களைச் சிந்தனை செய்து வந்தார். அருள் + நினைந்து = அருணினைந்து.