அடியேனைத் தொடர்பவர்கள் பலருக்குத் தெரியும், திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கத்துக்கும், அதன் தலைவராக விளங்கிய ப.ரெ.திருமலை அய்யங்கார் ஸ்வாமிக்கும் அடியேன் பரம ரஸிகன் என்று. அச் சங்கம் வெளியிட்ட பல நூல்களை இங்கு பகிர்ந்து மகிழ்வதும் எல்லாரும் அறிந்த ஒன்றே. அவ்வகையில் ஏற்கனவே இட்ட “திருவடிமாலை” ஸ்வாமி தேசிகனின் புகழ் சாற்றியது என்றால், இந்த முறை சென்னைக்குச் சென்ற விடத்தில், {கடுமையான கால்வலி உட்கார்ந்திருந்தால் தாங்க முடியாத அளவு இருந்தது, நடந்து கொண்டிருந்தால் சமாளிக்க முடிந்ததாக இருந்த காரணத்தால், வலியை மறக்க சென்னை வீதிகளில் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தபோது}வழக்கம்போல் ஒரு நடையோரக்கடை ஒன்றில் இருந்த பழைய புத்தகக் குவியலிலிருந்து அடியேனுக்குக் கிடைத்தது “திருத்தாள் மாலை”. இதுவும் திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கத்தின் வெளியீடுதான். 88வது வெளியீடாக 7-7-1955 அன்று வெளியிடப்பட்டுள்ளது. 15 செய்யுள்களாக பிள்ளைப்பாக்கம் இளையவல்லி லக்ஷ்மீ நரசிம்மாச்சாரியார் இயற்றியுள்ள இச்சிறு நூல் அளவில்தான் சிறியதே ஒழிய அர்த்த விசேஷங்களாலே அற்புதமாயமைந்திருக்கிறது. அது இன்று முதல் இங்கு தொடரும்.
இனி, “திருத்தாள் மாலை”
ஸ்ரீ:
முகவுரை.
உயர்வற வுயர்நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறு மமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழு என்மனனே!
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறு மமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழு என்மனனே!
{திருவாய்மொழி. 1-1-1}
“தான் ஸமஸ்த கல்யாண குணாத்மகனாயிருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்; அக்குணங்களும் தன்னைப்பற்றி நிறம் பெற வேண்டும்படியாயிருக்கிற திவ்யாத்ம ஸ்வரூப வைலக்ஷ்யண்யத்தைக் காட்டி உபகரித்தான்; இப்பேற்றுக்கு என் பக்கத்தில் சொல்லலாவது ஒன்றுமின்றிக்கேயிருக்க, நிர்ஹேதுகமாகத் தானே உபகாரகனானான்; ஸ்வஸ்வரூபாபந்நரா யிருக்கிறவர்களுக்கும் அவ்வருகாயிருக்கிற இருப்பைக் காட்டி உபகரித்தான்; தன்னுடைய திவ்ய விக்ரஹ வைலக்ஷ்யண்யத்தைக் காட்டி உபகரித்தான் என்று அவன் பண்ணின உபகாரங்களடையச் சொல்லி, இப்படி உபகாரகனானவன் திருவடிகளிலே நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி உஜ்ஜீவிக்க வாராயென்று தம் திருவுள்ளத்தோடே கூட்டுகிறார். ஆறு கிண்ணகமெடுத்தால் நேர் நின்ற மரங்கள் பறியுண்டுபோய்க் கடலிலே புகும்; நீர்வஞ்சி தொடக்கமானவை வளைந்து பிழைக்கும்: அதுபோல பகவத் குணங்களினுடைய எடுப்பு இருந்தபடி கண்டோமுக்கு எதிரே நானென்று பிழைக்க விரகில்லை; அவன் திருவடிகளிலே தலைசாய்த்துப் பிழைக்க வாராய் நெஞ்சே என்கிறார்; உயர்வறவுயர் நலமுடையவன் துயரறு சுடரடி தொழுதெழப் பாராயென்கிறார். “அஹமஸ்யாவரோ ப்ராதாகுணைர் தாஸ்யமுபாகத: என்னுமாப்போலே” “ சேஷபூதன் சேஷிபக்கல் கணிசிப்பது திருவடிகளையிறே, ஸ்தநந்தயப்ரஜை முலையிலே வாய்வைக்குமாப்போலே, இவரும் ‘உன் தேனேமலருந் திருப்பாதம்’ என்கிற திருவடிகளிலே வாய் வைக்கிறார்”
“செய்ய சுடராழியானுக்கே சூட்டினேன் சொன்மாலை” என்று பொய்கையாழ்வாரும், “நிகரில்லாப் பைங்கமலமேந்திப் பணிந்தேன் பனிமலராள், அங்கம்வலங் கொண்டானடி” என்று பூதத்தாழ்வாரும் “இன்றே கழல் கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன்” என்று பேயாழ்வாரும், “நீரோதமேனி நெடுமாலே! நின்னடியை, யாரோதவல்லார்?” என்று திருமழிசைப்பிரானும், “எப்போதும், கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான், மொய்கழலே ஏத்த முயல்” என்று நம்மாழ்வாரும், “மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே” என்று மதுரகவியாழ்வாரும், “அணியரங்கத்தரவணையில் பள்ளிகொள்ளும் அம்மான்தனடி யிணைக்கீழ் அலர்களிட்டு அங்கு அடியவரோடு என்றுகொலோ அணுகும் நாளே?” என்று குலசேகரப் பெருமாளும், “மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு” என்று பெரியாழ்வாரும், “அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி” என்று ஸ்ரீ ஆண்டாளும்,” கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமினீரே” என்று தொண்டரடிப்பொடியாழ்வாரும், “நீள்மதிளரங்கத்தம்மான் திருக், கமலபாதம் என் கண்ணினுள்ளனவொக்கின்றதே” என்று திருப்பாணாழ்வாரும், “தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர்புரையும் திருவடி என் தலைமேலவே” என்று திருமங்கையாழ்வாரும் அருளிச்செய்துள்ளமை இவண் காண்க.
“தனக்குவமையில்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது” என்பர் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்.
“ஸ்ரீய:பதியின் திருத்தாள் வைபவம்” எனும் நன்னூலை ஸ்ரீமான் பிள்ளைப்பாக்கம் இளையவல்லி லக்ஷ்மீ நரசிம்மாச்சாரியாரவர்கள் இயற்றியுள்ளார். அது “திருத்தாள்மாலை”என்ற திருநாமத்தோடு இத்தமிழ்ச்சங்கத்தின் 88-வது வெளியீடாகப் பிரசுரிக்கலாயிற்று.
சிரஞ்சீவி பஞ்சாமிருதத்தின் திருமண மாலையாய்த் திகழ்வதே இச்செய்ய தமிழ்மாலையின் தனிச்சிறப்பு.
பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.
ஸ்ரீரங்கவிலாசம் அம்பத்தூர் 7-7-1955. | ப.ரெ.திருமலை அய்யங்கார் காரியதரிசி |
ஸ்ரீ;
ஸ்ரீய:பதியின்
திருத்தாள் விபவம்
[பிள்ளைப்பாக்கம் இளையவல்லி லக்ஷ்மீ நரசிம்மாச்சாரியாரவர்கள்]
தூயநான் மறையின் தொன்முடி துலங்கும்
சுந்தரச் சோதியார் திருத்தாள்
ஆயிரங் கண்ண னரனய னாதி
யனைவருந் தொழுதெழுந் திருத்தாள்
நேயமார் தூய மாதவர் நெஞ்சில்
நிலையுற நிலவுசெய் திருத்தாள்
பேயனே னாமிப் பேதையே னகத்தும்
பிரிவறப் பிறங்கிடுந் திருத்தாள். (1)
சுந்தரச் சோதியார் திருத்தாள்
ஆயிரங் கண்ண னரனய னாதி
யனைவருந் தொழுதெழுந் திருத்தாள்
நேயமார் தூய மாதவர் நெஞ்சில்
நிலையுற நிலவுசெய் திருத்தாள்
பேயனே னாமிப் பேதையே னகத்தும்
பிரிவறப் பிறங்கிடுந் திருத்தாள். (1)
தொடரும்…………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக