Sunday, September 26, 2010

தேசிகப்ரபந்தம்–ஆர்.கேசவ அய்யங்கார்

;     “திடமுதற் கேள்வி கொண்டே திறங்கொளா மூர்க்கர் தன்மத், திடமது தெளியா ரந்தோ.....”1. என்று இந்நீதியின் நறுமையும் அருமையும் விளங்குமாற்றை ரஹஸ்யத்ரயஸாரத்தில் எடுத்துக்காட்டினார். “மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்பது பழமொழி.  கொண்டதுபற்றல் பொதுவாக ஒருசிறிதளவில் அறிஞராகிய சித்தாந்திகளிடத்தில் இருத்தல் இயல்பே.  ஆயினும் அறிஞர் என்பார் கொண்டது விடாமை என்ற ஒன்றையே கோட்பாடாகக் கொள்ளாது நல்லகோட்பாட்டின் நலம்கண்டு அதைக் கடைப்பிடிக்கும் சால்புடையார் என்று மீமாம்ஸாபாதுகையில்.  இம்மஹாதேசிகர் காட்டியிருத்தலை நோக்குக:-

     “பண்புடைமதியின் மிக்கார் மிக்கார் பழையதோ புதியதோவாம், ஒண்பொரு ளொன்று மந்நற் பொருளையே கடைப்பிடிப் பார்”2 என்றும் “குமரிலம் போன்ற நூலே கொள்ளுமா தரமிகுந்த, அமயமின் றுமது நூலை யார் கொள்வார்? முன்னம் கேட்ட, தமதுளப் பாட்டின் பற்றில் தானொரு வேறு நீதி, அமையுமோ? என்னில், அன்று, நன்றுடன் படுவர் நல்லார்.....”3. என்றும் மீமாம்ஸாபாதுகையில் கூறினார்.  இவ்வாறு அறிஞருடைய சான்றாண்மைத்தகைமையை இவர் போற்றியுள்ள பெருமனவள்ளன்மையைப் போற்றுக.  எம்பெருமானார் தரிசநம் என்னும் ராமாநுஜஸித்தாந்தம் இம்மஹாதேசிகருடைய சமயம்.  கீழே விளக்கப்பெறும் தத்துவமும்மையை அடியாகக் கொண்டுள்ள திருமாலின் ஸர்வசரீரித்தன்மை என்னும் இறைமை இந்த சித்தாந்தத்துக்கு ப்ரதாநப்ரதிதந்த்ரம் ஆகும். ஆயினும் அது சித்தாந்தியர் பிறர்க்கும் ஓரளவிலேனும் உடன்படுசித்தாந்தமாய்க் கைக்கொள்ளத்தக்க நன்னெறியில் தூய்மையும் இனிமையும் ஒன்றிய செந்தமிழ்ச் சொற்களாலமைத்து இம்மாலையை நல்கியுள்ளார்.  சான்றோர் பணிக்கும் சிறப்புமறை நூல்களை உணரும் முறையும் அவை உணர்த்தும் நுட்பமும் நயமும் ஓர்ந்து தெளியப்பட வேண்டும்.  சிறப்பு மறைநூல்கள் அறிஞர் அனைவர்க்குமே ஓரளவில் பொதுமறையாயே இருக்கும்.  ஒருபடியிலேனும் பொது மறையாகா நூல் எப்படியிலும் சிறப்புமறையாகாது.  ஒரு சமயத்தாருடைய சிறப்பு நூலை மற்றோர் சமயத்தார் மறுக்குங்கால் இருவர்க்கும் உடன்பாடாகிய பொதுச் சான்றுகளையே ஆதாரமாகக் கொண்டு வாதம் நிகழ்த்தி உண்மை தெளிய வேண்டும்.  சொற்சான்றை உடன்படாத சாருவாக சமயத்தார் வைதிக சமயத்தைத் தாக்குங்கால், கண்கூடு ஒன்றையே சான்றாகக் கொண்ட சாருவாகர்களை, கண்கூடும் ஒருசான்று என்று உடன்பட்ட வைதிக சமயத்தினர் அவ்வொரு சான்றுகொண்டே சாருவாக சமயத்தை மறுத்துத் தமது சமயத்தை நிறுவல் வேண்டும்.  பரமத பங்கத்தில் இவர் சாருவாக சமயத்தை மறுத்துள்ள சுருக்குப் பாக்களை இங்கு எடுத்துக்காட்டுவாம்.
”கண்டது மெய்யெனிற் காணும் மறையில் அறிவு கண்டோம்
கண்டத லாத திலதெனிற் கண்டிலம் குற்றமிதில்
கண்டது போன்மறை காட்டுவதுங் கண்ட தொத்ததனால்
உண்டது கேட்கு முலோகா யதரின்று மீறுவதே”4
“கண்டதனாற் காணாத தனுமிக் கின்றார்
கண்டொருத்த னுரைத்ததனைக் கவருகின்றார்
உண்டுபசி கெடுமென்றே யுணர்ந்துண் கின்றார்
ஒன்றாலே யொன்றைத்தாம் சாதிக்கின்றார்
பண்டுமுலை யுண்டதனால் முலையுண் கின்றார்
பார்க்கின்றார் பலரல்லாத் தம்மை மற்றும்
பண்டுமதி கெட்டநிலை காண கில்லார்
காணாதொன் றிலதென்று கலங்கு வாரே”5
என்பன, கண்கூட்டுக்கும் முரண், தம்முள்ளும் முரண் என்ற இருவகை முரண்பாடும் உற்றுள்ளதால் சாருவாக மதம் சான்றோர்க்குக் கொள்ளற்பாலதன்று என்று துணிந்தார்.  பொதுச் சான்றோடு முரணுதலும், தம்முள் ஒன்றோடொன்று முரணுதலும் சித்தாந்தங்களுக்கு இழுக்கு என்றது சித்தாந்திகள் அனைவரும் உடன்பட்டுள்ள வாத நீதி.  சான்றோடு முரணுதல் தன்னிலும் தம்முள் ஒன்றோடொன்று முரணுதலைக் காட்டி மறுத்தல் மிக்க வலியதாகும் என்ற குறிப்பைக் காண்க. தம்முள்முரணல் சான்றோடு முரணற்கு அறிகுறியாகும்.  சான்றுகளான அனைத்தோடும் (அதாவது காட்சி, ஊகம், சொல் என்ற முச்சான்றுகளோடும்) முரணாக் கோட்பாடே தம்முள் முரணாக் கோட்பாடு ஆகும் என்ற தருக்க நீதியைக் காட்டியுள்ள நயம் காண்க.  சொற்சான்றை உடன்பட்ட பெருஞ்சமயத்தாருள்ளும் வாதங்கள் நிகழும்.  அது நிகழுங்கால் சொற்சான்று கொண்டு வாதத்தை  நெறியிற் பரிந்து தத்துவத்தைத் துணிய வேண்டும் என்றார்.  பொதுச்சான்றோடு முரணுதலையும் தம்முள் ஒன்றோடொன்று முரணுதலையும் காட்டி மறுக்க வேண்டும்.  இங்கும் தம்முள் ஒன்றோடொன்று முரணலைக் காட்டி மறுத்தல் மிக்க வலியதாகும்.  ஒரே சிறப்புச் சமயத்தாருள்ளும் வாதம் நிகழுங்கால் அவர்கட்கு உடன்பாடாகிய சிறப்புச்சான்று கொண்டே துணிதல் வேண்டும்.  இங்கு, பொதுச்சான்று தன்னிலும் சிறப்புச்சான்று வலிமிக்கதாதலால் சிறப்புச்சான்று கொண்டே துணிதல் முறையாகும்.  இம்முறைகளை இவர் ஸங்கல்பசூர்யோதயத்தில்6 விளக்கியிருத்தல் காண்க.  இம்முறைகளால் உரியசான்றுகளைக் கொண்டு, எழும்வாதத்துக்கும் எழுப்பும்வாதியர்க்கும் தக உண்மையை ஓர்ந்து தெளிதல் அறிஞர்க்கு அழகாகும்.  மூதறிஞர்களின் சிறப்புமறைநூல்களில் மற்றுமோர் நயமும் காணப்பட வேண்டும்.  அந்நூல்களுள், சிலகருத்து வலியுறுத்தப் பெற்றும், சில மறுக்கப்பெற்றும், சில உதாசீனமாய் விடப்பட்டும் உள்ளன. உதாசீநம் என்பது விருப்பும் வெறுப்புமின்மையாகும்.  உடன்படாதும் மறுக்காதும் உள்ள கருத்து உதாசீனத்தின் பாற்படும்.  அவற்றின் சுவடு நன்கு அறியப்பட வேண்டும்.  வேதக்கருத்தை உணர்த்துதற்கே தோன்றிய ஜைமிநி முதலிய பேரிருடிகளும் இம்மஹாதேசிகர் போன்ற பேராசிரியர்களும் இவ்வுண்மையைக் காட்டியுள்ளது நன்கு உள்ளித் தெளியற்பாலது.  இச்சுவடு அறிந்தார்க்கே தெளிவு.  அறியாதார்க்குக் கலக்கமே.  இந்நலம் உணராதார், தாமும் கலங்குவார் பிறரையும் கலக்குவார்.  இந்நெறி நுட்பத்தை:-

“யாங்குசை மிநிமு தல்வர் நன்றுதா சீந நின்றார்
யாங்கலைந் ததுக லக்க வாதர்தம் வாய்வ லிப்பார்”7

என்று ந்யாயபரிசுத்தியிலும்,

“உளபொருள் விருத்தி யாவு முள்ளவா றுள்ளு கோணத்
தளவுதா சிநவி கற்போ டடைத்தெனுண் ணறும தத்தே”8

என்று தத்த்வமுக்தாகலாபத்திலும் இம்மஹாதேசிகர் காட்டினார்.  நன்மதி, நன்னெறி, நன்மொழி, நல்லருள், நன்னீப்பு முதலிய நலங்களுக்கு வித்தாயும் அவற்றின் விளைவாயும் விளங்கும் நன்மாலையே இம்மாலை.  இவ்வாறு மக்களனைவர்க்கும் நலம் பயக்கும் பொதுமறைநூலாயும் ஒருபடி சிறப்புமறை நூலாயும் திருமாலடியார்க்கு முற்றும் உபயவேதாந்த ரஹஸ்யத்திருமந்திர நூல் என்னும் சிறப்புமறைநூலாயும் இம்மாலை விளங்குதல் ஒருவாறு கூறப்பட்டது.1ரஹஸ்யத்ரயஸாரம் 23 (தமிழ் செய்தது) ;  2 மீமாம்ஸாபாதுகா 8 (தமிழ்செய்தது); 3 மீமாம்ஸபாதுகா 7 (தமிழ் செய்தது); 4 பரமதபங்கம் 12;  5 பரமதபங்கம் 13 ; 6  ஸங்கல்ப.2; 7  ந்யாயபரிசுத்திப்ரமேயாத்யாயம், ஆஹ்நிகம் 2(தமிழ்செய்தது); தத்வமுக்தகலாபம் 495(தமிழ் செய்தது)