Sunday, February 28, 2010

மின்தமிழில் ரசித்தேன்

மின்தமிழில் அடியேன் படித்து ரசித்த ஒன்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். எழுதியவர் திரு.தேவ்

ஸ்ரீமத் இராமாயணமும் அருளிச்செயலும்

பக்தி இலக்கியம் என்று ஒருசேர வகைப்படுத்த முடிந்தாலும் வேறுபட்ட
மொழிகளில் அமைந்த இவ்விரண்டையும் எப்படி ஒப்பீடு செய்ய இயலும் எனும் ஐயம்
எழலாம். 
முதற்காரணம் இரண்டுமே செவ்விசைச் சார்புள்ளவை
வால்மீகி முனிவர் ஸ்ரீ ராமகுமாரர்கள் இருவருக்கும் இராம காதை பாடப்
பயிற்றுவித்தார் - ‘காயதம் மதுரம் கேயம் தந்த்ரீலய ஸமந்விதம்’
’ஸுச்ராவ தத்தாள லய உபபந்நம் ஸர்காந்விதம் ஸுஸ்வர சப்த யுக்தம் |
தந்த்ரீ லய வ்யஞ்ஜந யோக யுக்தம்....’ (உத்தர காண்டம் 94 – 32)
(குச லவர்கள் தாளத்தோடு ஸுஸ்வரமாகப் பாடினர்)
ரங்கநாத முனிகளும் நாலாயிரத்தைத் தம் மருமக்கள் இருவருக்கும் இசையோடு
பயிற்றுவித்தார் -
’காளம் வலம்புரியன்ன நற்காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல்’
இவை இரண்டும் பாடப்பட்ட முறை தற்போது மறைந்து விட்டது; மாந்தரைப் போலவே
மரபும் காலகதிக்கு உட்படுவதுதானே.
திவ்ய தம்பதிகளுக்கான மங்களாசாஸனத்தோடு தொடங்குவது ராமாயணம்; நாலாயிரத்
தொடக்கமான திருப்பல்லாண்டும் அது போன்றதே. இலங்கை பாழாளாகப் படை
பொருதவனுக்குப் பல்லாண்டு பாடியவாறே தொடங்குவது நாலாயிரம்.
கானகத்தில் கிழங்கு கெல்லி எடுப்பதற்கான கூடை போன்றவற்றோடு கூலியாள்போல்
நிற்கும் இளையாழ்வாரை வால்மீகி பகவான்  ‘லக்ஷ்மணோ லக்ஷ்மிவர்தந:’
என்றும், இங்கையிலிருந்து உறவுகளைத் துறந்து வெளியேறி வானில் அந்தரத்தில்
நிற்கும் விபீஷணரை ‘அந்தரிக்ஷகத: ஸ்ரீமாந்’ என்றும் சீமான்களாக
வர்ணிப்பார்; கைங்கர்யம் மட்டுமே செல்வம்  என்பது உட்கருத்து.
‘ராமம் தசரதம் வித்தி மாம் வித்தி ஜநகாத்மஜாம் |
அயோத்யாம் அடவீம் வித்தி ...........................................||’
”இராமனைப் பறவை ஏறும் பரமபுருடனாக அறிந்துகொள்; ஜானகியை மா-லக்ஷ்மி என
அறிவாய்; கானகத்தைப் பரமபதமாகக் கருது” –  இளைய பெருமாளை மேலும்
கைங்கர்யத்தில்  ஊக்குவிக்கிறாள் ஸுமித்ரை.
’கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே’,  ‘புள் கவ்வக்
கிடக்கின்றீரே’ என்றெல்லாம் கடிந்துரைத்துக் கைங்கர்யத்தில் மூட்டுவது
அரங்கனுக்கே அற்றுத்தீர்ந்த ஓர் ஆழ்வார் பின்பற்றும் வழி.
கூழாட்பட்டு நிற்காமல் தொண்டு பூண்டு அமுதம் உண்ணும் வாழ்வையே
வாழ்க்கையாக ஒப்புவர் ஆழ்வார்கள்; இக்குடியில் வந்ததால் ’ஏழாட்காலும்
பழிப்பிலோம்’ என்னும் ஸாத்விக அஹங்காரமும் பொலிகிறது அவர்தம்
பனுவல்களில்.
மரவடியைத் தம்பிக்கு வான் பணயம் வைத்த நிகழ்ச்சியில் நாலாயிரம் காட்டும்
பாதுகா ப்ரபாவம் ஸ்ரீ ராமாயணத்தையும் விஞ்சுவதாகிறது.
ஸ்ரீ ராமாயணத்தை ’சரணாகதி சாஸ்த்ரம்’ என்றே வழங்குவது மரபு , பால
காண்டத்தில் தேவ சரணாகதி, கைங்கர்யம் குலையாமைக்காக லக்ஷ்மண சரணாகதி,
அயோத்யா காண்டத்தில் பாரதந்த்ர்யம் குலையாமைக்காக பரத சரணாகதி, ஆரண்ய
காண்டத்தில் தபோதந சரணாகதி, ஜயந்த சரணாகதி, விபீஷண சரணாகதி என்று
அமைந்துள்ளதால்.
”ஒருக்காலே சரணாக அடைகின்றார்க்கும்
உனக்கடிமை யாகின்றேன் என்கின்றார்க்கும்
அருக்காதே அனைவர்க்கும் அனைவராலும்
அஞ்சேலென்றருள் கொடுப்பேன்,”
என அபயம்  தரும் ஐயனின் உதார குணத்தில் யார்தான் மனம் நெகிழாதிருப்பர் ?
இதையே அடியொற்றி அடிக்கீழமர்ந்து புகுவார் பராங்குசரும்; குலசேகரரின்
‘தருதுயரந் தடாயேல்’ கையறு நிலையில் உள்ள ஸம்ஸாரிகள் அனைவ ருக்குமானது.
சிறார்களுக்கு உச்சரிப்புப் பதிவதற்காக ‘ராமோதந்தம்’ பயிற்றுவிப்பர்
முற்காலத்தில்; குலசேகரரின் திருச்சித்திரகூடப் பாசுரங்கள் தமிழின்
”ராமோதந்தம”  என்று நினைத்துக் கொள்வேன். திருக்கண்ணபுரத்தின் சௌரி
ராஜனையும் இராமபிரானாகப் பாடியவர் ராம பக்தரான குலசேகரர்; நல்ல வேளையாக
திவ்யதேசப் பெயரை ’ராமபுரம்’ என்று மாற்றவில்லை என்பார் பரனூர்ப்
பெரியவர்; ராஜரிகத்தில் இருந்தபோது ஸ்ரீராமாயணம் கேட்ட ஸம்ஸ்காரமாகலாம்.
உத்தர காண்டம் பிற்சேர்க்கை என்பர்; யாரால், எப்போது, எதற்காக என்றால்
விடை கிடைக்காது. கோப்ரதாரத்தில் சராசரமுற்றவும் நற்பாலுக்குய்த்ததை
நாலாயிரம் தெளிவு படுத்துகிறது.
நாலாயிரச் சொற்களை மட்டுமே கொண்டு புனையப்பட்டது பெரியவாச்சான்
பிள்ளையின் பாசுரப்படி ராமாயணம்.
தள்ளத் துணியினும் தாய்போல் இரங்கும் தனித் தகவால் நம் உள்ளத் துறைகின்ற
அவ்வுத்தமன், தனக்கே பாரமாகத் தானே யெண்ணி  வான்தந்து, மலரடியும் தந்து,
வானோர் வாழ்ச்சிதர மன்னருளால் நம்மை வரிக்கும் நிலை ஒன்று உள்ளது;
இந்நிலைக்குப் பெயர் அவனருளை  எதிர்பார்த்து நிற்கும் ’பரகத ஸ்வீகார
நிஷ்டை’ எனப்படும் ப்ரபந்ந பரிபக்வம். இவ்விரு இலக்கியங்களுமே மறைமுகமாக
அதைச் சுட்டுகின்றன.
இவற்றை மனத்தில் கொண்டே சோழன் ‘ ஸ்ரீராமாயணமும், அருளிச் செயல்களும்
வைணவத்தின்  பேரரண்கள்’ என்று கூறியிருக்க வேண்டும்.
உலவிய பெருமாளும் (விபவத்தில்) , உறங்கும் பெருமாளும் (அர்ச்சையில்) :
இராமபிரான் ஆராதித்த அர்ச்சா விக்ரஹமே பதின்மர் பரவிய பரமன்  – ’ஸஹ
பத்ந்யா விசாலாக்ஷ்யா நாராயணமுபாகமத்’ என்று வால்மீகி தெளிவாகவே
சொல்கிறார்.
தேவர்களும் முனிவர்களும் அறிய ‘பவாந் நாராயணோ தேவ:’ என்று நான்முகன்
துதிக்கையில் பரத்வத்தை மறைத்துக்கொண்டு ‘இல்லை; நான் ஒரு அரசகுமாரன்
மட்டுமே. தயரதன் மகன்’ என்று நீர்மை பொலியக்கூறும் பான்மையை எங்கு
காணமுடியும் ?  (தற்போது அவனவன் தன்னை அவதாரம் என்று சொல்லிக்கொள்வது
வேறு விஷயம்)
கலியின் கொடுமை பெருகிய நிலையிலும் பரத்வம் காட்டாமல் அர்ச்சாஸமாதி
நியமம் குலையாத நீர்மையை அரங்கனிடமும் காண்கிறோம்.
தண்டகா தபோவந ஜங்கம பாரிஜாதமாக, சீர ஜடாதரனாக வனத்தில் த்வரை யுடன்
உலவியபோது ‘ஸுவேஷ:’  என்று கொண்டாடும்படி முனிவர்களின் கண்களுக்கு
விருந்தானான்.
திவ்ய ஸூரிகளாம் ஆழ்வாரின் கண்களுக்கு இலக்காக ‘காட்டவே கண்ட பாத கமலம்,
நல்லாடை, உந்தி, தேட்டரும் உதர பந்தம், திரு மார்பு, கண்டம், செவ்வாய்,
வாட்டமில் கண்கள்’ என்று நிதானமாக நின்று ஸேவிக்கலாம்படி அரங்கம்
அமைத்துக்கொண்டு அர்ச்சா ஸமாதியில்.
உயிர் பிரியும் தருணத்திலிருக்கும் ஜடாயுவைக் கட்டிக்கொண்டு கையாலாகாத
மனிதனைப்போல் புலம்புவது ஒருபுறம்; அடுத்ததாகப்  பக்ஷியின் வாட்டம்
நீக்கி ‘அநுத்தமாந் லோகாந் கச்ச’ என்று பரமபதம் அருளும்போது விபவ நியமம்
ஒதுங்கிக்கொண்டு பரத்வம் ஒளிர்வதையும் கண்டு வியக்க முடிகிறது ஸ்ரீ
ராமாயணத்தில்.
அரங்கனும் மெய்யடியார்கள் விஷயத்தில் நியமத்தை ஒதுக்கிவிட்டு உரையாடி
மகிழ்வான்.
திருவணையின்  தர்ப சயனத்தில் விபவ மஹிமையையையும், திருவரங்கத்தின்  யோக
சயனத்தில் அர்ச்சா வைபவத்தையும் காண முடிகிறது.
ஸ்ரீராமனும், ஸ்ரீராமானுஜரும்
ஸ்ரீராமனுக்குத் தொண்டு செய்ய ஒரு லக்ஷ்மணன்; ஸ்ரீரங்கநாதனுக்கு ஒரு
லக்ஷ்மண முநி.
உடையவர் ஸ்ரீ ராமாயணத்தைத் திருமலையிலும், அருளிச் செயலை அரங்கத்திலும்
பாடம் கேட்டார்.
விபீஷண சரணாகதியில் அரக்கன் என்பதால் எழுந்த விசாரம் பற்றி உடையவர் கூறி
வரும்போது, உறங்காவில்லி தாஸர் தாழ்மையுணர்ச்சி மேலிட, கோஷ்டி யிலிருந்து
விலக எண்ணி எழுந்தாராம்; உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து கொண்ட உடையவர் ‘
தாஸரே, இது ராமாநுஜ கோஷ்டி ! ராம கோஷ்டியன்று, விசாரணை கிடையாது;
நிர்விசாரமாக அமரும்’ என்று உரக்க ஆணை யிட்டாராம்.
ஸ்ரீரங்க கத்யத்தில் உடையவர் அரங்கனோடு கருணா காகுத்தனையும் சேர்த்தே
வணங்குவார்  –  ‘ஆபத்ஸக, காகுத்ஸ்த*, ஸ்ரீமந், நாராயண,புருஷோத்தம,
ஸ்ரீரங்கநாத, மம நாத நமோஸ்து தே’