புதன், 17 டிசம்பர், 2008

பாதுகா சஹஸ்ரம் சிருங்கார பத்ததி

ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தின் 10வது பத்ததியான சிருங்கார பத்ததியின் தமிழாக்கம் இங்கு உள்ளது. தரவிறக்கம் செய்ய இந்த லிங்கில் க்ளிக்கலாம். அடுத்து வரும் சஞ்சார பத்ததியை இரண்டு பகுதிகளாக வெளியிடுவேன். இதே வலைப் பூவில் தொடர்ந்து வர வேண்டுகிறேன்.



சென்னை செல்லும்போதெல்லாம் திருவல்லிக்கேணி நடைபாதைக் கடைகளில் ஏதேனும் ஒரு நல்ல பழைய புத்தகம் கிடைப்பது வாடிக்கையாய் விட்டது. இப்போது கிடைத்தது மதுர கவி ஸ்ரீநிவாஸய்யங்கார் இயற்றிய “மதுரகவி இராமாயண வெண்பா” பாகம் இரண்டு. சுந்தர காண்டமும், யுத்த காண்டமும் அடங்கியது. பாகம் ஒன்று எப்போது கிடைக்குமோ தெரிய வில்லை. ”திலகம்” என்ற இதழில் முந்தைய காண்டங்கள் வெளியானதாம். இந்த பாகம் இரண்டு 1990ல் வெளியிடப்பட்டிருக்கிறது. திருமதி வேதவல்லி, 8, நரசிங்கபுரம், மைலாப்பூர், சென்னை என்ற முகவரியில் கிடைக்குமாம். ஆர்வமுள்ளவர்கள் இந்த அருமையான புத்தகத்தை வாங்கிப் படித்து இன்புறலாம். கம்பனில் ஆழ்ந்தோர் இதையும் நன்கு அனுபவிக்கலாம். அல்லது கம்பனைக் கற்பதற்குத் துணை வேண்டுமெனத் தயங்குபவர்கள் இந்த எளிமையான ஆனால் அருமையான வெண்பாவைக் கற்று மகிழலாம். மாதிரிக்கு ஓரிரண்டு இங்கே.
ஊர்தேடும் படலம்

கண்டானி லங்கைக் கடி நகருங் காவலும்விண்
கொண்டார்ந்த கோபுரமும் கோமறுகு -- மண்டாவு
மாடமும் மற்றும் வளமும் வளமமைந்த
கூடமும் காவுங் குறித்து.
பொய்யிலா வாய்மைப் புகழொடு பொன்னவன்சேர்
மெய்யுலாவியகடிகை வேளையில் -- வையமெலாம்
துள்ளினர்கள் ஆர்ப்பமுடி சூடினான்தொன்மறையோர்க்கு
அள்ளினான் எல்லாம் அளித்து.

மாதமும் மாரி மழைபொழியமாதவரும்
வேதியரும் வாழ்த்து விளம்பவே -- கோதைச்சனகியொடும்
வெண்குடைக்கீழ்த் தானிருந்து காத்தான்
அனகன் புவியனைத்தும் ஆங்கு.

இந்நூலுக்குக் “கம்பன்” என்கிற திரு இராமன் உரை (சிறு குறிப்புகள்)யும் உள்ளது. இதுவும் ஒரு சுவாரஸ்யம்தான். மேற்படி முகவரியில் இன்னும் அவர்கள் இருக்கிறார்களா, இருந்தாலும் புத்தகம் கிடைக்குமா என்பது சென்னைவாசிகள் நேரில் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக