வியாழன், 19 ஏப்ரல், 2018

அன்பில் ஸ்ரீ கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவம்


        ஸ்ரீவத்ஸத்தைப்பற்றி பாகவதம் தசமஸ்கந்தம் முடிவில், ப்ருகுமஹர்ஷி பொறுமை பரீக்ஷை மூலமாய்ப் பரத்வ பரீக்ஷை செய்த கதையொன்றுண்டு. அடியாராகிய ப்ருகுமஹர்ஷியின் அடியடையாள மென்ற ப்ரஸித்தியோடு ஸ்ரீவத்ஸம் என்ற மரு விளங்கவேண்டுமென்று பெருமாள் அனுக்ரஹம். ஸ்ரீவத்ஸத்தை ஸ்ரீதேவி வத்ஸன் போல – குழந்தையைப்போல – லாளநம் செய்ததாகவும், அதனால் ஸ்ரீவத்ஸம் என்று திருநாமம் என்றும் ஸ்ரீசங்கராசார்யார் விஷ்ணுபாதாதி கேசாந்த ஸ்தோத்ரத்தில்** பாடுகிறார். திருமருவும் திருமார்பில் ப்ருகுவின் பாதம் உதைத்தது. அந்தப் பாத சிந்ஹத்தை பகவான் நித்யமாய் ஸ்ரீவத்ஸ வ்யாஜ்யத்தால் வஹிக்கிறார். இது பெருமாள் தன்னை அடியார்க் காட்படுத்தும் முறையைக் காட்டின வழி. ‘திருவார மார்பதன்றோ’ என்று இவ்வாழ்வாரே, திரு மருவின மார்பில் ஸ்ரீவத்ஸத்திற்கும் இடம் கொடுத்த பெருந்தன்மையி லீடுபடுகிறார். லோகஸாரங்க முனியின் தோளில் எழுந்தருளுகையில், இவர் திருவடிகள் அம்முனிவர் மார்பில்தானே ஸ்பர்ஸித்திருக்க வேண்டும்! பக்தரான ப்ருகு மஹர்ஷியின் பாதம் பெருமாள் திருமார்பில் ஸ்பர்ஸித்து ஸ்ரீவத்ஸம்போல் அபிமானமேற்பட்டது போல், இந்த ஸ்ரீவத்ஸாம்சர் பாதம் பக்தரான லோகஸாரங்க முனிவர் மார்பில் ஸ்பர்சித்தது. 

               இவர் கண்ணனைப்போல ரோஹிணீ நக்ஷத்திரத்தில் அவதரித்தவர். “காண்பனவும் உரைப்பனவும் மற்றொன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய காதற் பாண்பெருமாள்” என்றபடி, இவரும் சடகோபரைப்போல் க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமே வடிவெடுத் துதித்ததுபோல் இருந்தவர்कृष्णतृष्णा  तत्व- मिवोदितम् (க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வமிவோதிதம்) (பட்டர் ஸ்ரீரங்கராஜ ஸ்தவம்) என்று நம்மாழ்வார் விஷயத்தில் பட்டர் ஸாதித்தது இவருக்கும் பொருந்தும். “தீவிர க்ருஷ்ணத்ருஷ்ணா தத்வம்” என்று “கடியகாதல்” என்பதால் ஸூசநம். முக்தி பலம் பெற்ற கடைசிப் பாசுரத்தில் “கொண்டல்வண்ணன் கோவலனாய் வெண்ணெ யுண்ட வாயன்” என்று பாடுகிறார். अन्तकालेतु मामेव स्मरन् मुक्त्वा कळेबरन्| य: प्रयाति स मद्भावं यातिनास्त्यत्र संशय; || (அந்தகாலேது மாமேவ ஸ்மரந் முக்த்வா களேபரம்| ய: ப்ரயாதி ஸ மத்பாவம் யாதிநாஸ்த்யத்ர ஸம்சய:) என்பது கீதை.

               இந்த ப்ரக்ருதி மண்டலத்தை விட்டுப் பரமபதம் பெற, பகவானுடைய அர்ச்சிராதி கதி ஸாமாந்யமான மார்க்கம். அர்ச்சிஸு முதலிய அதிவாஹிக கணங்கள் பகவந் நியமநத்தால் வஹநம் செய்பவர். சிலருக்கு வேறு வேறு வழியாக வஹநமென்று அதிகரண ஸாராவளியில் चैद्यादीनाम् (சைத்யாதீ நாம்) என்கிற ச்லோகத்தில் காட்டப் பட்டது. சிசுபாலாதிகளுக்கும், அயோத்தி நகர் சராசரங்களுக்கும் வெவ்வேறு விதமாக மோக்ஷமடைய வழிகள் ஏற்பட்டன. சிலருக்கு கருட வாஹனம், இவருக்கு முனி வாஹனம்.

               “பாண்பெருமாள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுமின்கள்! சீர்மறையின் செம்பொருள் செந்தமிழா லளித்த பாரியலும் புகழ்ப் பாண்பெருமாள் “ என்றபடி இவர் பாசுரங்கள் வேதாந்த ஞானம் முழுமையும் உட்கொண்டவை. யோகாப்யாஸம் செய்து செய்து பகவத் குணங்களைப் பரவசமாய்ப் பாடிப் பாடி இவர் தத்வ ஞானம் மேலும் மேலும் வளர்ந்தது. “வேதநூற் பிராயம் நூறு” “பாதியு முறங்கிப் போகும்”. ஐம்பது வருஷம் ஸுஷுப்தி (தூக்கம்) என்கிற லயமாக இருக்கும் என்றார். இவர் பிராயம் ஐம்பதே. இவரது பிராயமான ஐம்பது வருஷமும் இவருக்கு யோகஸமாதி லயமாகவும் கான லயமாகவுமாகவே சென்றது. நாரதருக்கு ஞானத்தையும் ஐச்வர்யத்தையும் தம்மிடம் ஸ்நேஹ பாவத்தையும் கேசவன் தந்ததாக அவர் अदान्मे ज्ञानमैश्वर्यम् स्वस्मिन्भावं च केशव: (அதான்மே ஞான மைச்வர்யம் ஸ்வஸ்மின் பாவம் ச கேசவ:)(ஸ்ரீபாகவதம் 1-5-39) என்று கூறினார். இத்திருப்பாணாழ்வாருடைய ஞானமும் ப்ரேம பாவமும் அளவற்றவை. இவருடைய பத்துப் பாசுரங்களிலும் ஜ்வலிக்கும் ஞான பக்திகளை அனுபவிப்போம்.       

தொடரும்
** ஸ்ரீசங்கர பகவத் பாதரின் "ஸ்ரீவிஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்ரத்துக்கு
அன்பில் ஸ்வாமியின் அருமையான விரிவுரை
http://thiruppul.blogspot.in/search/label/sri%20vishnu%20pathaadhi%20kesaantham
உள்ளது. விரும்புபவர்கள் அங்கு படிக்கலாம்       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக