ஞாயிறு, 18 மார்ச், 2012

வைத்தமாநிதி 17

வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும்கொண்டு திண்ணென இவ்இரா உன்னைத் தேய்த்துக் கிடக்க நான் ஒட்டேன்; எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கு எத்தனை போதும் இருந்தேன்; காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்திற் பூரித்து வைத்தேன்; மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும் நறுஞ்சாந்தும் அஞ்சனமும் கொண்டுவைத்தேன்; அழகனே நீராட வாராய்; எண்ணெய்க் குடத்தை உருட்டி இளம்பிள்ளை கிள்ளி எழுப்பிக் கண்ணைப் புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே! பள்ளிக் குறிப்பு செய்யாதே! உண்ணக் கனிகள் தருவன்! அப்பம் கலந்து சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து சொப்பட நான் சுட்டு வைத்தேன், தின்னல் உறுதியேல் நம்பி; செப்பு இளமென் முலையார்கள் சிறுபுறம் பேசிச் சிரிப்பர், சொப்பட நீராட வேண்டும். வாய்த்த புகழ் மணிவண்ணா! மஞ்சனம் ஆட நீ வாராய்! பூணித் தொழுவினிற் புக்கு புழுதி அளைந்த பொன்மேனி காணப் பெரிதும் உகப்பன். ஆகிலும் கண்டார் பழிப்பர்; நாண் இத்தனையும் இலாதாய்! நப்பின்னை காணில் சிரிக்கும். இன்று நீ பிறந்த திருநாள் நன்னாள் திருவோணம் இன்று நன்று நீ நீராட வேண்டும். மாணிக்கமே என் மணியே! ஒலிகடல் ஓத நீர்போலே வண்ணம் அழகிய நம்பி! ஓடாதே நீராட வாராய்” என்று வார்மலிக்கொங்கை யசோதை, கார்மலிமேனி நிறத்துக் கண்ணபிரானை உகந்து மஞ்சனம் ஆட்டினாள்.

( ஒருவாறு மஞ்சனம் கண்ட கண்ணனுக்கு குழல்வாரி, செண்பகப்பூ சூட்டி, யசோதை காப்பிட்டது நாளை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக