Wednesday, December 21, 2011

பரான்ன போஜனம்!

நேற்றைய நாட்டேரி ஸ்வாமியின் குரு பரம்பரைஉபந்யாஸத்தைக் கேட்டவர்கள் அவர் பரான்னத்தைப் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்டிருப்பீர்கள்.

இன்று யதேச்சையாக நண்பர் ஒருவர் வீட்டில் விரோதி வருஷம் விஜயதசமி (அதாவது 1949-1950) அன்று ஸ்ரீ நே.ஈ. வேங்கடேச சர்மா என்பவர் ப்ரசுரித்த “வைத்யநாத தீக்ஷிதீய ஸ்ம்ருதி முக்தாபல ஆன்ஹிக ஸாரமான நித்ய கர்மானுஷ்டான விதிகள்” என்ற பழைய நூல் ஒன்று கிடைத்தது. அதில் பரான்ன போஜனத்தைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். அதில் கண்ட அனைத்து விதிகளையும் கடைப்பிடிக்க இன்றைய சூழலில் முடியாவிட்டாலும் முடிந்தவரை தவிர்க்கப் பார்ப்போமே!

எப்போதே எழுதின அந்த நூலில் அடியேனுக்கும் ஒரு பெயர் சூட்டிவிட்டார். எவ்வளவு தீர்க்கதரிசிகள் நம் முன்னோர்கள்! என்ன பெயரா? கடைசி வரியில் இருக்கிறது.

அந்த நூலை முழுவதும் படித்தால் சாஸ்த்ர விரோதமில்லாமல் இன்று நடப்பவர் அநேகமாக யாருமேயில்லை என்று கூறலாம்.

நூலைக் கொடுத்தவர் அடித்த கமெண்ட்; அப்போ அந்த நாளிலேயே பரான்னம் புசிப்பது பரவலாக இருந்திருக்கிறது அதனால்தானே இவ்வளவு கடுமையாக எழுதியிருக்கிறார்கள்!

நூலை பிடிஎப் ஆக நாளை இணையத்தில் வெளியிடுவேன்.

 

பரான்ன போஜன தோஷங்கள்

பிறரது அன்னத்தைப் புசித்தலானது புத்தி, தைர்யம், வீர்யம், கண் காதுகள், மனஸ், ப்ராணன், நினைவு, அறிவுகள், யாவையையும் குலைத்துவிடும். இவன் செய்த ஜபம், தபம், ஹோமம், தானம், அத்யயனம், இவை யாவும் அன்னதாதாவைச் சேர்ந்துவிடும். ஒருவன் அன்னத்தையுண்டு புணர்ந்து புத்ரன் உண்டானால் பிறந்தவனின் ஸர்வ புண்ய கர்ம பலனும் அன்னதாதா வினுடையதே என்று வ்யாஸ பகவான் கூறுகிறார்.(வீர்யம் அன்னத்தினாலுண்டாவதால்). தவிரவும் அன்னமளிப்பவனுடைய பாவமும் இவனையடைந்து விடுகிறது. க்ருஹஸ்தன் பரான்ன போஜனத்தால் பதிதனா கிறான். பரான்ன நியமம் வைத்துக் கொண்டிருப்பதாய்ச் சொல்லுபவர் புசித்துவிட்டால் நாய், பன்றி, கழுதையாய்ப் பிறக்கின்றனர். பரான்ன போஜனமே செய்பவர் பசுமாடாய் ஜனித்து அன்னமளித்தவர்க்கு உழைக்கின்றனர். தேவபித்ரு கர்மங்களைச் செய்துவிட்டுப் பிறர் வீட்டிற்போய்ப் புசிப்பவன் பாவத்தையே புசித்தவனாய் செய்துவிட்டு வந்த கர்ம பலன்களை அன்னமளிப்பவனுக்குக் கொடுத்தவனாய்விடுகி றான் என ஜமதக்னி மஹரிஷி கூறுகிறார்.

பரான்னத்தில் த்ருஷ்டியோடு தன் கர்மாக்களைக் குறைத்துக் கொள்ளக் கூடாது. பிறர் அன்னம் தேஹத்திலிருக்கும் பொழுது செய்யப்படும் வைதிக கர்மங்களின் பலன் மூன்றில் ஒரு பங்கு அன்னமளித்தவனை அடைகிறது. பூமி, பசு, பொன் ரத்னங்கள் முதலியவைகளை வாங்கிக் கொள்ளலாம். அன்னம் மட்டும் புசிக்கக் கூடாது என யமன் கூறுகிறார்.

பிறருடைய அன்னம், வஸ்த்ரம், தீர்த்தம், பெண்கள், க்ருஹம் யாவும் அனுபவிப்பவனுடைய தனத்தைக் குலைக்கும். க்ருஹஸ்தனுக்குப் பரான்ன போஜனம் பரிஹரித்துக் கொள்ள முடியாத ஒரு தனித்த பாவமாய் நிற்கிறது. சிஷ்டரான ச்ரோத்ரியருடைய ஒரு நாள் அன்னம் மட்டும் நம் ஸகல பாவங்களையும் நிவர்த்திக்கிறதால் அது க்ராஹ்யமாகும்.

பஞ்சமஹாயக்ஞங்களை அனுஷ்டித்துவிட்டுப் பிறருடைய அன்னத்தில் வயிறு வளர்க்கும் அதமர்கள் பரபாகரதர் என்றும், க்ருஹஸ்தனுக்கு உரிய கர்மாக்களை விதிப்படி அனுஷ்டித்து அவற்றை க்ரயத்திற்கு விற்பவன் அபசரென்றும் பெயராகும். அபசருக்குக் கொடுத்த தானம் தாதா ப்ரதிக்ரஹீதா இருவர்களையுமே நரகமடைவிக்கிறது. பரபாக நிவ்ருத்தர், பரபாகதர், அபசர், பரிவித்தி, பரிவேத்தர், குண்டன், கோளகன், தேவலன், புரோஹிதர்களது அன்னத்தைப் புசித்துவிட்டால் சாந்த்ராயண க்ருச்ரம் அனுஷ்டிக்கக் கடவர். அனாசாரன், நிஷித்தன், அசுசியாயுமுள்ள அந்தணன் அன்னத்தைப் புசித்துவிட்டால் ஒரு நாள் முழுவதும் உபவாசமிருக்க வேண்டும். ஔபாசனாக்கியை விட்டுவிட்டுத் தன்னை க்ருஹஸ்தனாய்ச் சொல்லிக்கொள்ளும் அசடுக்கு வ்ருதாபகன் எனப் பெயர்.. இவருடைய அன்னமும் த்யாஜ்யமே.