Sunday, August 21, 2011

சென்னையில் அடியேன்.

நீண்ட நாட்களுக்குப் பின்   அடியேன் அம்மாவைப் பார்ப்பதற்காக சென்னை  வந்திருக்கிறேன்.  இன்று ஒரு மிக நல்ல நாளாக அமைந்தது. நமக்கெல்லாம் தினம் ஒரு Ebook விருந்து படைக்கின்ற ஸ்ரீமதி ஜெயஸ்ரீமுரளிதரன் தாயாரைச் சந்தித்து ஆசிகள் பெறுவதற்காக நங்கநல்லூர் போயிருந்தேன். அங்கு அவர்கள் குடும்பத்தார் அனைவருடைய அன்பு மழையில் நனைந்து,  அப்படியே அங்கு ஸ்ரீ ஹரி ஸ்வாமியின் திருமாளிகைக்கும் செல்லும் பாக்யம் கிடைத்தது. திருமாளிகை என்று சொல்வது தவறு அதை ஒரு திருக்கோவிலாகவே அவர் வைத்திருக்கிறார். அங்கு கண்டவை அடியேன் வர்ணிப்புக்கு அப்பாற்பட்டவை. ஸ்ரீவைணவர்கள் அவஸ்யம் ஒரு முறையாவது அவரது அனுமதி பெற்று அங்கு சென்று ஸேவித்து வரவேண்டியதொரு புனிதமான திருத்தலம் அது.

அங்கிருந்து திருவல்லிக்கேணி திரும்புகையில் வழக்கம்போல நடைபாதைக் கடையில் சில நல்ல புத்தகங்கள் கிடைத்தன. அவற்றுள் “கீதா சாரத் தாலாட்டு”  என்பது ஒன்று, 1980ல் வெளியிடப் பட்டிருக்கிறது.  காரைக்குடி அருகில் இருக்கும் கோவிலூர் ஆதீன வெளியீடு. அதன்

முன்னுரை

                              பிரஸ்தானத் திரயங்களில் ஒன்றாகப் போற்றப் பெறும் பகவற் கீதை”  உலகப் புகழ் மிக்கதொரு மெய்ஞ்ஞானக் களஞ்சியமாகும். பகவான் கண்ணனால் அருச்சுனனுக்கு உபதேசிக்கப் பெற்றது “பகவற் கீதை” . உலகில் பகவற் கீதைக்கு அமைந்துள்ள விரிவுரைகளும் மொழிபெயர்ப்புகளும் கணக்கிலாதனவாகும். இத்தகு மாபெரும் சிறப்பு வாய்ந்த பகவற் கீதையின் மேலாம் தத்துவ உண்மைகளை இன்பத் தமிழில் எளிய முறையில் தாலாட்டுப் பிரபந்த வடிவில் ஆக்கியவர், தொண்டைவள நாட்டில் மாதைப் பதியின் மன்னனாக விளங்கிய திருவேங்கடநாதர் என்னும் மறையோர் ஆவர். இவருக்கு அறிவிலும் அழகிலும் சிறந்த இரு புதல்விகள் இருந்தனர். இவர்களுள் ஒருத்திக்கு மகப் பேறு வாய்க்கப் பெறாமையால் மனம்வருந்தி ஏங்கித் தவித்தனள்.அன்பு மகளின் ஏக்கம் காணச் சகியாத திருவேங்கடநாதர், அழகிய கண்ணன் பதுமை ஒன்றைக் கையினில் கொடுத்து “இதனைத் தொட்டிலில் இட்டு அருமை மைந்தனாகவே கருதித் தாலாட்டிச் சீராட்டிப் பாராட்டி மகிழ்ச்சி பெறுக” என ஆசி கூறியதுடன் தாலாட்டும் பொருட்டு பகவற் கீதையின் சாரமான “கீதா சாரத் தாலாட்டு”ப் பிரபந்தத்தையும் இயற்றியருளினர். அம்மாது நல்லாள் தந்தையின்அருள் வாக்கிற்கேற்ப பதுமையைத் தொட்டிலில் இட்டுச் சீராட்டித் தாலாட்டி இன்புற்றுவர சில ஆண்டுகளில் சற்புத்திரப் பேறு வாய்த்து அளவிலா ஆனந்தம் அடைந்தனள் என்பது வரலாறு.இத்தாலாட்டு மெய்யுணர்வு ஊட்டக்கூடிய தத்துவச் செல்வங்கள் நிறைந்தது. படிப்பவர்க்கு எளிய முறையில் இனிய தமிழில் அமைந்துள்ளது. ஒலிகள், உணர்ச்சியைத் தூண்டும் ஆற்றல் உடையவை. மந்திர ஒலிகள், வேத ஒலிகள் போன்ற சிறப்பு ஒலிகள் நன்மை பயக்கும் சக்தி வாய்ந்தவை. பொருள் தெரியாத போதிலும் புனிதமான நல்ல ஒலிகள் கேட்பதாலும் மீண்டும் மீண்டும் சிந்திப்பதாலும் நன்மை பெருகும் என்பர் சான்றோர். கொஞ்சும் மழலைச் செல்வங்களின் பிஞ்சு உள்ளங்களில் இந்தத் தத்துவம் நிறைந்த  தாலாட்டு ஒலிகள் கருப் பொருளாக அமைந்து காலம் வரும்போது தழைத்து ஓங்கும் என்பதில் ஐயமில்லை. தாய்க்குலம் இந்தத் தாலாட்டினைக் கற்றுணர்ந்து மழலைச் செவிகளில் புனிதமான தத்துவ ஒலிகளைப் புகட்டி சேய்க் குலத்தினைச் சிறப்பிக்கச் செய்து நல்வாழ்வு வாழ  வழிகாட்டியாக அமையவேண்டுமென்று விரும்புகிறோம். மநநம் செய்பவர்களின் சௌகர்யம் கருதி மூலம் மட்டிலும் தனியாக வெளியிடப் பெற்றுள்ளது.  ------------- பதிப்பாளர். 

திருவாமாத்தூர் ஸ்ரீ திருவேங்கடநாதர் இயற்றிய “கீதா சாரத் தாலாட்டு” நாளை முதல் ஸ்ரீ கண்ணபிரான் துதியுடன் துவங்கி இங்கு ஒலிக்கும்.