Friday, December 17, 2010

தேசிகப்ரபந்தம் --- ஆர். கேசவய்யங்கார் முன்னுரை

மூலம்: த்வயம்: சரமச்லோகம்
மூலமந்திரம், த்வயம், சரமச்லோகம், என்னும் இம்மூன்றும் மெய்யுணர்ந்து உய்யும் அவாவுடையார்க்கு ஸாரதமங்களான மூன்று ரஹஸ்யங்களாகும்.  இவற்றின் பொருள்களை ரஹஸ்யத்ரயஸாரத்தில் பரக்கக் காண்க.  அப்பொருள்களின் சுருக்கை திருமந்திரச்சுருக்கு, த்வயச்சுருக்கு, சரமச்லோகச்சுருக்கு என்னும் இம்மாலைப்ரபந்தங்களிலும் பின்னும் அவற்றின் தெளிவை ஸாரஸாரம், விரோதபரிஹாரம் முதலிய ரஹஸ்ய நூல்களிலும் கண்டு கொள்க.  சரண்ய தம்பதியார்க்கு உயிர்ப்பொருளை சரணாகதியஞ்ஞத்தில் அவியாக வடித்திட்டு யஞ்ஞசிஷ்டராய், போன கம்செய்தசேடராய் மீளாத பேரடிமைக்கு அன்பு பெறுதலே பேறு என்றது இம்மூன்று ரஹஸ்யங்களும் உணர்த்தும் பொருளின் சுருக்கு.  இவைமூன்றிலும் தனித்தனியே எல்லாமறைப் பொருள்களும் மொழியாலும் குறிப்பாலும் காணலாமாகிலும் ஓரொன்றிலே ஓரொன்றுக்கு நோக்காயிருக்கும்.  திருமந்திரத்துக்கு மெய்யுணர்வில் நோக்கு.  த்வயத்துக்குப்பேற்றில் நோக்கு.  சரமச்லோகத்துக்கு ஒழுக்கத்தில் நோக்கு திருமந்திரத்தில் தத்துவம் தெளியவிளங்கும்.  சரமச்லோகத்தில் உபாயமாகிய செய்தவம் என்னும் சரணாகதி நன்கு விளங்கும்.  த்வயத்தில் புருஷார்த்தமாகிய பேறு இனிது விளங்கும்.  ஆதலால் திருமந்திரம் தாரகம் (தவர்க்க நான்காம் யகரம்) என்றும், சரமச்லோகம் போஷகம் என்றும் த்வயம் போக்கியம் என்றும் போற்றப்படும்.  தாரகம் என்றதற்கு தரிக்கச்செய்தல், போஷகம் என்றதற்கு வளரச்செய்தல் போக்கியம் என்றதற்கு சுவைக்கச்செய்தல் என்று பொருள்.இறைப்பொருளுக்குச் சேடமயமாகிய உயிர்ப்பொருளின் பரிசுத்த இயல்பை விளக்கி அதன் இருப்பைத் தரிப்பித்தலால் திருமந்திரம் தாரகம் ஆகும்.  தரிப்பிக்கப்பெற்ற உயிர்ப்பொருளுக்கு, இறைப்பொருளைத் தாள்பற்றி உய்தற்கு வேண்டிய நிறைமதி நலமெல்லாம் ஊட்டும் உபதேசத்தில் தலைக்கட்டலால் சரமச்லோகம் போஷகம் ஆகும்.  ஒருக்கால் உச்சரித்தலால் வீடு என்னும் பெரும்பேற்றுக்கு ஏதுவாய்க் கொண்டு, என்றுமே அதன் பொருளை உள்ளுதலால் அப்பொழுதைக்கப் பொழுது ஆராவமுதப்பெருக்கில் ஒருக்கால் உச்சரித்தவனைப் பேறுபெற்றானாக்குகையால் த்வயம் போக்கியம் ஆகும். “நன்புகழில்-வைகுந்தம் சிந்தையினும் மற்றினிதோ, நீயவர்கு, வைகுந்தமென்றருளும் வான்”1 என்று இவ்வின்பத்தை சடகோபர் பாடியபடி. மேற்கூறிய பொருள்கள் எல்லாவற்றின் விளக்கத்தை ரஹஸ்யத்ரயஸாரத்தில் பரக்கக் காண்க.  அதில் உணர்த்தியிருக்கும் பொருள்களைப் பின்னும் இனிது விளக்கி வலியுறுத்தும் முறையில் மற்றைப்ரபந்தங்கள் அருளப்பெற்றுள்ளன.  இந்த ரஹஸ்யப்ரபந்தங்கள் அனைத்தும் இனிய முறையில் அவியகத்துறைகள் தாங்கிச் சவியுறத் தெளிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர்க்கு அமுதமாகும் நறுமை உடையன.  சில, கதை கூறும் முறையிலும், சில, கதைபோல், நிலைபேற்றைக் கூறும் முறையிலும், சில உபதேச முறையிலும், சில உபதேசப் பொருள்களை ஒழுகிக் காட்டும் முறையிலும், சில ஒழுக்கத்தை உணர்த்தும் முறையிலும், சில காவியம் படைக்கும் முறையிலும், சில சூத்திரம் நூற்கும் முறையிலும், சில வாதம நிகழ்த்தும் முறையிலும், சில ரஹஸ்யப்பொருள்கள் பொலிய உரையிடும் முறையிலும், பல்வேறு நன்முறைகளில், உணரவேண்டிய நற்பொருள்களைத் தனித்தனியாகவும், கூறுகூறாகவும், சேரப்பிடித்தும், சுருக்கியும் விரித்தும் வலியுறுத்தியும், சாந்திச்சுவை தலைமையாகச் சுவைகள் முதிர்ந்து பொருள் பொதிந்து அணிகள் மிளிர்ந்து குணங்கள் ஓங்கி ஓசைநயத்தில், கௌடவைதர்ப்பபாஞ்சாலரீதிகளில், செவிக்கினிய சீரிய யாப்புச் செறிவில் இம்மஹாதேசிகரது ரஹஸ்யப்ரபந்தங்களும் ரஹஸ்யப்ரபந்தப் பாடல்களும் பாடற்ப்ரபந்தங்களும் முறையே திகழ்கின்றன.  கற்பார் கேட்பார்களின் கல்விப் பயிற்சி, மனப்பான்மை, உருசி, நிலைமை, முதலியவற்றுக்கு ஏற்றவாறு இந்நூல்கள் தொடுக்கப்பெற்றுள்ளன.  வசன யாப்புக்களின் நடையெழிலை இப்ரபந்தங்களிற் காண்க.
நாளை நிறைவுறும்.