இறைவன் புரிந்துள்ள உபகாரங்கள் உயிர்கள் சரணம் புகுதற்கே
உளவாக்கப்பட்ட உயிர்ப்பொருள்கள் தன்னடிக்கீழ் ஒருக்காற் சரணம் புகுந்து வாழாவோ என்ற கருணைப் பெருங்கடலாய் ஊழிவெள்ளத்திலும் ஒழிந்து போகாதே அவற்றைத் தனது குக்கியில் தானே வைத்துக் காத்துப் படைப்பைச் செய்யக் கருதி அவைகளை உளவாக்கி உணர்வளித்து அவற்றுக்குத் தான் உள்ளுயிராய் உறைந்து காத்துவிளங்கும் இறைவனுடைய கிடைகளையும் நிலைகளையும் உணர்ந்தக்கால், உயிர்ப்பொருளானது கூப்பியகையும் அடிவீழ்ச்சி விண்ணப்பமுமே தஞ்சமாக விடலரிய திருமாலின் தாளைப்பற்றி அதன் கீழமர்ந்து புகாது நில்லா. அவனது அக்கிடைகளைக் கண்டு உருகிய சடகோபர் திருப்பாடல் ஒன்றை இங்கு எடுத்துக்காட்டுவாம்:- திருவுருவுகிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும், பொருவிலுன் தனிநாயகமவை கேட்குந்தோறும் என்நெஞ்சம் நின்று நெக்கு, அருவி சோரும் கண்ணீர் என்செய்கேன்! அடியேனே”1 என்றது அப்பாடல். உகாந்தத்தில் இறைவன் தனது படைப்பு அனைத்தையும் பேரொழித்து உரு நீக்கி ஊழிப்பெருவெள்ளத்தை ஆக்கி அதில் தனிமாத் தெய்வமாய் யோகு செய்கின்றான். யோகு என்பது அறிதுயில். உணர்வற்றுத் துயில்வன பேருருக்கலைந்த உயிர்பொருள்களே. இறைவன் உணர்ந்தவண்ணனாயே இருக்கின்றான். ஆயினும் அவன் யோகநித்திரை செய்கின்றான் என்று மறைகள் ஓதுகின்றன. சரீரங்களாகிய உயிர்ப்பொருள்களின் உறக்கம் சரீரியாகிய இறைப்பொருளின் மேல் நின்றது. இறைவனது ஸர்வசரீரித்தன்மையை உணர்த்தற்கு ஈதுமோர் தக்க சான்றாகும். ஆதலால், ‘அறிதுயிலமர்ந்தோன்’ என்பது இறைவனுடைய பெயராயிற்று. உயிர்ப்பொருள்கள் படைப்புநாள் தொடங்கி, தனது ஏவலை ஓர்ந்து ஒழுகித் தன்னைத்தாள் பற்றாது, தம்மனம்போன போக்கிலேயே ஒழுகிப் பாவத்தைப் பெருக்கி, ஸம்ஸரித்துப்போரும் படிகளை நோக்கி, அப்பெரும்பாவங்கள் கழுவாய்களாலும் வருங்கால அநுபவங்களாலும் ஒழித்தற்கு ஒண்ணாமையை எண்ணி, உயிர்ப்பொருள்கள் பின்னும் தம்போக்கிலேயே போய் அழிந்தொழியாதிருத்தற்பொருட்டு அவற்றின் உருக்களைக் கலைத்து பேர்களை நீக்கி அவைகளுக்குப் புத்துருப்பூட்டிப் பேரிடக்கருதி இறைவன் ப்ரளயம் என்னும் நீக்கற்செயலைச் செய்கிறான். நீக்கலும் காக்கும் இறைவனுடைய அருளின் செயலே. “படைப்புநாள் தொடக்கமாகப் படிப்படி மிகுத்துப் பின்னும், கடைப்படச் செய்யும் வையக் கடுவினை தடிக்கும் பாவம், தடைப்படத் திருவி னாதன் கருணை! நீ தருண நோக்கி, முடிப்பெனப் பார்துடைக்கும் ஒருதிருக் கேளி செய்வாய்”2 என்று நீக்கல் என்னும் இறைவனுடைய அருளிச்செயல் ஆக்கல் என்னும் அருளிச்செயலின் தொடக்கமாதல் காண்க. நோக்கும் இயல்வினனாகிய இறைவனுடைய அருளிச்செயல்களே ஆக்கலும் நீக்கலுமாம். அவ்வாறு ஊழிவெள்ளத்தில் உயிர்களெல்லாம் பேருருவொழிந்து உணர்வழிந்து செயலற்று, இறைவனது சரீரம் என்னும் தன்மையாலுங்கூடப் பிரித்துப் பேரிடவொண்ணாவாறு சடத்தோடு சடமாய் மண்டிக்கிடக்க அறிதுயிலமர்ந்த இறைவன் தானே ஊழிகழிய விழித்து அவ்வுயிர்களின் பால் அருள்நோக்கைப் புரிகின்றான். அருள்சுரக்க மெய் கறுக்கின்றான். துன்னிய தன்திரு என்னும் மன்னியமங்கலமின்னொடு பசும்பொன்மேனியனாய் மிளிர்கின்றான். பல்கும் கருத்தில் பச்சைமாமாலைபோல் மேனியனாய். செய்யதாமரைக்கண்ணனாய் உயிர்களுக்கு இரங்கி அவற்றை உற்றுநோக்குகின்றான். கருப்பொருளாகின்றான், கரியமேனியனாய் நிகழ்கின்றான், ஆரருள் சுரக்கும் அறநிறம் பூக்கின்றான், பூத்துக்கருதி எரிநீர் மண் எனப் பூரிக்கின்றான், பூரித்து அண்டமாகிய பொன்முட்டையை இடுகின்றான், அடைகாக்கின்றான், அண்டப்படைப்பு என்னும் தொகைப்படைப்பைத் தானே ஆக்குகின்றான், அதன்பின், தனது உந்திக்கமலத்தில் உயிர்த்தொகைப் பொருளாகிய நான்முகன் என்னும் குஞ்சைப் பொறிக்கின்றான். அந்தக்குஞ்சுக் கடவுளுக்கு வேதமாகிய அம்மத்தை ஊட்டுகின்றான். அக்குஞ்சுக்கடவுளின் கருவுள் வீற்றிருந்து வகைப்படைப்பு என்னும் நாமரூபவ்யாகரணத்தை (பேருருவமைப்பை)ப் பணிக்கின்றான், உள்கலக்கின்றான், செய்தொழில்களைப் பாகுபடுத்துகின்றான், அறநெறிகளை நிறுவுகின்றான். உயிர்கள் உகமுடிவில் உணர்வழிந்து சடத்தோடு சடமாய் மண்டிக்கிடந்த செயலற்ற கிடையையும், இறைவன் யோகில் அவற்றைத் தன்குக்கியில் வைத்துக் காத்தருளிய இறைக்கிடையையும், பின்னர் இவைகளை உள்வாக்கி நாமரூபவ்யாகரணம் செய்து உள்கலந்தருளிய இறைநிலையையும் கண்டு உருகிய சடகோபருடைய திருப்பாடற்பொருளை இவ்வாறு உள்ளி உணர்க. அக்கிடையெல்லாம் கிடந்து தனது உயிர்க்காதற்பொருள்களை உள்ளுயிர்க்காதலனான தானே நற்பாலாகிய வீட்டுப்பாலுக்கு உய்த்துத்தன்னடிப்பாலாக்கும் திருவுள்ளத்தால், தான் புரிந்துள்ள எண்ணரிய அருளிச்செயல்களின் பரம்பரைகளெல்லாம் ஒருகுளப்படியாமாறு. அவைகளின் உய்வண்ணமுகந்த திருவுள்ளக்கருணைப் பெருங்கடற் கண்ணனாய் சரண்ய தீக்ஷை கொண்ட ஸித்தோபாயனாய் “ஆரோ வருவார்” என்று சரணாகதன் வரவுபார்த்த வண்ணனாய் அர்ச்சாஸமாதியில் நிலைகொண்டு விளங்காநின்றான். ஒருக்காலே சரணம் அடைகின்றவர்க்கு அபயம் அளிக்கும் விரதம் பூண்டுவிளங்கும் வண்ணமே சரண்யவண்ணம். இவ்வண்ணத்தை இம்மஹாதேசிகர் பாடியருளிய வண்ணம்:-
ஒருக்காலே சரணாக அடைகின் றாற்கும்
உனக்கடிமை ஆகின்றேன் என்கின் றாற்கும்
அருக்காதே அனைவர்க்கும் அனைவ ராலும்
அஞ்சேலென் றருள்கொடுப்ப னிதுதா னோதும்
இருக்காலு மெழின்முனிவர் நினைவி னாலும்
இவையறிவார் செயலுடனென் னிசைவி னாலும்
நெருக்காத நீள்விரத மெனக்கொன் றென்னும்
நெறியுரைத்தார் நிலையுணர்ந்து நிலைபெற் றோமே.3
இறைவனைச் சரணம் அடைந்தே உயிர்ப்பொருள் நிலைபெறும். உயிர்ப்பொருள் நிலைபெறும் ஆறு சரணாகதி என்றது இதனாற் காட்டப்பட்டது. இது இறைவனைத்தாள் பற்றித் துயர் அறுக்கும் ஆறு ஆதலின் பேறே போல் இவ்வாறும் பேரின்பமாயே நிகழும். “அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடரிலனே”4 என்றும் “எல்லையில் ஞானத்தின் ஞானமஃதே கொண்டு எல்லாக் கருமங்களும் செய் எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர்துக்க மிலனே”5 என்றும் “கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடிலனே”6 என்றும், இறைப்பொருளைத் தாள்பற்றியே உயிர்ப்பொருள் துயரறுக்கும் நல்லாறே சரணாகதி என்றும் காட்டியருளிய ஆதிகுலபதியாகிய சடகோபர் இந்தசரணாகதிக்கு “மார்க்கதரிசி”யாய் (வழிகாட்டியாய்) விளங்குதல் காண்க. சரணத்தை இறைவன் நல்குகின்றான். சரணாகதியை சடகோபர் நல்குகின்றார். சடகோபர் தாமும் ஒழுகி தம்மடியாரையும் ஒழுகும்படி உபதேசித்தருளின் ஆறு இச்சரணாகதியாதலின் ப்ரபந்நர்களுக்கு (சரணம் புகுந்த அடியார்களுக்கு) சடகோபர் ஆதிகுலபதி ஆயினர். “ஆமுதல்வன்” ஆயினர். ஆதிகுலகுரு என்றது அதன் பொருள். ஆதிகுலபதி அருளினால் இம்மஹாதேசிகர் திருமாலைத்தாள் பற்றியதை:-
“மந்திரமும் மந்திரத்தின் வழியுங் காட்டி
வழிப்படுத்தி வானேற்றி அடிமை கொள்ளத்
தந்தையென நின்றதனித் திருமால் தாளில்
தலைவைத்தோம் சடகோப னருளி னாலே”7
என்று பாடியருளினார். ‘ஆரோ வருவார்’ என்று ப்ரத்யகாத்ம அவியை (உயிர்ப்பொருளாம் அவியை) உண்ணவே சரணியவிரதம் பூண்டுள்ள திவ்யதம்பதியார்களாகிய திருமாமகளும் திருமாலும் விளங்கும் வள்ளன்மையை “இவ்வேழுலகும் கொண்ட நம்திருமார்பன் நம்மாவியுண்ண நன்கெண்ணினான்”8 “ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக் கண்ட சதிர்கண்டொழிந்தேன் அடைந்தேன் உன்திருவடியே”9 “தடங்கொள்தாமரைக் கண்விழித்து நீஎழுந்து உன் தாமரைமங்கையும் நீயும் இடங்கொள் மூவுலகும் தொழ இருந்து அருளாய்”10 “நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு”11 “தரும வரும் பயனாய திருமகளார் தனிக்கேள்வன்”12 என்று கண்ணாரக் கண்டு “அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கை உறைமார்பா”13 என்று வாயார விளித்து, தான் தனது என்ற யாதொன்றினையும் காணாது, “நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்!” என்று திருமாலின் “துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்று”14 ய்யக் கடவனாய “அடியேன்” என்று தனது வேறுகதியற்றமையை விண்ணப்பம் செய்து அடைக்கலத்தவத்திருமூர்த்தியாய், “உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே”15 என்று சரணம் புகுந்து வன்பரம் மாய்த்துவிளங்கும் குலபதியாய்த் தமது அடியார்களை “அடியீர்”16 என்று அன்பாரக்கூவி “அடிக்கீழமர்ந்து புகுந்து வாழ்மின்”17 என்று சரணாகதியை உபதேசித்து சரணம்புகுந்து நல்வாழ்வு பெறுவீராக என்று வாழ்த்தியருளினார். ஆதலால் இம்மஹாதேசிகர் “தேற இயம்பினர்… ஆதியரே” என்றும் “அந்தண ரந்திய ரெல்லையில் நின்ற அனைத்துலகும்…. வந்தடையும் வகை… அன்பரறிந்தறிவித்தனரே” என்றும் போற்றினார். சரண்ய தம்பதிகளாகிய திருமகளார் திருவடியும் திருமாலார் திருவடியுமே சரணம், அதாவது உபாயம் என்று சடகோபர் ஓதியருளிய இந்த த்வயமந்திரப் பொருளை சடகோபர் பாசுரமாக லக்ஷ்மீகல்யாணம் என்னும் நாடகத்தில் பட்டர் அருளிச் செய்துள்ள ச்லோகத்தை இம்மஹாதேசிகர் ஸாரஸாரம் என்னும் ரஹஸ்யத்தில் எடுத்துக்காட்டியிருத்தல் காண்க. “இப்ரகாரத்தை ‘ஸ்வயம் வஸ்தூகுர்வந் ஜநமிம மகஸ்மாத் ஸரஸிஜ ப்ரகாரௌ பத்மாயா: தவ ச சரணௌ ந: சரணயந்’ என்று லக்ஷ்மீகல்யாணத்தில் நம்மாழ்வார் பாசுரமாக பட்டர் அருளிச்செய்தார்” என்றது ஸாரஸாரவாக்கியம். சடகோபர் திருவுள்ளவிளக்கமாய் பட்டர் அருளிச் செய்த இந்தச்லோகத்தின் தமிழ்:- “பொருளலாவிவனைத் தானோர் பொருளென அருளிலாக்கித், திருமலர் நிகர்த்த செய்யாள் திருவிரி சரணம் தானும், சரணமுன்னதுவும் தான் எம்சரணமென் றாக்கி…” என்பது. இவ்வாறு, த்வயமந்திரம் விளக்கும் சரண்யதம்பதியார் திருவடிகளின் உபாயஉண்மை தெளிக. திருமகளும் திருமாலும் ஸித்தோபயம். உயிர்ப்பொருள் புரியும் செய்தவமாகிய சரணாகதி ஸாத்யோபாயம். சரண்யவசீகாரமாய் உயிர்ப்பொருளுக்கு ப்ரபத்தியை ஸாத்யமாக விதித்துள்ளது. “அவன்வசீகரணம் அவன்பாற்சரணாகதியே”18 என்றது எம்பெருமானார் அறுதியீடு. சரண்ய தம்பதிகளே ஸித்தோபாயம். சரண்யவசீகாரமே ஸாத்யோபாயம். அது சரணாகதி. அதன் வசீகாரத் தன்மையையும் அதனால் வசீகரிக்கப்பெற்ற சரண்ய தம்பதிகள் பேறளிக்கும் வள்ளன்மையையும்:-
“இமையவர் பதமுங் கைவல் லியமுமந் தாமந் தானும்
சமையவே நல்கி யாங்கோர் அஞ்சலிப் பரஞ்சு மந்தாற்
கமையவே தொன்று மன்னாற் காற்றிலே னென்று வெள்கி
அமைதிநீ ஆதி யெம்மோய்! ஆமிதோர் வண்மையோ? சொல்”19
என்று பட்டர் விளக்கி அருளினார். திருமகளாரின் உபாயவள்ளன்மை இதனால் தெளியக்காட்டப்பட்டது. திருமகளும் திருமாலும் ஸித்தோபாயம், அவர்கள் வசீகாரம் ஸாத்யோபாயம் என்னும் சரணாகதி என்றது காண்க
1 | திருவாய்.5.10.8 |
2 | தயாசதகம் 16 (தமிழ் செய்தது திருவருண்மாலை) |
3 | அமிர்தஸ்வாதினி 16 |
4 | திருவாய் 3-10-4 |
5 | திருவாய் 3-10-8 |
6 | திருவாய் 3-10-10 |
7 | அமிர்தஸ்வாதினி 28. |
8 | திருவாய் 9-5-5 |
9 | திருவாய் 4-9-10 |
10 | திருவாய் 9-2-3 |
11 | திருவாய் 9-2-1 |
12 | திருவாய் 1-6-9 |
13 | திருவாய் 6-10-10 |
14 | திருவாய் 3-10-6 |
15 | ஸாரஸாரம் த்வயாதிகாரம் |
16 | ஸ்ரீபாஷ்யம் அநுமாநிகாதிகரணம் |
17 | குணரத்நகோசம் 58. (தமிழ் செய்தது) |
18 | ஸ்ரீபாஷ்யம் அநுமாநிகாதிகரணம் |
19 | ஸ்ரீகுணரத்நகோசம் 53 (தமிழ் செய்தது) |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக