புதன், 22 டிசம்பர், 2010

ஆருத்ரா தரிசனம்

இன்று உலகெங்கும் உள்ள சிவ பக்தர்கள் உவகையுடன் கொண்டாடும் ஆருத்ரா தரிசனத் திருநாள். எங்கள் இராமநாதபுர மாவட்டத்தின் மிகப் பெரிய திருநாள். சிதம்பரத்திலே அம்பலத்தில் ஆடிய சிவன் இங்குள்ள திருஉத்திரகோசமங்கை யிலே அறையில் ஆடி, சிவகாமியை மகிழ்வித்த திருத்தலம். மாணிக்கவாசகரை ஆட்கொண்ட திருத்தலம். மார்கழி ஆதிரை நாளிலே இரவெலாம் அபிஷேகங்கள் கண்டு சந்தனக் காப்பு சாத்திக் கொள்ளும் உன்னத நாள். நாட்டின், ஏன் உலகின் பல பகுதிகளிலிருந்தும் கூட, பக்தர்கள் பல்லாயிரக் கணக்காய் வந்து தரிசனம் காணும் திருநாள் இது. ஆறடி உயர மரகதத் திருமேனி. பார்ப்போரை எப்படிச் செதுக்கினரோ என வியக்க வைக்கும் அற்புதக் கலைப் படைப்பு. மத்தளம் அதிரத் தெறிக்கும் மரகதக் கல்லிலே உளி கொண்டு செதுக்கிய நம் முன்னோர்களின் ஈடில்லா திறமைகளுக்கு ஒரு ஒப்பற்ற சான்று. வருடம் முழுவதும் சந்தனக் காப்புடன் இருக்கும் இந்த ஆடல்வல்லானை இன்று ஒரு நாள் மட்டுமே தரிசனம் காண முடியும் என்பதால் குவியும் பக்தர் கூட்டம். அரசு உள்ளூர் விடுமுறை அளிக்கும் அளவுக்கு மக்கள் குவியும் பெரும் திருநாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக