வியாழன், 25 பிப்ரவரி, 2010

முதல்வருக்கு நன்றி!

நேற்று தினமணியில் திரு வைத்தியநாத அய்யரைப் பற்றிய செய்தி படித்தவுடன் முதல்வர் திரு. கருணாநிதி மிக வேகமாகச் செயல்பட்டு வருந்திய உள்ளங்களையெல்லாம் வாயாற வாழ்த்தும்படி நடவடிக்கை எடுத்துள்ளார். இன்றைய தினமணி செய்தியைப் படியுங்கள்!

முதல்வருக்கு நன்றி! 
புதுப்பிக்கப்பட்டது 
                        மதுரை வைத்தியநாத அய்யர் சிலை







மதுரை, பிப். 24: அரிசன மக்களின் மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தவரும், சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவருமான அ.வைத்தியநாத அய்யர் சிலை வளாகம் பராமரிப்பின்றி இருப்பது குறித்து தினமணியில் புதன்கிழமை செய்தி வெளியிடப்பட்டது.
  இதையடுத்து, உடனடியாக சிலை வளாகத்தைப் புதுப்பிக்க தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அதன்படி சிலை வளாகம் புதுப்பிக்கப்பட்டது.
  தினமணி செய்தி அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தியாகிகளும், பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.
  அரிசன மக்களின் முன்னேற்றத்துக்கும், அவர்கள் ஆலயத்துக்குள் சென்று வழிபடவும் அயராது போராடியவர் தியாகி வைத்தியநாத அய்யர்.
  மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் அரிசன மக்களை அழைத்துச் சென்று ஆலயப் பிரவேசம் செய்த அவரது 55-வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு யாரும் மரியாதை செலுத்தவில்லை. மேலும், சிலை வளாகம் பராமரிக்கப்படாமல் இருப்பது குறித்தும் தினமணியில் புதன்கிழமை செய்தி வெளியானது.
  அதிகாலையில் செய்தி வெளியான சில நிமிடங்களில், முதல்வர் இல்ல தொலைபேசி சுறுசுறுப்பானது. தீண்டாமைக்கும், சாதிக் கொடுமைக்கும் எதிராகப் போராடிய ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியின் சிலைக்கு நேர்ந்த அவலநிலையை நினைத்து மனம் வருந்திய முதல்வர், தவறு ஏன், எப்படி நேர்ந்தது என்று அதிகாலையிலேயே தட்டிக்கேட்க முற்பட்டார் என விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து மதுரை மாநகராட்சி மேயர் தேன்மொழியை முதல்வர் கருணாநிதி தொலைபேசியில் தொடர்புகொண்டு, வைத்தியநாத அய்யர் சிலை வளாகத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
  மேலும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடமும், வைத்திநாத அய்யர் சிலை பராமரிப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் சிலையை உடனடியாக சீரமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மேயர் தேன்மொழியை அறிவுறுத்தினார்.
  இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகராட்சி மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன், மாநகராட்சி ஆணையர் செபாஸ்டின் ஆகியோர் வைத்தியநாத அய்யர் சிலை அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோயில் அருகே உள்ள மாநகராட்சி பூங்காவுக்கு விரைந்துவந்தனர்.
  அங்கு சிலை வளாகத்தில் குவிக்கப்பட்ட காய்கறி மூட்டைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். பின்னர் சிலையை மறைத்திருந்த மரக் கிளைகளும் வெட்டப்பட்டன. சிலை பீடத்தில் புது வர்ணங்கள் பூசப்பட்டன. இதனால் சிலை வளாகம் புதுப்பொலிவு பெற்றது.
  அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வைத்தியநாத அய்யர் சிலை பராமரிப்பு இன்றி உள்ளதாக தினமணியில் வந்த செய்தியை அடுத்து, சிலை வளாகத்தை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலை வளாகத்தில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட உள்ளன. சிலைக்கு மாலை அணிவிக்க ஏதுவாக ஏணி அமைக்கப்படும். மாநகராட்சி சார்பில் ஊழியர் நியமிக்கப்பட்டு, சிலை வளாகம் தொடர்ந்து பராமரிக்கப்படும். மேலும், சிலை அருகே வைத்தியநாத அய்யர் வரலாறு, அவரது தியாகம், ஆலயப் பிரவேசம் உள்ளிட்ட விவரங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் தகவல் பலகையாக அமைக்கப்படும் என்றார்.
  முதல்வரின் பார்வையிலிருந்து எந்தவொரு செய்தியும் தப்பாது என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்த இந்த சம்பவம், மக்கள் மத்தியிலும் குறிப்பாக சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மத்தியிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
  வைத்தியநாத அய்யருடன் பணிபுரிந்த ஆண்டியப்பன் உள்ளிட்ட ஏராளமான முதிய சுதந்திரப் போராட்டத் தியாகிகள், புதுப்பொலிவு பெறும் சிலையை ஆனந்தக் கண்ணீருடன் பார்த்து மகிழ்ந்து கூறியது நெஞ்சை உருக்கியது.
  முதல்வரின் நேரடித் தலையீடு இல்லாமல் இது நடந்திருக்காது என்று அவர்கள்  தங்களுக்குள் பேசிக்கொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக