Thursday, February 25, 2010

தியாகத்தின் சம்பளம் இதுதானா? தினமணி குமுறல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகேயுள்ள பூங்காவில் பராமரிப்பின்றி 
குப்பைகளுக்கு இடையே உள்ள வைத்தியநாதய்யர் சிலை


மதுரை,பிப்.​ 23: அரிசன மக்களுக்கும்,​​ தேச விடுதலைக்கும் தன்னை அர்ப்பணித்த ​ வைத்தியநாதய்யர் நினைவு நாளை முன்னிட்டு ​(பிப்.23) அவரது சிலைக்கு மாலை அணிவிக்க யாரும் முன்வராதது 
தியாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அரிசன மக்களை அழைத்துக் கொண்டு துணிவுடன் ஆலயப்பிரவேசம் செய்த அந்த தியாக சீலரை காங்கிரஸார் உள்ளிட்ட பலரும் மறந்து போனது மக்களை வேதனையடையச் செய்துள்ளது.
தஞ்சை மாவட்டம் விஷ்ணாம்பேட்டையில் அருணாசலம் அய்யர்-லட்சுமி அம்மாள் மகனாகப் பிறந்த வைத்தியநாதய்யர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும்,​​ மதுரைக் கல்லூரி மற்றும் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தார்.​ பின்னர் வழக்கறிஞர் ஆனார்.
புகழ்பெற்ற வழக்கறிஞரான அவர் செல்வம் ஈட்ட வாய்ப்பு கிடைத்தபோதும் அதைவிடுத்து நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தன்னையும் தனது குடும்பத்தையும் ஈடுபடுத்திக் கொண்டார்.
வேதாரண்யத்தில் நடந்த உப்புச்சத்தியாக் கிரகத்தின்போது ராஜாஜி கைதான பின் அங்கு நடந்த கூட்டத்தில் வைத்தியநாதய்யர் தடையை மீறிப் பேசினார்.​ அப்போது "புளியமர விளாரால்' அய்யரை தாக்கிய ஆங்கிலேயப் போலீஸார் அவரை சுமார் அரைகிலோ மீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று சித்திரவதை செய்தனர்.​ உடலெங்கும் காயத்துடன் சிறையிலும் அடைத்தனர்.
கள்ளுக்கடை மறியல்,​​ சட்டமறுப்பு இயக்கம் என ஒவ்வோர் விடுதலைப் போராட்டத்திலும் ஆங்கிலேயப் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டவர் ஆவார்.
விடுதலைப் போராட்டத்துக்கான செலவுக்காக தனது மனைவியின் நகைகளையும்,​​ வீட்டுப் பொருள்களையும் அடகுவைத்தும்,​​ விற்றும் பணம் அளித்தவர்.​ நீதிமன்ற அபராதத்துக்காக ஆங்கிலேய அரசு அவரது கார் மற்றும் சட்டப்புத்தகங்களை ஜப்தி செய்துள்ளது.
தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தனது மனைவி அகிலாண்டம்மாளை ஈடுபடச் செய்தார்.​ இதனால் அகிலாண்டம்மாள் பல மாதம் வேலூர் சிறையில் கடும்தண்டனையும் அனுபவித்தார்.​ தனது இளையமகன் சங்கரனையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவைத்தார்.​ சங்கரனும் பலமாதம் சிறையில் வாடினார்.
வைத்தியநாதய்யர் அலிப்புரம் சிறையில் இருந்தபோது அவரது மூத்த மகன் இறந்தார்.​ இதனால் அவரால் மகன் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க முடியவில்லை.​ மகளின் திருமணத்தைக்கூட சிறை தண்டனை பரோல் காலத்திலேயே நடத்தமுடிந்தது.​ அந்த அளவுக்கு சுதந்திரத்துக்காக சிறையில் பல ஆண்டுகள் கொடுமை அனுபவித்த "தியாகதீபம்' வைத்தியநாதய்யர்.​ அரிசனசேவக சங்கத்தின் தலைவராக திகழ்ந்த அவரது வீட்டில் எப்போதும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்தனர்.​ அவர் தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயத்துக்குள் அழைத்துச் செல்வதில் தீவிரமாக இருந்தார்.
1934 -ல் மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு அரிசன மக்களை தம்மோடு அழைத்துச் சென்ற அவர் நாகநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்யவைத்தார்.​ இதுபோல பல கோயில்களுக்கும் அரிசன மக்களை அழைத்துச் சென்றார்.​ 1939 ஜூலை 8 -ம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் அவர் தன்னுடன் 5 அரிசனங்களையும்,​​ நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் அழைத்துச் சென்று ஆலயப்பிரவேசம் செய்தார்.
ஆலயப்பிரவேசம் செய்தால் வைத்தியநாதய்யரைக் கொன்றுவிடுவதாகக் கூட சிலர் மிரட்டியுள்ளனர்.​ ஆனால் எதற்கும் அஞ்சாமல் அவர் அரிசன மக்களுடன் தனது ஆதரவாளர் புடைசூழ ஆலயப் பிரவேசம் செய்தார்.
இதற்காக அவர் பிராமணர்களால் சாதி விலக்கம் செய்யப்பட்டார்.​ ஆனாலும் அவர் சோர்ந்துவிடவில்லை.​ அரிசன மக்களின் உரிமைக்காக அவர் தீவிரமாகப் போராடினார்.
முன்னதாக ஆலயப் பிரவேசத்தை ஆதரித்து நடந்த மதுரைக் கூட்டத்தில் பெரியார் பங்கேற்றபோது அவரது மேடையில் தீவைத்தனர்.​ அப்போது மேடைக்கே ஓடிவந்து பெரியாரை தனது காரில் அழைத்துச் சென்று காப்பாற்றியவர் வைத்தியநாதய்யர்.
நாட்டுக்கும் அரிசன மக்களுக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்த வைத்தியநாதய்யர் மேலூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்து மக்கள் நலப்பணிகளைச் செய்துள்ளார்.
தியாகச் சீலரான வைத்தியநாதய்யர் 1955 பிப்ரவரி 23 -ல் உயிரிழந்தார்.​ அவருக்கு மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே உள்ள பார்க்கில் 26.8.1975-ல் சிலை அமைக்கப்பட்டது.​ அப்போதைய மதுரை மேயர் முத்து தலைமையில் மாநில மேலவை துணைத் தலைவர் ம.பொ.சிவஞானம் சிலையைத் திறந்துவைத்தார்.
அச்சிலையை தற்போது போதிய பராமரிப்பு இன்றி உள்ளது.​ அங்குள்ள காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் தங்களது காய்கறிகளை சேர்த்துவைக்கும் இடமாக வைத்தியநாதய்யர் சிலை கீழ்ப்பகுதியைப் பயன்படுத்திவருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை ​(பிப்.23) வைத்தியநாதய்யரின் நினைவு நாளாகும்.​ ஆனால் அவரது சிலைக்கு அரசு சார்பிலோ,​​ காங்கிரஸார் சார்பிலோ யாரும் சிறிய மாலை அணிவிக்கக்கூட முன்வரவில்லை.
அதைவிடக் கொடுமை தியாகிகள் பலர் இதுகுறித்து ஆதங்கம் தெரிவித்தார்களே தவிர அவர்களும்கூட வைத்தியநாதய்யர் சிலையை சுத்தம் செய்யவோ,​​ மாலை அணிவிக்கவோ வரவில்லை.
தமிழகத்தில் அரிசன மக்களுக்காக பாடுபடுவதாக ஒவ்வோர் கட்சியினரும் கூறுகின்றனர்.​ இன்றும் அரிசன மக்களுக்கு முழுமையான உரிமைகள் கிடைக்கவில்லை என்றும் பலரும் கூக்குரலிடுகிறார்கள்.
ஆனால்,​​ நாட்டுக்காக தன்னை மட்டுமல்லாது,​​ தனது குடும்பத்தையே அர்ப்பணித்த வைத்தியநாதய்யர்,​​ பலத்த எதிர்ப்புக்கிடையே உயிருக்கும் அஞ்சாமல் அரிசன ஆலயப்பிரவேசம் மேற்கொண்டாரே!​ அவரது தியாகத்தை நினைவூட்டக்கூட யாரும் முன்வரவில்லையே!
அவரது சிலையை நாம் படமெடுத்தபோது,​​ அங்கிருந்த வியாபாரிகள் பலரும் இவர் யார்?​ எதற்காக இங்கு சிலை வைத்துள்ளனர்?​ எனப் பல கேள்விகளை எழுப்பினர்.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளை மதிப்பதாகக் கூறும் தமிழக அரசும்,​​ அரிசன மக்களுக்காக பாடுபடுவதாகக் கூறிவரும் முற்போக்காளர்களும் இந்த தியாகச் செம்மல் வைத்தியநாதய்யரை மறந்திருப்பது எந்தவகையில் நியாயம்?