Sunday, October 4, 2009

STARS வழியே திவ்ய தேசங்கள்

ஸ்ரீவைஷ்ணவர்களாகப் பிறந்தோர் எல்லோருக்கும் வேறு எதில் ஒற்றுமை உண்டோ இல்லையோ,வாழ்நாளில் இந்நில வுலகில் உள்ள 106திவ்யதேசங்களுக்கும் சென்று அங்கு உள்ள எம்பெருமான்களையெல்லாம் ஸேவிக்க வேண்டும் என்பதில் மட்டும் நிரம்ப ஆசை உண்டு.அவர்களில் தனியாக யாத்திரை செய்பவர்கள் பலருக்கு சரியாகத் திட்டமிட முடியாததால் ஏற்படும் சிரமங்கள் சொல்ல முடியாதவை.அதிலும் மலைநாடுகளுக்கோ,வட தேசங்களுக்கோ செல்பவர்கள் மொழிப் பிரச்சினையாலேயே நொந்து போவதும் உண்டு.

இப்படிஆசைப்பட்டு ஆனால் தனியாகப் போக முடியாதவர்கள் அல்லது துணியாதவர்களுக்கு உதவ இப்போது நாட்டில்  அதிலும் நம் தமிழ் நாட்டில் பலர் திவ்ய தேச யாத்ரை ஸ்பெஷல் ஏற்பாடு செய்து உதவி வருகின்றனர். எல்லாத் தொழிலிலும் உள்ளது போலவே இதிலும் சிலர் நம்பி வந்தவர்களை ஏன்தான் வந்தோமோ என நோகடிப்பதும் அடியேன் இங்கு கண்டு வருவது.

   நல்லவிதமாக இந்தப் பணியைச் செய்து வருபவர்களில் பலர் இதை தங்களின் ஜீவனத்துக்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி வரும் நிலையில் (இதை அடியேன் குறையாகச் சொல்ல வில்லை. அதில் தவறேதும் கிடையாது) ஓரிரு குழுவினர் இதை ஒரு ஸேவையாகச் செய்து வருகின்றனர். இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வேறு சில உன்னதமான கைங்கர்யங்களையும் செய்து வருகின்றனர். அவர்களுள் குறிப்பிடத் தக்க ஒரு குழு STARS. Sathyanarayana Tours And Religiuos Services என்பதன் சுருக்கம் STARS. அதை இயக்கும் மும்மூர்த்திகள் பாலாஜி, மற்றொரு பாலாஜி, வெங்கடேஷ் ஆகியோர். மூவருமே மிக நல்ல உத்யோகங்களில் இருப்பவர்கள். அவர்கள் பணியாற்றும் இடங்களில் முக்கியமான பொறுப்புகளிலும் இருப்பவர்கள். இவர்கள் மூவருமே, முன்பு குறிப்பிட்டேனே அப்படி ஒரு குழுவிடம் “மாட்டிக் கொண்டு” நொந்து நூலானவர்கள். அந்த அனுபவம் நாமே இந்த ஸேவையை நல்ல விதமாகச் செய்தால் என்ன என்ற சிந்தனையை இவர்களிடம் ஏற்படுத்தி கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ஸேவையை நடத்த வைத்திருக்கின்றது. சிந்தனை பிறந்த இடம் சென்னை மாம்பலம் ஸ்ரீ ஸத்யநாராயணப் பெருமாள் திரு முன்பு. எனவே அவரது பரிபூரண அநுக்ரஹம் இவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.

  என்ன ஸ்பெஷாலிடி?  முதலில் இந்த “புஷ்பேக் ஸீட், ஏர்பஸ், முதலில் வருவோருக்கு முன் ஸீட் “ இத்யாதி எல்லாம் கிடையாது. எல்லாருக்கும் வசதியாக தமிழ்நாட்டுக் குள்ளேயானாலும் சரி, வெளி மாநிலங்களானாலும் சரி இரயிலில் முன்பதிவு செய்து அழைத்துச் செல்வதும், அங்கிருந்து மிக அருகாமையில் உள்ள இடங்களுக்கு மட்டுமே வசதியான சிற்றுந்துகளில் கூட்டிச் செல்வதும் இவர்கள் வாடிக்கை. அழைத்துச் செல்பவர்கள் யாரும் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக பிராமணர்களுக்கு மட்டுமே அனுமதி. செல்கின்ற இடங்களில் எங்கு மிக வசதியாக இருக்குமோ அங்கு தங்க ஏற்பாடு. மிகச் சிறந்த ஸ்ரீவைஷ்ணவ பரிசாரகர்களைக் கொண்டு சுவையான தளிகை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக பார்க்கப் போகும் இடங்களில் அவஸ்யம் பார்க்க வேண்டியவற்றைப் பற்றி முன்கூட்டியே தெரிவித்து போதுமான கால அவகாசம் கொடுத்து அந்தந்த திவ்யதேச எம்பெருமான்களை வந்தவர்கள் மனம் நிறைவுடன் தரிசிக்க வைப்பது ஆகியவை இவர்கள் ஸேவைகளில் சில.

  இவற்றையெல்லாம்விட இம்மூவரும் ஆத்மார்த்தமாகச் செய்யும் ஒரு பெரிய கைங்கர்யமே மற்றவர்களிடமிருந்து இவர்களை வித்யாஸப் படுத்தி அடியேனையும் இங்கு எழுத வைத்துள்ளது. இப்படி இவர்கள் ஸேவையால் மனம் மகிழ்ந்து வருபவர்கள் தரும் நன்கொடைகள்,(இன்று இங்கே  ஒவ்வொருவரும் வேத வித்யார்த்திகளுக்கு அள்ளிக் கொடுக்க முன்வந்ததை அடியேனே நேரில் கண்டேன்) இவர்கள் கையிலே யாத்திரை முடிந்து மிஞ்சும் சிறு தொகை, இவற்றைக் கொண்டு ஒவ்வொரு தீபாவளிக்கும் ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரம வேத பாட சாலைகளில் உள்ள வித்யார்த்திகள், ஆசிரியர்கள், கைங்கர்யபரர்கள் அனைவருக்கும், மஞ்சக்குடியில் இருக்கும் வேதபாடசாலை மற்றும் ஸ்ரீஅஹோபில க்ஷேத்ர கைங்கர்யபரர்கள் அனைவருக்கும் வஸ்திரங்கள் கொடுக்கின்ற அருமையான கைங்கர்யத்தை கடந்த மூன்று வருடங்களாக செய்து வருகின்றனர்.  ஆக இவர்கள் மூலமாக திவ்ய தேச யாத்ரை செய்பவர்கள், மிக வசதியாகச் சென்று திவ்யதேசங்களை தரிசித்து புண்ணியம் தேடிக் கொள்வது மட்டுமின்றி வேதம் பயில்வோருக்கும் உதவி கூடுதல் பலன்களையும் அடைகின்ற பெரும் பாக்யசாலிகளாகவும் ஆகிறார்கள்.  வாசுதேவன் ஸ்வாமி! சரிதானே!

புது வஸ்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் எங்கள் திருப்புல்லாணி ஆச்ரம வித்யார்த்தியை இங்கு பாருங்களேன்!    

DSC03357

என்ன செய்கிறார்கள் என்பதை ஸ்ரீபாலாஜி இங்கே விவரிப்பதை சிறிது கேளுங்கள்.