திங்கள், 3 ஆகஸ்ட், 2009

Defer your emails

ஞாபகமறதி+சோம்பேறித்தனம் இரண்டுக்கும் உதாரணம் அடியேன். நண்பர் பிறந்த தினம் 22ம் தேதி என்று அடியேனுக்கு 15ம் தேதியே நினைவுக்கு வந்து விடும். 22 அன்று காலையில் முதல் காரியமாக நண்பருக்கு வாழ்த்து அனுப்ப வேண்டும் என்று 15ம் தேதியே முடிவும் செய்து விடுவேன். ஆனால் பாருங்கள் 21ம் தேதி காலை வரை அது ஞாபகத்தில் இருக்கும். 22ம் தேதி ஒன்று சுத்தமாக அதை மறந்தே போயிருப்பேன். அல்லது எங்காவது இணைய இணைப்பு கிடைக்காத இடத்தில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு வாழ்த்து அனுப்ப முடியாமல் தவிப்பதும் உண்டு. ஒரு சிலர் உரிமையோடு பின்னால் கூப்பிட்டு அடியேனிடமிருந்து வாழ்த்து எதிர்பார்த்து ஏமாந்ததைச் சொல்லும்போது அசடு வழிய (அப்போது மட்டும்தானா என்று மனதுக்குள் சிரிக்காதீர்கள்) நிற்பது அடியேன் வாடிக்கை.

எங்களை மாதிரி ஆசாமிகளை மேலும் சோம்பேறியாக்கிக் கெடுப்பதற்கென்றே இணையத்தில் பலர் இருக்கிறார்களே ! சும்மா இருப்பார்களா? வாழ்த்துன்னு இல்லைப்பா எந்த விதமான ஈமெயிலையும் நீ வழக்கமா எந்த மெயில்ல அனுப்புவியோ அதில எழுதி யாருக்கு என்னைக்கு எத்தனை மணிக்கு அனுப்பணும்னு எங்கள்ட்ட கொடுத்துடப்பா மிச்சத்தை நாங்க பார்த்துக்கறோம், உங்களுக்கு சேவை செய்யத்தானே நாங்க இருக்கோம்னு இந்த www.deferredsender.com வந்து நிற்கறாங்க. டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். சொன்ன வார்த்தையைக் காப்பாத்தறாங்கவளாத் தான் இருக்காங்க. கார்த்தாலே 7 மணிக்கு ஒரு மெயில் ஜிமெயில் அக்கவுண்ட்லே எழுதி பிற்பகல் 2 மணிக்கு என்னோட ஹாட்மெயில் அக்கவுண்டுக்கு அனுப்பச் சொல்லியிருந்தேன். சரியா வந்து சேர்ந்து விட்டது. இது நிறயப் பேருக்கு தேவைப்படாது. ஏன்னா எல்லாரும் அடியேன் மாதிரி சோம்பேறியா இருக்க முடியாது. ஆனாலும் ரொம்ப பிஸியா நேரமே காணல்லைன்னு உழைக்கிறவாளுக்கு இது உபயோகமாய் இருக்கலாம். இது இலவச சேவை. பதிந்து கொள்ள மட்டும் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக