Saturday, August 15, 2009

சரணாகதிமாலை இறுதிப் பகுதி

அக்ருத்யாநாஞ்ச கரணம்
க்ருத்யாநாம் வர்ஜநம் ச மே,
க்ஷமஸ்வ நிகிலம் தேவ
ப்ரணதார்த்திஹர ப்ரபோ (9)

(ப்ரணத ஆர்த்தி ஹர! சரணாகதர்களுடைய ஆர்த்தியைப் போக்குபவனே! ஆச்ரிதர்களுடைய அகில துக்கங்களையும் அறவே போக்குபவனே! ப்ரபோ! - ஸர்வஸ்வாமியே! ஸமர்த்தனாய் ஸ்வாமியானவனே! தேவ தேவனே! லீலாரஸப் ரவ்ருத்தனே! ஜகத் ஸ்ருஷ்டி முதலிய வியாபாரங்களை லீலையாகவுடையவனே! மே அடியேனுடைய : அக்ருத்யாநாம் - செய்யத்தகாதவைகளுடைய : கரணம் செய்தலையும் க்ருத் யாநாம் - செய்யத்தக்கவைகளின் செய்ய வேண்டுமவற்றினுடைய : வர்ஜநம் ச விடுதலையும்: நிகிலம் - இந்த அனைத்தையும் எல்லாவற்றையும்: க்ஷமஸ்வ பொறுத்தருள வேண்டும்.
அடைந்தவர்களுடைய வருத்தங்கள் அகற்றுபவனே! ஸர்வ விதமான சக்தி உடையவனே! தேவப்பெருமாளே! அடியேனது செய்யாதன செய்கை செய்ய வேண்டியதை விடுகையாகிய அனைத்தையும் பொறுத்து அருள வேண்டும்.
சரணாகதர்களுடைய துன்பம் அனைத்தையும் தொலைக்கும் ஸர்வ ஸ்வாமியான தேவாதி தேவனே! அடியேனுடைய அக்ருத்யம் செய்தலையும் செய்யத்தக்க க்ருத்யங்களைச் செய்யாது விடுதலையும் க்ஷமித்தருள வேண்டும்.
பாபங்கள் இரண்டு வகைப்படும். அவையாவன: அக்ருத்ய கரணம், க்ருத்யாகரணம் என்பன. சாஸ்த்ரங்களில் செய்யக்கூடாதன என்று விலக்கப்பட்டவைகளைச் செய்வது அக்ருத்ய கரணம். சாஸ்த்ரங்களில் அவசியம் செய்ய வேண்டியன என்று விதிக்கப் பெற்ற காரியங்களைச் செய்யாமல் இருப்பது க்ருத்யாகரணம். இவையனைத்தையும் ஸர்வ ஸ்வாமியாய் ப்ரணதார்த்தி ஹரனான தேவரீர் க்ஷமித்தருள வேண்டும் என்று பிரார்த்தித்தபடி. தேவ! "பொன்னகில் சேர்ந்தலைக் கும்புனல் வேகை வட கரையிற் றென்ன னுகந்து தொழுந்தேன வேதியர் தெய்வ மொன்றே (தேசிகமாலை பன்னிருநாமம். 10)
ஜகத்ஸ்ருஷ்டி முதலிய வியாபாரங்களை லீலையாகவுடையவன். "லோகவத்துலீலா கைவல்யம்" என்பது ப்ரஹ்மஸுத்ரம். மன்னர்கள் பந்தாடுவதை விளையாட்டாகக் கொண்டிருப்பது போல் பரமாத்மாவும் ஜகத் ஸ்ருஷ்டி முதலியவற்றை விளையாட்டாகக் கொண்டிருக்கிறார். அதனாலேயே இந்த உலகத்திற்கு லீலாவிபூதி என்று பெயர். ஸ்ரீ பாஷ்யகாரரும் "அகில புவந ஜந்ம ஸ்தேம பங்காதி லீலே" என்று அகில உலகங்களையும் உண்டாக்கி அளித்து, அழிப்பதையே லீலையாக உடையவன் பகவான் என்று அருளிச் செய்திருக்கிறார். பிள்ளை லோகாசாரியரும் "இதற்கு ப்ரயோஜநம் கேவலலீலை" என்றார். லீலை என்றால் விளையாட்டு. அஃதாவது அப்பொழுது உண்டாகிற ஆனந்தத்தையொழியப் பின்வரும் பலனை எதிர்பாராமல் செய்யப்படும் செய்கையே விளையாட்டு.
துன்பமும் இன்பமு மாகிய
செய்வினை யாய்உல கங்களுமாய்
மன்பல் லுயிர்களு மாகிப்
பலபல மாய மயக்குக்களால்
இன்புறு மிவ்விளை யாட்டுடை
யானைப்பெற் றேதுமல் லலிலனே.
(திருவாய்மொழி 3-10-7)
என்பர் நம்மாழ்வார்.
உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட் டுடையாரவர்
தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே.
(இராமாவதாரம் பாலகாண்டம் கடவுள் வாழ்த்து.1)
என்பர் கம்பநாட்டாழ்வான்.
"மநோ வாக்காயை ரநாதிகால ப்ரவ்ருத்த அநந்த அக்ருத்ய கரண க்ருத்யாகரண பகவதபசார பாகவத அபசார அஸஹ்யாப சாரரூப நாநாவிதா நந்தாபசாராந் ஆரப்தகார்யாந் அநாரப்த கார்யாந் க்ருதாந் கரிஷ்யமாணாஞ்ச ஸர்வாநசேஷத: க்ஷமஸ்வ."
(சரணாகதிகத்யம்)
(மனம் வாக்கு சரீரம் என்கிற மூன்று உறுப்புகளினாலும், அடி தெரியாத நெடுநாளாக விளைந்த அளவில்லாத செய்யத் தகாத காரியங்களைச் செய்தலும், செய்ய வேண்டியதைச்செய்யாதொழிவ தும், எம்பெருமான் திறத்தில் அபசாரப்படுவதும், அவன் அடியார் திறத்தில் அபசாரப் படுகையும், பொறுக்க வொண்ணாதபடி அபசாரப்படுகையும் ஆக இவ்வாறுள்ள பலவகைப்பட்ட கணக்கற்ற குற்றங்களை பலன் கொடுக்க ஆரம்பித்தவைகளையும், பலன் அளிக்க ஆரம்பியாமல் இருப்பவை களையும், முன்பு செய்யப்பட்டவைகளையும், செய்யப்படுகிறவைகளையும், செய்யப்போகிறவை களையும் இந்த அனைத்தையும் அணுவளவும் மிஞ்சாதபடி பொறுத்தருள வேண்டும் என்று அருளிச் செய்திருப்பது இவண் அநுஸந்தேயம்)
ஸ்ரீமந் நியத பஞ்சாங்கம்
மத்ரக்ஷண பரார்ப்பணம்
அசீகர : ஸ்வயம் ஸ்வஸ்மிந்
அதோஹ மிஹ நிர்ப்பர: (10)

(ஸ்ரீமந் : திருமாமகள்கேள்வனான நாராயணனே! நியத பஞ்ச அங்கம் - நீங்காத ஐந்து அங்கங்களை உடையதான: மத் ரக்ஷண பர அர்ப்பணம் - அடியேனுடைய ரக்ஷாபர ஸமர்ப்பணத்தை : ஸ்வம் - தானாகவே ஸ்வஸ்மிந் - தன்னிடத்தில் அசீகர : செய்தீர் : அத ஆகையால் அஹம் - அடியேன். இஹ- அடியேனுடைய ரக்ஷணவிஷயத்தில் : நிர்ப்பர : - பொறுப்பில்லாதவனானேன். 'ஸ்ரீமாந்' 'அசீகரத்' என்பன பாடபேதங்கள். அப்பொழுது ஸ்ரீவிசிஷ்டனான நாராயணன் செய்து கொண்டான் என்பது பொருள்.
ஐந்து அங்கங்களோடு கூடின அடியேன் ரக்ஷிப்பதாகிற பரஸமர்ப்பணத்தைத் தானே தன்னிடத்திலேயே பெருந்தேவீ நாயிகாஸமேத தேவராஜன் செய்து கொண்டான். ஆகையினால் அடியேன் இங்கு எத்தகைய பாரமும் இல்லாதவனாக ஆகி விட்டேன். அடியேன் நிர்ப்பரன்.
ஸம்ஸார தொல்லைகளைப் போக்கும் பெருமை வாய்ந்த தேசிகர் கடாக்ஷத்தினால் வேறு வழியைப் பின்பற்றாமலும் செய்யாதன செய்வதில் துவக்கு அற்றவனாயும், உண்மை அறிந்து சங்கைகள் நீங்கி பேரருளாளரான தேவரீரைப் புகலாய்க் கொண்டு அடியேன் பாரத்தை வைத்து நிர்பரனாகவும், நிர்பயனாகவும் இருக்கிறேன்.
ஸ்ரீமந்நாராயணனே! அடியேனுடைய ரக்ஷாபர ஸமர்ப்பணத்தை தேவரீரை அடியேனைக் கொண்டு பண்ணி வைத்தீர். இனிமேல் இவ்விஷயத்தில் அடியேனுக்கு ஒரு பொறுப்பு இல்லை.
நியத பஞ்சாங்கம் - பிரபத்திக்கு ஆநுகூல்யஸங்கல்பம் முதலான ஐந்து அங்கங்களும் இன்றியமையாதன. இவ்வங்கங்கள் இல்லாவிடில் பிரபத்தி பலியாது என்றதாயிற்று.
'நிக்ஷேபாபரபர்யாயோ ந்யாஸ: பஞ்சாங்க ஸம்யுத:
ஸந்யாஸஸ்த்யாக இத்யுக்தச் சரணாக திரித்யபி.'
(லக்ஷ்மீதந்த்ரம் 17-74)
(நிக்ஷேபம் என்கிற மறு பெயரையுடையதும் ஐந்து அங்கங்களோடு கூடியதுமான பரந்யாஸம் ஸந்யாசம் என்றும் த்யாகம் என்றும் சரணாகதி என்றும் சொல்லப்பெற்றது)
தொடக்கத்தில் அஹம் மத் ரக்ஷணபரம் (1) என்றும் இறுதியில் ஸ்ரீமாந் (10) என்றும் அருளிச் செய்தபடியால் ஆத்யந்தங்களில் ஸாத்விகத்யாகம் செய்ய வேண்டும் என்பதாயிற்று.
நிர்ப்பர - இதனால் ரக்ஷ்ய வஸ்துவை அவன் பக்கலிலே ஸமர்ப்பித்துத் தான் நிர்ப்பரனாய் பயங்கெட்டு மார்பிலே கை வைத்துக்கொண்டு கிடந்து உறங்குகிறேன் என்றபடி.
(ஸாங்கமான பரஸமர்ப்பணத்தைத் தேவரீரே செய்து வைத்தருளினீர். ஆதலால் அடியேன் நிர்ப்பரனாய் இருக்கிறேன் என்று விண்ணம் செய்து தசகத்தைப் பூர்த்தி செய்கிறார் இதில்.)

_____ ந்யாஸதசகத்தின் வ்யாக்யனமான சரணாகதிமாலை----
நிறைவு பெற்றது.