வெள்ளி, 6 ஜனவரி, 2017

கோதாஸ்துதி

கோதா ஸ்துதி
ஸ்ரீ அன்பில் கோபாலாசாரியார்
1937ல்
ஸ்ரீவேதாந்த‌ தேசிக‌ ஸ்ரீஸூக்தி ச‌ம்ர‌க்ஷ‌ணீ
இத‌ழில் எழுதிய‌து.
சுலோக‌த்தின்
த‌மிழாக்க‌ம்
"ஸ்ரீ ஆண்டாள் மாலை"
சென்னை திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
வெளியீடு 11 (27-7-1941)

சுலோகம் 11
திக்தக்ஷிணாபி பரிபக்த்ரிம புண்யலப்யாத்
         ஸர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத் |
யத்ரைவ ரங்கபதிநா பஹுமாநபூர்வம்
         நித்ராளுநாபி நியதம் நிஹிதா: கடாக்ஷா:||       (11)


பொன்னோக்குங் கோதாய்நீ போந்ததிசை மாலரங்கன்
தன்னோக்க மெய்துந் தரத்தினான் -- மன்னோக்கு
மண்ணிற் பயனளிக்கும் வண்மையினான் மாமுனிவர்
எண்ணுத் தரதிசை யாயிற்று.                 (11)


பதவுரை

         தேவி -- கோதாதேவியே! திக் தக்ஷிணாபி -- தெற்குத் திக்குங்கூட; பரிபக்த்ரிம்புண்யலப்யாத் -- பரிபக்குவமான புண்யத்தால் கிடைக்கத்தக்க; தவ அவதாராத் -- உன்னுடைய அவதாரத்தால்; ஸர்வோத்தரா -- எல்லா விதத்திலும் உத்தரமாய் (ச்ரேஷ்டமாய், வடக்காய்); பவதி -- ஆகிறது; யத்ரைவ -- எந்தத் திக்கிலேயே; நித்ராளு நாபி -- தூங்கிக்கொண்டிருந்தாலும்; ரங்கபதிநா -- ரங்கேச்வரரால்; பஹுமாந பூர்வம் -- பஹுமானத்தோடுகூட; நியதம் -- இடைவிடாமல்; (நியமமாக); காடாக்ஷ: -- கடாக்ஷங்கள்; நிஹித: -- வைக்கப்பட்டுளவோ?

         அம்மா கோதாதேவியே! பரிபாகமுடைய புண்யத்தால் பெறக்கூடிய உன் அவதார ஸம்பந்தத்தால், தென்திசைகூட வடகோடி திசையாயிற்று. (ஸர்வோத்தரமாயிற்று, ஸர்வ ச்ரேஷ்டமாயிற்று). ஏனெனில் அந்த திக்கில்தானே ரங்கபதியாகத் தூங்கிக்கொண்டிருக்கையிலும் கௌரவத்தோடு கடாக்ஷங்கள் இடைவிடாமல் நியதமாக வைக்கப்பட்டிருக்கின்றன!

         அவதாரிகை

         (1) நம்மாழ்வாரிலும் என் பிதா மஹத்தரரான பெயரை அடைந்தார் என்றீரே! என் பிதா வாங்கி என் மாலையை ஸமர்ப்பித்ததால் அப்படி அரும் பெரும் ஏற்றம் கிடைக்குமோ? அம்மா! இது என்ன ஆச்சர்யம்! நீ அவதரித்த மஹிமையால் தக்ஷிண திக்கும் ஸர்வோத்தரமாயிற்றே! ஓர் ஆழ்வார் உன்னை அவதரிப்பித்து வளர்த்த பிதாவானதால், மஹத்தரராவது அரிதோ? 'ஸர்வோத்தரம்' என்பதால் உத்தமமாயிற்று. ஓர் திக்கு நீ பிறந்த திக்கு என்கிற ஏத்தோ ஒரு ஸம்பந்தத்தாலே ஸர்வோத்தமாகையில், ஆழ்வாரான உன் பிதா நீ அவதரித்ததால், மஹத்தரராவது கொஞ்சமே என்று சொல்ல வேண்டும்.

         (2) பெருமாளுடைய அபிநவ தசாவதாரங்களான ஆழ்வார்களைப் பேசினார். இங்கே கோதைப்பிராட்டியான தேவி ஆழ்வார்களைப்போல பிரபந்தமியற்றிய கவியாக அவதாரம் செய்ததைப் பேசுகிறார்.

         திக் தக்ஷிணா அபி -- தென்திசை கூட; தென் திக்கின் அதிபதி 'பித்ருபதி' என்பர். அவர் பேரே நடுங்கச் செய்யும். பித்ருநாமத்தை உடையவராய் அதிஷ்டிதமான ஓர் திக்கின் ஓர் மூலையில் பிறப்பென்னும் ஸம்பந்தம்கூட பயத்தைக் கொடுக்கக் கூடிய திக்குக்கூட.

         பரிபக்த்ரிம புண்யலஹ்யாத் --  எத்தனை புண்யங்கள் பரிபாக தசையை அடைந்து இப்படிக்கொத்த பயனைக் கொடுக்கவேணும்! 'தர்மராஜர்' பயங்கரரென்று உலகம் பயந்தாலும், அவர் தர்மமூர்த்தியல்லவோ? தர்மம், புண்யம். அந்த திக்பதியின் மஹாபுண்யங்களெல்லாம் அந்தத் திக்கைச் சேர்ந்தது. பதியின் புண்யம் பத்நிக்குடையது.

         தேவி தவ் அவதாராத் -- தேவி! என்னுடைய திவ்யமான அவதாரத்தால், விபீஷணாழ்வார் அவதரித்ததும், அரசு செலுத்துவதுமான திக்கென்று முன்பு ஏற்றமுண்டு. நம்மாழ்வார் அவதரித்ததால், அந்தத் திக்கு முன்பே ஓர் ஏற்றம் பெற்றது. அந்த அவதாரமும் மஹாபுண்ய பரிபாகத்தால் ஸப்யம். ஆனால், அது தேவன் அவதாரம். பெருமாளோ, விஷ்வக்ஸேன தேவரோ நம்மாழ்வாராய் அவதரித்தார். இங்கே தேவியான உன்னுடைய அவதாரம். 'உன்னுடைய அவதாரக்ஷணத்திலிருந்து' என்றும் பொருள். விபீஷணர் தேவரல்ல.

         ஸர்வோத்தரா பவதி -- எல்லாவற்றிலும் சிரேஷ்டமாயாகிறது. தெற்குத் திக்கு வடகோடியாகி விடுகிறது என்பது ஆச்சரியம்! 'உத்தர' என்பது ச்ரேஷ்டத்தையும் சொல்லும், வடக்கையும் சொல்லும். 'ரொம்ப தூரம் கிழக்கே போனால், அது மேற்காகி விடும்' என்று ஓர் ஆங்கிலப் பழமொழி. 'கிழக்கும் மேற்கும் ஓரிடத்தில் சேரும்' என்பர். 'தெற்கும் வடக்கும் ஒருகாலும் சேராது, நித்திய விரோதிகள்' என்பர். உன் அவதார மஹிமையால் இளப்பமானது லோகோத்தரமாகும். சேராத விருத்தங்களும் விரோதத்தை விட்டுச் சேர்ந்து விடும்.

         யத்ரைவ -- எந்தத் திக்கை நோக்கியே

         ரங்கபதிநா -- "தென்னாடும் வடநாடும் தொழநின்ற திருவரங்கம்" என்பர். தென் நாட்டுக்கும் வடநாட்டுக்கும் மத்தியத்திலுள்ள ரங்கபதி. இரண்டு திக்குகளுக்கும் பொதுவாய்ப் பக்ஷபாதமில்லாமல் மத்தியஸ்தமாயிருக்க வேண்டியவர். அப்படி மத்தியஸ்தராக இருக்கவேண்டியவரான "ரங்கபதியாலேகூட" . திருவரங்கத் திருப்பதி மத்தியஸ்தமாய் இருப்பதுபோல அத்திருப்பதியின் பதியும் மத்தியஸ்தமாய் இருக்க வேண்டாவோ?

         பஹுமான பூர்வம் -- பஹுமானத்தோடுகூட. அரங்கத்தில் தூக்கம் நடனமேயம்மா! நீ பிறந்த திக்கென்று பஹுமதியாய் எண்ணிக் கொண்டேயிருக்கிறார். மனது லயமடைந்தால் அல்லவோ தூக்கம்! தெற்குத் திக்கிலேயே உன் அவதார ஸம்பந்தத்தையிட்டும் இத்தனை பஹுமானமிருக்கும்போது, அதை 'உத்தம'மாக 'ஸர்வோத்தர'மாகச் செய்யும்போது, உன் பிதாவை மஹத்தரராக்குவது அரிதாகுமோ? திக்கை 'தம'மாக்குபவர் உன் பிதாவை 'தா'ரராக்காரோ?

         நித்ராளுநா அபி -- தூக்கமாயிருந்தாலும், ரங்கத்தில் தூக்கத்தை நடிப்பதுபோலத்தான் ரங்கபதியின் தூக்கம். 'நித்ராதி ஜாகர்யயா' 'விழித்துக்கொண்டே தூங்குகிறார்', 'யோகநித்ரை'. என்ன யோகம்? ஆண்டாள் யோகம். "அநித்ர:ஸததம் ராம" என்று சொல்லி நிறுத்திவிட வேணும்.

         நியதம் -- நிரந்தரமாய். யோகத்தில் எப்படி இடைவிடாமல் அவிச்சின்னமான நினைப்போ, அப்படியே.

         கடாக்ஷ: நிஹித: -- கடாக்ஷங்கள் வைக்கப் பட்டிருக்கின்றனவோ. 'உன்னுடைய அவதார காலத்திலிருந்து இப்படி நியதமாக த்ருஷ்டி வைக்கப் பட்டுளது' 'தவ அவதாராத்' என்பதை இங்கும் அந்வயிக்க. 'எப்போ வருவாளோ?' என்று த்யானம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக