செவ்வாய், 20 டிசம்பர், 2016

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி


சுலோகம் 3

த்வத்ப்ரேயஸ: ச்ரவணயோ ரம்ருதாயமாநாம்
         துல்யாம் த்வதீயமணிநூபுர சிஞ்ஜிதாநாம்|
கோதே த்வமேவ ஜநநி த்வதபிஷ்டவார்ஹாம்
         வாசம் ப்ரஸந்நமதுராம் மம ஸம்விதேஹி ||  .3.

கண்ணன் செவிக்கினிமை காட்டுனது காற்சிலம்பின்
பண்ணமையு மோசையினிற் பல்லணிகொண் டெண்ணறுநின்
சீரெலா மோதவருள் செய்வாய் திருக்கோதை
யேருலா மின்னே யெனக்கு                 .3.
(ஸ்ரீ ஆண்டாள் மாலை திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்க வெளியீடு 11 
27 - 7 - 1941ல் வெளியிட்ட நூலிலிருந்து)

         உன் காந்தனுடைய செவிகளுக்கு அம்ருதம் போன்றதாயிருப்பதும், உன்னுடைய மணிச்சிலம்பி னோசைக்குத் துல்யமானதும், உன்னை நன்கு துதிக்க யோக்யமுமான ப்ரஸந்ந மதுர வாக்கைத் தாயாகிய நீயே எனக்கு அமைத்தருள வேணும்.

தாத்பர்யம்



         (1) நீர் சரணம் புகுகிறதாகவும், நீர் என் மஹிமையை அறியவும் பாடவும் அசக்தர் என்றும் பேசுகிறீர். ஆனால் கவி பாடிய இரண்டு சுலோகங்களும் அழகியதே. அப்படியே நீர் பாடலாம். (2) சரணம் புகுகிறேனென்கிறீர். வாய் திறக்கப்படுகிறது என்கிறீர். முழு வாயால் கவிதா சக்தி வேணும் என்று அர்த்திக்க மாட்டேனென்கிறீரே! திறந்த வாயால் வேண்டியதை நன்றாய்ச் சொல்லிக் கேளும் ! வெட்கப்படாதேயும். இப்படிச் சொன்னதும், உன் மணிச் சிலம்பினோசையைப்போல் உன் நாயகன் செவிகளுக்கு அமிர்தத்தை வார்க்கும் இனிய கவிகளையல்லவோ நான் ஆசைப்படுவது! அப்படிக்கினிய கவிகள் எனக்கு நீ கொடாமல் போனால் ஸ்வயமாய் எனக்கு அவை சக்யமல்ல. தாயாகிய உன்னிடமெனக்கு என்ன வெட்கம்? வாய்விட்டு நன்றாக யாசிக்கிறேன் என்றார். ச்ருதிகளுக்கெட்டாதது உன் மஹிமையென்றார் முன்பு. இங்கே உன் நாயகன் சுருதிகளுக்கு மதுரமாய் எட்டவேணும் என்கிறார். உன் நாயகன் எத்தகையவர் தெரியுமோ? எல்லாக் கவிகளும் அவரிடம் தங்கள் காவ்யங்களைப் பாடி அரங்கேற்றிப் பரிசு பெறவேணும். எல்லாக் கவிகளும் அவரிடம் பாடி இற்றைப் பறை பெற்றால்தான் உலகம் அவர்கள் கவிகளை பஹுமானிக்கும். தம் விஷயமான காவ்யமாயின், அதன் இனிப்புக் குறையலிருந்தாலும் குறை சொல்லமாட்டார். ப்ரிய காந்தையும், உத்தம கவியுமான உன் விஷயமான கவியாதலால், அமிர்தமாயிருந்தாலொழிய அபிநந்தனம் செய்யார். ப்ரதிதினமும் தன் முன்பு அரங்கேற்றப்படும் காவ்யங்களைக் கேட்டுக்கேட்டு காவ்ய குணதோஷங்களைப் பூர்ணமாய் பரீக்ஷிக்கத் தெரிந்த செவிகளை உடையவர் அரங்கராஜர். அவருக்கு பஹுகுணரமணீயமென்று பஹுமானிக்கத் தக்கதாய் வேணும். அமிர்தம் போல் இனிப்பென்றதோடு திருப்தியில்லை. மற்றோருபமானமும் செய்கிறார். அந்த உவமையையும் கோதை ஸம்பந்தமாகவே எடுக்கிறார். உன்னுடையது உன்னுடையது என்று இங்கே பலதரம் பேசுகிறார்.

         உனக்கு மிகப்ரியன், உன்னுடைய மணிச்சிலம்புகளினொலிகள் த்வமேவ (நீயே, நீயாகவே) உன்னை நன்கு துதிக்க அர்ஹமாக என்றே திரும்பவும் திரும்பவும் பேசுகிறார். எல்லாம் உனதாகவே இருக்கவேணும். என்னதென்பதே கூடாது. உன்னுடைய மணிச்சிலம்பின் ஓசை காதில் விழுவதை அவர் எல்லையில்லாத ஆவலுடன் ப்ரதீக்ஷித்துக் கொண்டிருப்பர். அதனிலும் இனியது அவர் செவிக்குக் கிடையாது. உன் வரவை அல்லவோ, அது முன்பே காட்டும்! "மணியோசை வருமுன்னே, நீ கஜகாமினியாய் (गजगामिनि) ஆடியாடி நடந்து வருவதையல்லவோ அவ்வோசை காட்டும். விக்ரமோர்வசீயம் என்னும் த்ரோடகத்தில் விக்ரமன் "பூதா நூபுரசப்தமாத்ரமபிமே காந்தாச்ருதள பாதயேத்" (ஊர்வசி வருவாளோ, அவள் சிலம்பின் ஓசையை மட்டும் என் காதில் விழச் செய்வாளோ, பின்னாலே மெள்ள வந்து தன் தாமரைக் கைகளால் என் கண்களைப் பொத்துவாளோ) என்று தன் ஆசையைப் பேசின சுலோகம் இது. இங்கே கவி நெஞ்சிலோடுகிறது. கோதையின் அடிச்சிலம்பின் ஓசையைப் போன்ற மதுரவாக்கை யாசிக்கிறார். சேஷனாகிய தம் வாக்குக்கு அவள் திருவடி ஸம்பந்தமான சிலம்போசையின் உவமையைச் சொல்லுவதுதான் அழகு. அவள் "வந்த்ராரவிந்த மகரந்த துல்ய"மான வாக்கைக் கேட்கவில்லையென்பதைக் கவனிக்கவேணும். "கோதே த்வமேவ ஜநநி வாசம் ஸம்ஹிதேஹி" வாக்கைக் கொடுப்பதையே ஸ்வபாவமாக உடைய நீ (கோதை) நீயாகவே ஸ்வயமாய்க் கொடுக்க வேணும். தாதாக்கள் நிர்ப்பந்தித்தால் கொடுப்பவரல்லரே. தம்பேறாகத் தாமாகவேதான் கொடுப்பர். 'ஜநநி' தாயே, என்னைப் பெற்றவளே, என்னைப் பெற்ற நீ என் துதியையும் நீயே பெறுவாயாக. (பிறக்கச் செய்வாய்) பெற்ற ஜநநியைத்தானே "பவதி பிக்ஷாம் தேஹி" என்று என்று குழந்தைகள் யாசிப்பர்! பிக்ஷாம் தேஹி என்பதுபோல் சப்தம் இருக்க, 'ஸம்ஹிதேஹி' என்று ஸாதித்தார். நான் உன்னை யாசிக்க வெட்கப்படவில்லை. பெற்றவள்தானே என்போன்ற ப்ரஹ்மசாரிகளுக்கு பிச்சை போடவேணும் ! உன் நாயகனுக்கு செவிக்குக் கொடுக்கவல்லவோ நான் உன்னை யாசிக்கிறேன்! நீ எனக்குக் கொடுக்கும் வாக்குப் பிச்சை உன் நாதன் செவிகளுக்கு அமிர்தமாகும். க்ருஷ்ண கர்ணாம்ருதம், ராமகர்ணாம்ருதம் என்ற பகவத் ஸ்தோத்ரங்களைக் காட்டிலும் கோதை கர்ணாம்ருதமே அவர் செவிக்கு அத்யந்தமின்பத்தைப் பயக்கும். "நானே வாக்கைக் கொடுத்து என்னைத் துதிக்கச் செய்து அதை நானே கேட்டு மகிழலாமோ?" என்று நீ கேட்பாயோ? நீ எனக்கு வாக்கைக் கொடுத்து உன்னைப் பற்றிப் பாடச் செய்தால் போதும். அப்பாட்டை நீ காது கொடுத்துக் கேட்கவேண்டாம். உன் நாயகன் கேட்பதே போதும். த்வதபிஷ்டவார்ஹாம். கவிச் சக்ரவர்த்தினியான உன்னை நன்கு இனியப் பாட யோக்யமான வாக்கு உன் கவிதையே. இங்கே 'அபிஷ்டவம்' என்னும் பதத்தைக் கவனிக்க வேணும். கோபால பாலனை ப்ரஹ்மதேவன் வத்ஸாபஹாரப்ரகரண முடிவில் ப்ரஹ்மஸ்துதி என்று பெயர் பெற்ற அத்புத ஸ்தோத்ரத்தால் துதி செய்து முடிந்ததும் "இத்யபிஷ்டூய பூமானம் த்ரி:பரிக்ரம்ய பாதயோ" (இப்படி எல்லையில்லாப் பெருமையும் ஸுகமுமான கண்ணனை நன்கு துதித்து மூன்று ப்ரதக்ஷிணங்கள் செய்து திருவடிகளில் விழுந்தார்) என்று அவர் மகிழ்ந்து வர்ணிப்பதில் நான்கு முகங்களாலும் ஸர்வகாலமும் நான்கு வேதங்களையும் அத்யயனாத்யாயனம் செய்யும் ஸரஸ்வதீகாந்தரான ப்ரஹ்மதேவன் ஸ்துதியை "அபிஷ்டவம்" என்று பேசினார். அதுபோன்ற ஸ்தவத்தில் ஆசை. திருவேங்கடமுடையான் தயாவிஷயத்திலும் "அபிஷ்டௌமி நிரஞ்ஜநாம்" என்று இப்படித் துதிக்க ஆசையைக் காட்டினார். ஆளவந்தார் சதுச்லோகியும் இப்படி அபிஷ்டவமாக அமைந்ததென்பதை "அபிஷ்டௌதிஸ்துத்யாம்" என்று அதை வர்ணித்ததால் காட்டினார். எந்த ரீதியான வாக்கு வேணும்? ஸமாஸங்கள் நிறைந்த ஓஜஸ், அக்ஷரடம்பரம் (தடபுடல்) என்னும் கௌடரீதி வேணுமா? மாதுர்ய சௌகுமார்யங்களோடு கூடிய பாஞ்சாலிரீதி வேணுமா? தோஷலேசங்களாலும் ஸ்பர்சிக்கப் படாததும் ஸமக்ரகுண கும்பிதமும் வீணையின் ஸ்வரத்தின் ஸௌபாக்யத்தை யுடையதும் (விபஞ்சீஸ்வர ஸௌபாக்யையான) வைதர்பரீதி வேணுமா? உமக்கு எல்லாம் பிடிக்கும் என்று நீரே ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் "கௌடவைதர்ப்ப பாஞ்சால மாலாகாரம் ஸரஸ்வதீம் ! யஸ்ய நித்யம் ப்ரசம்ஸந்தி ஸந்தஸ்ஸௌபரபவேதின:" என்று பாடியிருக்கிறீரே ! கவிஸார்வபௌமரான காளிதாஸருக்கு கௌடரீதி வராது. உமக்கு அதுவும் வச்யம். உமக்கு இத்தனை ரீதியும் வச்யமென்றீரே! என்னை ஏன் யாசிக்க வேண்டும்? உன்னுடைய அபீஷ்டவத்திற்கு அர்ஹமான வாக்கு எனக்கில்லை. ஆகையாலுன்னை நான் யாசித்துத் தானம் வாங்கித்தான் தீரவேணும். மேல்மேல் கோடி சொல்வதில் நீர் சளைக்க மாட்டீர். வேண்டிய வாக்கைக் கேளும். அம்மா! கௌடரீதி வேண்டாம். ஸமக்ரகுணா பேதமான வைதர்ப்பரீதியையும், மாதுர்ய ஸௌகுமார்யங்களோடு கூடிய பாஞ்சால ரீதியையும் அளிக்க வேணும். விபஞ்சீ (வீணை) ஸ்வரம் போன்ற இனிப்புடையது வைதர்பீ என்பர். யாழிலுமினிதாகும் உன் சிலம்பின் ஓசை. கோதை சிலம்பின் ஓசையைப் போன்ற என்றதால் உயர்ந்த வைதர்ப்பரீதியைக் கேட்டதாயிற்று. ப்ரஸந்ந மதுரமான வாக்கை அளிக்க ப்ரார்த்திக்கிறார். மதுரம் என்பது பாஞ்சாலிரீதியை அஸாதாரணமாகக் காட்டும். ப்ரஸாதம் முதலிய சிறந்த எல்லாக் குணங்களையும் உடையது வைதர்ப்பீ ரீதி. 'ப்ரஸந்ந' என்பதால் அந்த ரீதியையும் கேட்கிறார். இந்த ரீதிகளால் கந்தங் கமழும் மாலை போன்ற ஸரஸ்வதியை யாசிக்கிறேன். உன் பாமாலை போன்ற இனிப்பும், ஸௌரப்யமுமிருக்க வேணும். வாக்கின் பரிமளத்தை உன்னிடம் யாசிக்கிறேன். புஷ்பம் போன்ற வாக்கு வேணும். பெருமாளுக்கு வாக்கு மாலை ஸமர்ப்பிக்க உன்னிடம்தானே யாசிக்க வேணும்! நியே விதானம் செய்யவேணும். விதானம் மட்டும் போதாது. நன்றாய் விதனம் செய்யவேணும். (அமைக்கவேணும்) ஸம்விதானம் செய்விதர்ப்பாதிபதியின் புத்திரி ருக்மிணீ. கிருஷ்ணனுக்கு பரம மித்ரமானவள் பாஞ்சாலி, த்ரௌபதி. அவள் ருக்மிணிக்கு ப்ராண ஸமமான ஸகியாவாள். வைதர்ப்பி, பாஞ்சாலி என்னும் திருநாமங்களே பெருமாளுக்கும் கோதைக்கும் அமிர்தமாகும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக