Saturday, December 31, 2016

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி
ஸ்ரீ அன்பில் கோபாலாசாரியார்
1937ல்
ஸ்ரீவேதாந்த‌ தேசிக‌ ஸ்ரீஸூக்தி ச‌ம்ர‌க்ஷ‌ணீ
இத‌ழில் எழுதிய‌து.
த‌மிழாக்க‌ம்
சென்னை திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
வெளியீடு 11 (27-7-1941)


சுலோகம் 9
மாதஸ் ஸமுத்திதவதீமதி விஷ்ணுசித்தம்
         விச்வோபஜீவ்ய மம்ருதம் வசஸா துஹாநாம் |
தாபச்சிதம் ஹிமருசேரிவ மூர்த்திமந்யாம்
         ஸந்த: பயோதிதுஹிதுஸ் ஸஹஜாம் விதுஸ்த்வாம் ||   (9)


மன்கலைதேர் விண்டுசித்த மால்பெறவே வந்ததினால்
மன்கலையாற் றாபமெலா மாற்றுவதால் -- மென்கலையார்
மற்றோர் மதிநிகர்நீ வார்கடல்வாய் வந்தவள்பின்
புற்றா ளெனவுரைப்பா மோர்ந்து.               (9)


பதவுரை

         மாத: -- தாயே!; அதிவிஷ்ணுசித்தம்  -- (1) விஷ்ணுசித்தரிடம், (2) விஷ்ணுவின் மனதில், (3) விஷ்ணுவை நடுவில் கொண்ட (கடலில்); ஸமுத்திதவதீம் -- அழகாய் அவதரித்தவளும்; விச்வோபஜீவ்யம் --ஸகல ஜீவர்களும் பருகி உஜ்ஜீவிப்பதற்கு யோக்யமான; அம்ருதம் -- அமுதினை; வசஸா -- வாக்கினாலே, (பாசுரங்களாலே); துஹாநாம் -- சுரக்கிறவளாயும்; தாபச்சிதம் -- தாபத்திரயங்களையும் போக்கிக்கொண்டு, ஹிமருசே -- குளிர்ந்த பனிக்கிரணமுடைய சந்த்ரனுடைய, அந்யாம்  மூர்த்திமிவ -- மற்றோர் (விலக்ஷணமான) மூர்த்தி போன்றவளுமான,; த்வாம் -- உன்னை; ஸந்த: -- பெரியோர் (ப்ரஹ்மவித்துக்கள்); பயோதிதுஹிது -- பாற்கடலின் பெண்ணாகிய பெரியபிராட்டியாரின், ஸஹஜாம் -- உடன்பிறந்தவளாக; விது -- அறிகிறார்கள்.

         அம்மா! விஷ்ணுசித்தரிடம் தோன்றியவளும், அநுபவித்து உய்யத்தக்க அமுதை வாக்கினால் சுரக்கிறவளாயும், ஸாம்ஸாரிக ஸகல தாபங்களையும் நீக்கத்தக்க குளிர்ச்சியையுடைய ஓர் விலக்ஷணமான சந்திரமூர்த்தியென்று சொல்ல வேண்டியவளுமான உன்னைப் பாற்கடலிலவதரித்த பெரியபிராட்டியாருக்கு உடன் பிறந்தாளென்று ப்ரஹ்மவித்துக்களான ஸத்துக்கள் அறிகிறார்கள். (அல்லது பெரியபிராட்டியார் கூடப்பிறந்த உன்னை ஓர் விலக்ஷண சந்திரமூர்த்தியென்று அறிகிறார்கள்)

அவதாரிகை

         (1) "உன்னுடைய தகப்பன்மார்" என்று அநேக பிதாக்கள் சேர்ந்து என்னைப் பெற்றவரென்றீர் முன் சுலோகத்தில். 'ஸ்ரீவிஷ்ணுசித்தகுலக் கற்பகக்கொடி' என்று முதல் சுலோகத்தில் என்னைப் பேசினீர். நிகண்டுகாரரும் என்னை விஷ்ணுசித்தர் பெண் (விஷ்ணுசித்தாத்மஜா) என்பர். "த்வதீயா: குரவ:" என்று பன்மை பேசுகிறீரே? 'பட்டர்பிரான் கோதை' அல்லவோ நான்! மற்ற ஆழ்வார்களும் பட்டர்களோ? 'அஞ்சுகுடிக்கு ஒரு ஸந்ததி' என்ற முறையாக என்னைப் பேசுகிறீரே, இது யுக்தமோ? இதற்கு பதில் கூறுகிறார்.
         பதில்கூற ஆரம்பிக்கையிலேயே 'மாத:'  "தாயே' என்றழைக்கிறார். உண்மையில் நீ ஒருவரும் பெற்ற பெண்ணல்லள். நீ எல்லோருக்கும் தாய் அம்மா! அபிமானத்தால் தங்கள் குடிப்பெண், தங்கள் குல ஸந்ததி என்று நினைப்பும் பேச்சும். உன் அபிமானத்தாலும் அவர்கள் பிதாக்கள். பரஸ்பர அபிமானமே இப்பேச்சிற்குக் காரணம். அவ்வபிமானத்திலும் விஷ்ணுசித்தருக்கு ஸந்நிகர்ஷம் அதிகம். 'பட்டர்பிரான் கோதை' என்று சொல்லுவதும், விஷணு சித்தாத்மஜை என்று சொல்லுவதும் அத்யந்தம் உசிதமே. 'விஷ்ணுசித்தரிடம் தோன்றியவளே' என்றே இங்கே பேசுகிறேன். ஆனால் அப்படிப் பேசுவதிலும் அவரோடு இன்னமிரண்டு சேர்ந்து விடுகிறது. 'பெருமாள் சித்தம்' என்பதும், பெருமாள் தன் நடுவில் வசிக்கப்பெற்ற ஸமுத்திரம்' என்பதும் 'விஷ்ணுசித்த' என்பதில் சிலேடையாகச் சேர்ந்து விடுகிறது. அப்படிச் சிலேஷைப் பொருள்களுக்கும் ஔசித்யம் ரொம்பவும் ஏற்பட்டுவிடுகிறது. விஷ்ணுசித்தரான பட்டர்பிரானொருவரை மட்டுமே நான் பேசப் பார்த்தாலும், பாஷை இன்னமிரண்டைச் சேர்க்கிறது. அப்படிச் சேர்ப்பதும் உன்னுடைய ஏற்றத்திற்கே யாகிறது.
         (2) திருமணப் பெண்ணான கோதையை வர்ணிக்குமிடத்தில் அவளை மதிமுக மடந்தை என்று பேசவேண்டாமோ? அவளுடைய தேன்போன்ற பாட்டுக்களைப் புகழ வேண்டாமோ? ஓர் பிராட்டியைப் பெற, கடலைக் கடைவர் பெருமாளென்பரே, அப்படிப் பேசவேண்டாமோ? பெரியபிராட்டியாரை மனைவியாயுடையவர் மணம் செய்யவேண்டுமானால், அவள் கூடப்பிறந்து அவளுக்கு அத்யந்த ப்ரியஸஹோதரியென்று பேசவேண்டாமோ? இதையெல்லாம் இதோ பேசுகிறேனம்மா! வாக் கர்மிகமென்பர். ஒன்றொன்றாய்த்தானே பேசவேண்டும்!
         (3) "ஸ்த்ரீ ரத்னமான ஊர்வசியைப் படைத்தவர் ப்ரஹ்மாவன்று; காந்தியைப் பரப்பும் சந்திரன் இவளைப்படைத்தானோ? அல்லது, ச்ருங்காரநிதியான மன்மதன் படைத்தானோ? அல்லது, புஷ்பாகரமான வசந்தமாதம் படைத்ததோ?' என்று விக்ரமர் பேசினார். "ப்ரஹ்மா எல்லா ச்ரேஷ்ட ரூபங்களையும் சேர்த்து ஒருமிக்கப் பார்க்கவேண்டுமென்று பொருள்களில் பொறுக்கிச் சேர்த்து மனதினாலேயே ஸ்ருஷ்டித்தாரோ? கைபட்டால் கெட்டுப்போகுமென்று மனதாலேயே அழகைக் கூட்டிக்கூட்டி ஸ்ருஷ்டித்தாரோ?" என்று துஷ்யந்தன் சகுந்தலையை வர்ணித்தான். "ஒரே வடிவில் விச்வத்திலுள்ள முழு அழகுக் கூட்டத்தையும் சேர்த்துப் பார்க்கவேண்டுமென்ற ஆசையினால் பார்வதியை ப்ரயத்தனப்பட்டு ஸ்ருஷ்டித்தார்" என்று காளிதாஸர் குமார ஸம்பவத்தில் வர்ணித்தார். இந்த அபூர்வமான கல்யாணப்பெண்ணைப் பற்றி அந்த வழிகளில் கவிஸிம்ஹமாயிருப்பவர் பாடவேண்டாமோ? அதற்கு மேலே பாடுகிறார். -- நான்முகன் மனதினால் நிர்மிதமானாள் பார்வதியென்றால், நான்முகனைப் படைத்த நாராயணன் மனம் எப்படி எப்படி ஆசைப்பட்டதோ, அப்படியே அவன் திருவுள்ளத்திலிருந்தே தோன்றியவள் கோதை. படைக்கப்பட்டவளல்ல, தானாக ஆவிர்பவித்தவள். 'பெருமாள் உகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானானவள்.' பெருமாள் திருவுள்ளப்படி அங்கே உதித்தவளென்றதால், சந்த்ரன் அவ்விடமிருந்து உதித்ததுபோல் உதித்தவள். சந்திரனெப்படி இவளை ஸ்ருஷ்டிக்கும் ப்ரஜாபதியாகக்கூடும்? கூடப்பிறப்பவன் ஸ்ருஷ்டித்தவனாவானோ? சந்திரன் பிறந்தவன். கோதை பிறவாதவள். நாயகன் மனதிற்கினிதாம்படி ஓர் விலக்ஷணச் சந்திரமூர்த்தியாகத் தோன்றியவள். அவளைப்போலவே அவளவதரித்த திவ்யதேசத்தில் அவள் அர்ச்சாமூர்த்தியும். பெருமாள் மனதிலிருந்தே கிளம்புவதால் அவர் பிள்ளைகளான ப்ரஹ்மாவிற்கும் ப்ரத்யும்னனுக்கும் ஸ்ருஷ்டிக்க அதிகாரம் எப்படிக்கூடும்? அழகுக்கடலும், ரஸ்ஸ்வரூபருமான பெருமாள் ஆசைப்பட்டபடியெல்லாம் உருவம் அடைந்து தோன்றினாளென்றால், அதினிலும் அழகில் உயர்த்தியுண்டோ? பதனாயிரம் பூர்ண சந்திரர்கள் சேர்ந்த காந்தியையுடைய பெருமாளிலும் அழகனோ சந்திரன்? ஸாக்ஷாத் மந்மத மன்மதனிலும் உயர்ந்தவனோ மன்மதன்? 'மாஸானாம் குஸுமாகர' என்றபடி வசந்தமாசம் பெருமாளுடைய ஓர் விபூத்யேகதேசந்தானே?
         மாத: -- தாயே! யாருக்குத் தாய்? விஶ்த்திற்குத் தாய். விச்வோபஜீவ்ய மாத்ருத்வம். முன் சொன்ன ஆழ்வார்களுக்கும் உண்மையில் நீ தாய். பெரியபிராட்டியாருக்கு மட்டும் நீ தங்கை. மற்ற உலகுக்கெல்லாம் நீ தாய். 'தாயே' என்று முதலில் பொதுவில் கூப்பிட்டு, முடிவில் 'லக்ஷ்மிக்குத் தங்கை' என்பதால் அங்கே மட்டும் 'தாய்' என்பதற்கு ஸங்கோசம்.
         ஸமுத்தி தவதீம் -- "அம்ருதம் வெளிக்கிளம்பி மிதக்கும் ஸமயத்தில் கடைந்த பாற்கடலில் பெரியபிராட்டியார் உத்திதையானாள்" என்று ஸ்ரீஸ்துதியில் வர்ணித்ததுபோல. நாயகன் மனதிலிருந்து அவரிச்சையை அநுஸரித்த உன் ஸ்வேச்சையினால் கிளம்பியவள். அவர் மனதிலிருந்து சந்திரபிம்பம்போல உதுத்தவள். 'அழகாக மேலே கிளம்பினாள்' என்பது இதற்குப் பொருள். குழந்தை பிறப்பதானால், பூமியில் கீழே விழுமா? பூமிக்கு மேலே கிளம்புமா? பூமிப்பிராட்டியான நீ கர்ப்பத்திலிருந்து பூபதனமாய் விழுந்த குழந்தையல்லவே? உலகத்தையெல்லாம் உன் கர்ப்பத்திற்கொண்ட விச்வம்பரையல்லவோ நீ!
         அதிவிஷ்ணுசித்தம் -- பட்டர்பிரான் ஸ்ரீவிஷ்ணுசித்தரிடம் நீயாகத் தோன்றினாய். பெருமாள் திருவுள்ளத்தில் அவர் உகந்த மூர்த்தியாய்த் தோன்றினாய். ஜகத்துக்கு ஆஹ்லாதத்தை உண்டு பண்ணும் சந்திரன் பிறந்தவிடத்திலிருந்து நீயும் உதித்தாய். இதனால் சந்திரஸஹஜை என்று சொல்லவேண்டும். சித்தமென்பது நடுவைச் சொல்லுமென்பர். விஷ்ணுவை நடுவில் வஸிக்கப் பெற்ற பாற்கடலில் பெரியபிராட்டியாரோடும், சந்திரனோடும், அம்ருதத்தோடும் கூடப்பிறந்தவளென்பர் பெரியோர். அதினிலும் உயர்த்தி பட்டர்பிரானாகிய விஷ்ணுசித்தரிடம் தோன்றியது. 'விஷ்ணுசித்த' என்பதற்கு அவர்தான் முக்கியமான (ரூடமான) முதற்பொருள்.
         விச்வோபஜீவ்யம் அம்ருதம் -- தாரதம்மியமில்லாமல், அதிகாரி பேதமில்லாமல், எல்லோருக்கும் எளிதான அம்ருதத்தை. தாய் கறக்கும் எந்தப் பாலில் குழந்தைக்குப் பங்கில்லை? பாற்கடலைக் கடைந்தெடுத்த அம்ருதம் தேவஜாதிக்கு மட்டுமேயுண்டு. மானிடருக்குக் கிடையாது. இவ்வம்ருதம் எல்லோர்க்கும் கிடைப்பது. எல்லோரையும் போஷிப்பது, உஜ்ஜீவனம் செய்வது. யஜ்ஞ்சிஷ்டமான அம்ருதமும் எல்லோருக்கும் கிடைக்காது. ஓர் விலக்ஷணமான சந்திரபிம்பமென்று அடுத்த பாதத்தில் ஸாதிக்கிறார். இங்கே ஓர் விலக்ஷணமான அம்ருதத்தைத் தன் பாசுரங்களால் வார்க்கிறாளென்கிறார். விக்ரமோர்வசீயத்தில் விக்ரமனுடைய அழகில் ஈடுபட்ட ஊர்வசீ ராஜாவைச் சந்திரனென்றும், அவருடைய மொழி (வசனம்) அம்ருதமென்றும் மனதிற்குள் புகழ்கிறாள். "அழகாயிருக்கிறதே இவருடைய வசனம்" அல்லது "சந்திரனிடமிருந்து அம்ருதம் பிறக்கிறது என்பது என்ன ஆச்சர்யம்" என்று ஆக்ஷேபாலங்கார ரீதியாகத் தன் மனதிற்குள் பேசுகிறாள். அதை இங்கே ஸ்வாமி நினைத்து முதலில் அம்ருத வசனங்களைப் பொழிவதைப் பேசி, அடுத்த பாதத்தில் சந்த்ரமூர்த்தி என்று வர்ணிக்கிறார்.
         வசஸா துஹாநாம் -- வாக்கினால் அம்ருதத்தைச் சுரக்கிறாள். பாற்கடலை 33 கோடி தேவர்களும், கணக்கில்லாத அஸுரர்களும் சேர்ந்து மந்தரமலையை மத்தாகக்கொண்டு கடைந்து அம்ருதத்தை எடுத்தார்கள். நீ அனாயாஸமாக உயர்ந்து தூயதான அம்ருதத்தைப் பால் கறப்பதுபோல் லகுவாகக் கறக்கிறாய். சந்த்ரன் தன் கரங்களினால் அம்ருதத்தைப் பொழிவான். நீ வாக்கினால் (மொழியினால்) பொழிகிறாய். சுகருடைய முகத்திலிருந்து (வாயிலிருந்து) 'அம்ருதத்ரவஸம்யுத'மாய் வேதகல்ப வ்ருக்ஷத்திலிருந்து பாகவதமென்னும் ரஸப்பழம் (பழரஸம்) விழுகிறதென்பர். உன் முகத்திலிருந்து அம்ருதத்ரவமாய்ப் பெருகுகிறது உன் ப்ரபந்த பாகவதம். எந்தப் பசுக்களைக் கறக்கிறாள்? உபநிஷத்துக்களான பசுக்களை, கண்ணன் கறந்து கீதாம்ருதத்தைத் துக்தமாக்கினதுபோல (பால் ஆக்கினதுபோல). ஆத்மநே பதத்தால் நாம் பருக, நமக்குக் கறந்து கொடுப்பதைத் தன் பேறாக நினைப்பதை வர்ணிக்கிறார்.
         ஹிமருசே: --  குளிர்ந்த பனிக்கிரணமுடையவன் சந்த்ரனென்பர். இனிய காந்திக்காக சந்த்ரமூர்த்தியை ஓர் உவமையாக எடுத்தது. பாற்கடலில் பெரியபிராட்டியாரோடும், அம்ருதத்தோடும் பிறந்தவளென்று சந்த்ரனை எடுத்தது. சந்த்ரன் தாபங்களையெல்லாம் தீர்க்கக் கூடியவன் அல்லன். "ஹிமத்தை (பனியை) கர்ப்பத்திற்கொண்ட கிரணங்களால் அக்கினியைப் பொழிகிறான்." என்றான் துஷ்யந்தன். ஹிமருசி என்று பெயர் மட்டுந்தான். அக்னிருசியென்றால் தகும். "அடே பாபி ! துச்சரித சந்த்ரசாண்டாள" என்று காதம்பரியில் சந்த்ரனைப் பற்றி வாழ்த்து!
         தாபச்சிதம் -- ஸம்ஸார தாபத்திரயங்களையும் போக்குவதான. சந்த்ரமூர்த்தியைக் காட்டிலும், வைலக்ஷண்யம் (வ்யதிரேகம்) சொல்லப்படுகிறது. அம்ருதத்தைக் காட்டிலும் வைலக்ஷண்யம் 'விச்வோபஜீவ்யம்' என்று காட்டப்பட்டதுபோல. 'அந்யாம்' என்று சொல்லப்படும் வேற்றுமையையும், ஏற்றத்தையும் இந்த அடைமொழி விளக்குகிறது. நீ சுரக்கும் வாகம்ருதத்தைப் பருகினால், அம்ருதத்வமென்னும் மோக்ஷம் ஸித்திக்கும். தாபத்திரயங்களும் தொலையும். ஸ்வர்க்கிகளின் அம்ருதம் ம்ருதமென்னும் ஸம்ஸாரத்தைக் கறக்கும்.
         அந்யாம் மூர்த்திமிவ -- வேறு விலக்ஷணமான ஒரு மூர்த்தி
         த்வாம் -- உன்னை; 'தாயே' என்று தொடங்கி 'உன்னை' என்று முடிக்கிறார்.
         பயோதிதுஹிது -- பாற்கடலில் தோன்றிய பெரிய பிராட்டியாருடைய; "யாருக்காக, யாரை அடைய, 'அம்போதி' என்னும் ஸமுதிதரம் கடையப்பட்டதோ, அணையால் கட்டப்பட்டதோ" என்று ஆளவந்தார் பிராட்டி பெருமையை வர்ணித்தார். 'பயோதி' என்றால் பாற்கடலுக்கும் சேரும், உப்பு நீருக்கும் சேரும். 'பய' என்பதற்கு ஜலமென்றும் பொருள், பாலென்றும் பொருள். இங்கே 'பயோதி' என்று பிரயோகித்ததால், இரண்டுக்கும் பொதுவான சப்தமாகுமானாலும், முதலில் திருவணை கட்டத் தடங்கல் செய்த ஸமுத்ரத்தைப் 'பாற்கடல்' என்னுமோர் பொருள்படக்கூடிய சப்தத்தால் பேச ஆளவந்தாருக்குத் திருவுள்ளமில்லை. கல்நெஞ்சனைப் பாற்கடலென்பரோ? அதனால் ஆங்கே 'பாற்கடலையும்' 'அம்போதி' என்று ரூடிப்பெயரால் பேசுகிறார். இங்கே பாற்கடலை மட்டும் பேசுவதால் 'பயோதி' என்று பிரயோகிக்கிறார். 'பாற்கடலில் தோன்றிய பெண்' என்பதால், அங்கே தோன்றியதால் மட்டும் எப்படி 'புத்திரி' என்ற அபிமானமோ, அப்படித்தான் நீ புத்திரி என்ற அபிமானமும் என்பது கருத்து. ஸமஸ்த ஜநநியான லக்ஷ்மியும் துஹிதையென்பது போலத்தான் உன்னையும் மகள் என்பது என்று காட்டப் பெரியபிராட்டியாரைத் துஹிதா என்று குறிக்கிறார். துஹாநா -- துஹிதையின் ஸஹஜை.
         ஸஹஜாம் -- கூடப் பிறந்தவளென்று. 'அம்ருத ஸஹஜை' என்று ஸ்ரீஸ்துதியில் பெரியபிராட்டியாரை வர்ணித்தது தேவஜாதியின் புத்தியைக் கொண்டு. தேவஜாதிக்கு அம்ருதமே ப்ரதானமாய்த் தோன்றியது. 'அம்ருதத்துடன் பிறந்தாள் லக்ஷ்மி' என்றார்கள். முதலில் அம்ருதத்தைப் பார்த்து மகிழ்ந்தார்கள். பிறகு பிராட்டி அவதரித்து விஷ்ணு மார்பிலேறியதும், அவள் காலில் விழுந்தார்கள்.' என்பது ஸ்ரீஸ்துதியின் வர்ணனம். காலில் விழுந்ததற்குக் காரணம் முன் சாபம் வந்ததனால் ஏற்பட்ட பயமென்றும் அங்கே காட்டினார். "ஆலோக்ய த்வாமம்ருதஸஹஜை விஷ்ணுவக்ஷ:ஸ்தலஸ்தாம் ஶாபாக்ராந்தாஶ்ஶரணமகமந்' . பெரியபிராட்டியாருடைய உடன் பிறந்தாள் என்று இங்கே வர்ணனம். அம்ருதத்தை இவள் கறக்கிறாளென்பதால் அம்ருதத்திற்குப் பின் பிறந்தவளன்று என்று ஸூசனம்.
         ஸந்த: -- ப்ரஹ்மத்தை அறிந்த ஸத்துக்கள். ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் சேர்ந்த பெரிய பிராட்டியாருடைய உடன் பிறந்தாளும் அம்சமுமான உன்னை ப்ரஹ்மவித்துக்கள்தானே அறியக்கூடும். விது: -- அறிவர்.
         ஸ்ரீவிஷ்ணுசித்தரிடம் உதித்ததாலும், அம்ருதத்தைப் பொழிவதாலும், பெரிய பிராட்டியாரோடு உடன் பிறந்ததனாலும், தாபத்தைப் போக்குவதாலும், ஓர் விலக்ஷண சந்த்ர பிம்பம், ஓர் விலக்ஷண கௌமுதி, -- ஜ்யோத்ஸ்னை என்று இங்கே ஸாதிப்பதில் நோக்கு. மூன்றாம் பாதத்திலுள்ளதை விதேயமாக வைத்துக்கொள்ளலாம். ஜ்யோத்ஸ்நேவ ஹிமதீதிதே: - சந்த்ரனுடைய சந்த்ரிகை போன்றவள். ஆனால் பெருமாளென்னும் சந்த்ரனுடைய சந்த்ரிகை இவள்