Tuesday, April 16, 2013

ஸ்ரீ ஆண்டாள் திருமணம்--3

முதல் அங்கம்            மூன்றாங்களம்

இடம்    பெரியாழ்வார் திருமாளிகை

(பெரியாழ்வாரும் அவர் மனைவி விரஜையும் பேசிக்கொண்டிருக்கின்றனர்)

விரஜை:—நாதா! உலகப்பற்றை யறவே ஒழித்துவிட்டீர்களே! நமது அருந்தவப் புதல்வி பக்குவ நிலைக்கு வந்துவிட்டனளன்றோ? இன்னும் ஏன் அவளுக்கு மணம்முடிக்க மனங்கொள்ளவில்லை? அதைப்பற்றி உங்களுக்குக் கவலையேயில்லை போலும்!

ஆழ்வார்:—கண்மணி! இல்லாமலென்ன! உலகம் நிறைந்த புகழால் திருமகள்போல் வளர்க்கும் நம் மகளுக்கு நாடுநகருமறிய நல்லதோர் கல்யாணம் செய்யவே நான் கருதுகிறேன். ஆனால் நம் புதல்வி கோதை அறிவிலும், கல்வியிலும், ஒழுக்கத்திலும் இணையின்றி விளங்குகின்றனளன்றோ? அவள் மன மிவ்வுலகில் எவரைத்தான் நாடும்?அழகிலு மறிவிலு மவளுக்குத் தக்க வரன் இவ்வுலகில் ஏது? அதனால்தான் என்ன செய்வதென்றே தோன்றாமல் திகைத்துக் கொண்டிருக்கிறேன்.

விரஜை:- நாதா! பகுத்தறிவற்ற வொரு கொடியுமோர் கோலைத் தழுவிடிலன்றோ வாழுகின்றது? பெண்ணாகப் பிறந்த வொருத்தி இவ்வுலகினில் நாதனிலாமல் வாழுவதெங்ஙனம்?

ஆழ்வார்:—உண்மைதான். ஆனால் கொடியும் தன்னைத் தாங்கவல்ல கோலையே நாடுகின்றது. அணங்கிலும் பேரழகு வாய்ந்த பெண்மணி ஆண்டாளைத் தரிக்க வல்லவொரு கோல் இவ்வுலகினில் எங்கே யுளது? அதனால்தான் இவ்வுலகின்கண் அவள் மனம் பற்றைத் துறந்துவிட்டது.

விரஜை:—ஆகில் அவள் எண்ணமென்ன? மணமே வேண்டாமென்கின்றனளா? பாரதந்திரியமன்றோ பேதையர்க்கழகு.

ஆழ்வார்:—ஆம், அதுகொண்டே அவள் மனம் கோல் தேடியோடும் கொடிபோல் மால் தேடி ஓடுகின்றது. “நாமுகக்கும் தேவர்” என்று நாகணைமிசையான்மிசை கடல்போலும் காமத்தனளாயினள். நம் தந்தை தந்தேவரை வருவிப்பரேல் அது காண்டுமென்றுறுதி பூண்டிருக்கின்றனள். ஆனால் இளமடந்தையாகையால் இவ்வுண்மையை வெளியிட வியலா துழல்கின்றனள்.

விரஜை: – (ஆச்சரியத்துடன்) திருமாலையா! இதென்ன விந்தை! மறையவரும் மறைமுடியுமின்னும் அவர் கழலிணை காணவில்லையே! இஃதென்ன பைத்தியம்? எட்டாப் பழத்துக்குக் கொட்டாவி விடுவாருமுண்டோ?

ஆழ்வார்:—பேதாய்! அவ்வாறு கூறவேண்டாம். பத்துடை யடியவர்க்கு ஸர்வேசுவரன் மிகவும் எளியவனன்றோ! பிறர்களுக்கவன் அரியவனே! அரசனுக்குச் சத்ரசாமரங்கள்போல அவனுக்கு பரத்வ ஸௌலப்யங்கள் ஒருங்கே அமைந்துள்ளன வென்பதை நீ கேட்டறியாய்போலும்.

விரஜை:—நாதா! என்னவெனிலும் ஈசுவரன் நாயகனா யமைவது இயலாத காரியம். இதற்குப் பிராட்டி சம்மதம் வேண்டாமோ? பிராட்டியார் முகம் நோக்கிய பின்னர்தானே எக்காரியமும் செய்வதவனியல்பு. எனவே இது ஒருநாளும் நடவாது. எதற்கு இந்தப் பேராசை?

ஆழ்வார்:—பேதாய்! அப்படி நினைக்க வேண்டாம். நமது கோதை தன் மனதைக் கொள்ளை கொடுத்ததுபோல அவன் மனதையும் கொள்ளை கொண்டுவிட்டனள். ஆகவே இது நடவாத காரியமன்று.

விரஜை:- நீங்கள் இதை எவ்வாறு அறிந்துகொண்டீர்கள்?

ஆழ்வார்:- ஒவ்வொரு நாளும் மாலுக்கெனக் கொய்த மலர்களை யிவள் சூடிக் காறை பூண்டு, கண்ணாடிகண்டு, தன் கைவளை குலுக்கி, கூறை யுடுத்தி, தன் கொவ்வைச் செவ்வாய் திருத்திப் பின்னர் களைந்து வந்தனள். அம்மலர்களை மலர்மங்கைமணாளன் மகிழ்வுடன் ஏற்று வருகின்றனன். தன் மணாளன் இம்மலர்களைச் சூடியதும் மலர்மகளும் மண்மகளும் அவனைப் பொறாமையுடன் பார்க்கின்றனர். அக்கொடிய பார்வையை அவன் லக்ஷ்யம் செய்யவேயில்லை. நான் நேற்றுக் கொண்டுபோன மாலையில் கேசம் சம்பந்தப் பட்டிருந்ததால் சாத்தாமல் திரும்பினேன். அப்பொழுது தினந்தோறும் கோதை சூடிக் களைந்த மாலைகளையே சாத்தும்படி பகவான் எனக்குக் கட்டளையிட்டார்.

விரஜை:- (ஆச்சரியத்துடன்) அப்படியா? என்ன பெருமை நம் புதல்விக்கு?இவளைப் பெண்ணெனப் பெறும்படி யாம் என்ன நோன்பு நோற்றோமோ?

ஆழ்வார்:- இப்பொழுதாவது தெரிந்ததா? அவள் திருமணத்தைப்பற்றி நினைக்க நாம் கொஞ்சமேனும் அருகரில்லை. திருமார்பனே தேடிவரும் சீர்மையினளன்றோ அவள்? ஆயினுமவ்விருவர் சேர்த்திருக்கும் நம்மாலானதைச் செய்து நாம் ஸத்தைப் பெற வேண்டும்.

விரஜை:-  ஆம். அதற்கென்ன தடை? இதோ! அவளை யெனது இரு கரங்களாலும் மார்புறத் தழுவ வேண்டும். போய் வருகிறேன். விடை கொடுங்கள்

ஆழ்வார்:--  நானும் வருகிறேன்.

(இருவரும் செல்கின்றனர்)

முதல் அங்கம் முற்றிற்று.