முத்தமிழ்: இயல் இசை நாடகம்: பொது: சித்தசித்திறை சிறப்பு:
வேதத்தின் உட்பொருளாகிய உபநிடதம் உணர்த்தும் சித்தசித்திறைத்தத்துவத்தை விளக்கும் தமிழ் முத்தமிழ், அது சடகோபர் திருவாய்மொழி ஆயிரம் என்றது இச்சிறப்புமாலை விளக்கும் சிறப்புப் பொருள். இயல், இசை, நாடகம், முத்தமிழ் என்பர். அம்மும்மை பொது, இம்மும்மை சிறப்பு. இங்கும் பொது சிறப்பு என்றதின் நயம் காண்க. இயல் என்றதால் சிற்பொருளையும், இசை என்றதால் அசிற்பொருளையும், நாடகம் என்றதால் இறைப்பொருளையும் கொள்ளுதல் சாலச் சிறக்கும். விகாரப்பாடற்ற இயலுடைய “ஞன்” “புருடன்” என்னும் தத்துவமாதலால் சித்து இயலாகும். அசித்தைப் போலன்றி, தான் ஒன்றில் தோன்றாதும், தன்கண் தோன்றுவன இல்லாதும் இறைப்பொருளுக்கு ஒரு படிசாயலாய் அதற்கு விசேடணமாய் நிலைத்துள்ள ஞானஸ்வரூபனாதலால் நிர்மலத்தன்மையுடைய சித்து இயலாகும். விகாரப்பாடுடைய உணர்வற்ற சடப்பொருள், சித்தின் வினைவயமாய். இறைவனால் அததற்குத்தக ஆக்கி இசைக்கப்பெறுதலால் இயலாகிய சித்துக்குச் சடமாகிய அசித்து ஆக்கை என்னும் இசையாகும். சித்தின் வினைப்பயனாய் அசித்தை அதற்கு அடையாக இசைத்து அதற்குத் தான் உள்ளுயிராய் நின்று ஆட்டி வைத்தலால் நாடகம் இறையாகும். அஃதே இறைப்பொருளின் மாயக்கூத்து. “பூதமாமனைத்து மேறுமெந்திர மாயைப் பூட்டில், ஆதிமா டிதயம் பார்த்த! நிற்பனன்றாட்டு வித்து”1 என்று உணர்தற்கரியனாய் உயிர்கட்கெல்லாம் உள்ளுயிராய், அவற்றின் இதயதேயத்தில் நின்று, பகுதிப்பூட்டில் அவைகளை இட்டு ஆட்டிவைக்கும் மாயக்கூத்தனே இறைவன் என்று இறைவனாகிய அந்த மாயக்கூத்தன் தானே இயம்பியருளினான். இறைப்பொருளை “மாயக்கூத்தன்”2 என்றார் சடகோபர். இம்முறையால் இயல், இசை, நாடகம் என்ற பொது, சித்து, அசித்து, இறை எனச் சிறத்தல் கண்டுணர்க.
ரஹஸ்யத்ரயஸாரம்: முத்தமிழ்: பொது: சிறப்பு:
பொது, சிறப்பு, என்றதின் ஒற்றுமை இம்மஹாதேசிகரது மாலைகளில் நன்கு காணலாம் என்று மேலே கூறப்பட்டது. ரஹஸ்யத்ரயஸாரத்தில் முத்தமிழ்ப் பொதுவும் சிறப்பும் அமைந்துள்ளதைக் காண்க. சிறப்பு முன்னம் கூறப்பட்டது. முத்தத்துவங்களை விளக்கும் தமிழ், ஆதலால் முத்தமிழ் என்றது அது. இயல், இசை, நாடகம் என்ற பொதுமை அமைந்துள்ளதை விளக்குவாம். இந்த ஸாரநூல் முப்பத்திரண்டு அதிகாரங்கள் கொண்டுள்ளது. அவை நான்கு பாகங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. முதல் இருபத்திரண்டு அதிகாரங்கள் முதற்பாகம். அது அநுசாஸநபாகம் என்னப்பெறும். அநுசாஸநம் எனினும் இயல் எனினும் ஒக்கும். இருபத்து மூன்றாமதிகாரம் முதல் இருபத்தாறாம் அதிகாரம் வரை இரண்டாம் பாகம். அது ஸ்திரீகரணபாகம் என்னப்பெறும். ஸ்திரீகரணம் எனினும் வலியுறுத்தல் எனினும் ஒக்கும். முதற்பாகமாகிய இயற்பாகத்தில் கூறிய பொருள்களைப் பின்னும் தெளிவுற வலியுறுத்தும் பாகம் இரண்டாம் பாகம். ஆக முதல் இருபத்தாறு அதிகாரங்கள் இயலாகும். இருபத்தேழாமதிகாரம் முதல் இருபத்தொன்பதாமதிகாரம் வரை. பதவாக்யயோஜநாபாகம் என்னப்பெறும். அது மூன்றாம் பாகம். யோஜனை எனினும் இசை எனினும் ஒக்கும். பதவாக்கியங்களை இசைக்கும் பாகம் என்பது அதன்பொருள். ஆதலால் இம்மூன்று அதிகாரங்களும் இசை ஆகும். முப்பதாமதிகாரம் முதல் முப்பத்திரண்டாம் அதிகாரமாகிய முற்றதிகாரம் வரை ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் என்னப்பெறும். இது நான்காம் பாகம். இது திருமால் தானே திருமந்திரப் பொருளைக் குருவடிவத்தில் நடித்தளிக்கும் தகவும், குருவை, சிஷ்யன் திருமால் எனவே வழிபடும் மரபும் கூறும் பாகம். ஆதலால் இப்பாகம் நாடகமாகும். “வெள்ளைப் பரிமுகர் தேசிகராய் விரகாலடியோ முள்ளத் தெழுதும்” அருள்மிகுத்ததோர் திருமாலின் நாடகமே அது. இதை விளக்கும் சம்பிரதாயமே ஞானப்பெருந்தகவோர் சம்பிரதாயம். நல்ல நாடகமரபு ஞானப்பெருந்தகவோர் மரபு ஆம். அது பரதமுனி மரபு. அது பொது. இது சிறப்பு. இது பரதாழ்வான் மரபு. மதுரகவியாழ்வார் மரபு, கடாம்பி ஆச்சான் மரபு. இவர்கள் ஞானப்பெருந்தகவோர்கள். இவர்கள் சம்பிரதாயத்தைக் கண்களில் தெரியக் காட்டும் இந்த ஸம்ப்ரதாயப்ரக்ரியாபாகம் நாடகபாகமாதல் காண்க. இவ்வாறு சித்தசித்திறை என்னும் சிறப்பும், இயலிசைநாடகம் என்னும் பொதுமையும் ஒன்றிய முத்தமிழ் மொழித்திருவாம் ரஹஸ்யத்ரயஸாரம் என்றது கூறப்பட்டது.
1 கீதை 18,61; 2 திருவாய் 8.5.1;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக