சாதி
துர்வாதியர்க்கு:- சலம். சாதி. நிக்ரஹஸ் தாநம் என்னும் விதண்டையின் பாற்படும் குற்றவாதமாகும். துர்வாதியர்க்கு சாதி, ஒன்றே தஞ்சமாகும்.
வெறிநாய்க்கு: சாம்பர்மேடு: நாய்க்குக் குப்பைமேடே தஞ்சமாகும்.
ஒழுக்கம் கெட்ட பார்ப்பானுக்கு: பிறப்பு ஒன்றே தஞ்சமாகும். வேதவுணர்வு தரும் ஒழுக்கம், அருள், துறவு என்ற எதுவும் அறவே இல்லாது பிறப்பு என்ற ஒன்றையே பற்றித் தடித்துத் திரிபவன்.
புறம்பட்டார்
துர்வாதியர்: துய்ய நீதிவாதியர்களால் வாதமேடைக்குப் புறம்பே தள்ளப்பட்டவர்கள்.
வெறிநாய்: வீட்டுக்குப் புறம்படுத்தி விலக்கப்பட்டுள்ளது, அதைத் தீண்டக்கூடாது.
ஒழுக்கம் கெட்ட பார்ப்பான்: உண்மைக்கும், அறத்துக்கும், கோட்டிக்கும், நற்கிரிசைகளுக்கும், மற்றும் எல்லா விதநன்மைகளுக்கும் புறம்பட்டவன், அவனை அறவோர் கூட்டிக்கொள்ளார்.
சகனியவிருத்தி:
துர்வாதியர்க்கு:- சகனிய விருத்தி என்பது இலக்கணை என்னும் விருத்தி. சொல்லின் குறித்தொழிலை இலக்கணை என்பர். மொழிதானே நேரே உணர்த்தும் முக்கிய விருத்தியை (அதாவது நேரிய பொருளை)க் கைக் கொள்ளாது ஒருபடி அதனடியாகப் பிறக்கும் இலக்கணை என்னும் குறிப்பு ஒன்றையே கைக் கொள்வார் என்றபடி. சொல் உணர்த்தும் நேரிய பொருளைக் கைக்கொள்ள ஏலாவாறு வலிய வாதைகள் உறும் இடத்தில் மட்டிலுமே வேறுவழி இல்லாமை பற்றி சகனியவிருத்தி என்னும் இலக்கணையை நீதிவாதியர் இசைவார்கள். எவ்விடத்திலுமே இலக்கணை ஒன்றையே பற்றுதல் வாதியர்க்கு இழுக்கு. குறித்தொழில் ஒன்றையே கைக்கொண்டு சொற்பொருளைக் கைவிடுபவர் வாதியர் என்று கருதப்படார் என்றபடி.
நாய்க்கு: சகனியவிருத்தி என்றது குறித்தொழில்.
ஒழுக்கம்கெட்ட பார்ப்பானுக்கு: சகனியவிருத்தி என்றது இழிதொழில். வகுத்த செய்தொழிலை விடுத்து விலக்கிய இழி தொழில்களையே கைக்கொள்ளல் இழுக்கு.
வெகுண்டு:
மூவருமே வெறிபிடித்தவர்கள் என்றது கருத்து. துர்வாதியரும் ஒழுக்கம் கெட்ட பார்ப்பானும் நெறிப்பட நல்லார் சொல்லும் பொருளைக் கேளாது அவர்கள்மீது சீறி வெறிப்பார்கள்.
எதிர்மேல் விழப் பாய்வர்கள்
மூவருமே மேல்விழுந்து பிடுங்குவார்கள். நெறியில் அடக்க முயலும்நல்லார்களை மூவரும் கடித்துப் பிடுங்குவார்கள். ஒன்றுபல்லாற் கடிக்கும். இருவர் நாவினால் சுடுவார்கள். வகையே அவர்களது கைம்முதல், வெறியே அவர்களது இயல்பு.
ஓரிலச்சையாதுமிலர்: மூவரும் வெட்கத்தை உதிர்த்துத் திரிபவர்கள்.
நரர்யாவரும் நாண ஆடுவர்: மூவருமே மானமற்றுச் செய்யும் இழிதொழில்களால் மானிகளான நன்மக்கள் அனைவரையும் நாணச் செய்வார்கள். இவர்கள் வெறியாட்டம் மானிகளை நாணச்செய்யும்(எ-று)
மூதறிஞர்களின் வாதமேடை துய்யதோர் வேள்வி மேடை என்ற உண்மை தெளிக. உண்மை என்னும் திருவைக் காண்டலே இவ்வேள்விக்கு அவபிரதம். துய்யர்க்கே வாதம். பொய்யர்க்கல்ல. நான்மறைகளின் உள்ளக்கருத்தை உணர்த்தும் உபநிடதமொழிகளைச் சான்ற ஊகங்களை உதவியாகக் கொண்டு, ஐயந்திரிபறத் தெளிந்து துணிந்து, அத்தெள்ளியதுணிபுக்குத்தக ஒழுகி ஒழுக்கத்துத் துறந்து, பரம்பொருளின் திருவடிக்கு உயிர்ப்பொருளை அவியாக வடித்திட்டு மீளாத பேரடிமைக்கு அன்பு பெறுதலே சிறப்புணர்வு, சிறப்பொழுக்கம், சிறப்புத்துறவு என்னும் மதிநலப்பெருந்திருவாகும். வீட்டுப்பாலின் பாற்படும் சிறப்புமறை நூல்களுக்கு ஒருமை உயிர்நிலையாகும். ஒருபொருண்மையற்றல் ஒரு நூன்மை அற்றேபோம். இறைநிலை உணர்வு பலதலை உணர்வையும் கலப்புணர்வையும் பொறாது. இறைநிலை உணர்வுக்கு ஒருமை என்றது பெயர். ஒருமையென்றது இறையுணர்வாகும் என்றது நிகண்டு. ஆதலால் ஒருமையில் தலைக்கட்டும் பெருஞ்சமய நூல்களுள் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. ஒவ்வொருமறைப்பெருஞ் சமயமும் உணர்தற்கரியதோர் நன்மறைக் கருத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அக்கருத்து அச்சமயத்தின் சிறப்புக்கோட்பாடு ஆகும். அச்சிறப்புக் கோட்பாட்டை ப்ரதாந ப்ரதிதந்த்ரம் என்பர். ஒவ்வொரு சித்தாந்தத்திலும் ப்ரதிதந்த்ரம் அமைந்திருக்கும். அஃது இல்லையேல் அது சிந்தாந்தமாகாது. இது சித்தாந்திகள் எல்லாரும் இசைந்ததே. இதை:- சித்தாந்தம் என்பது யாதெனில் சான்று தெளியக்காட்டும் பொருள் என்பர். அது ஸர்வதந்த்ரம், ப்ரதிதந்த்ரம், அப்யுபகமம் என்னும் வேற்றுமையால் மூவகைத்து ஆம். யாது ஒன்று இல்லையேல், வாத வழக்கு என்பது அறவே உறதோ அது அனைவரும் உடன்பட்டுள்ள ஸர்வதந்த்ரம் என்னப்படும். அதற்கு உதாரணம்:- ப்ரமாணத்தால் ப்ரமேயசித்தி என்பது முதலியன. மாத்தியமிகர்கள் (சூரியவாதராகும் பௌத்தசமயத்துள் ஒருவகுப்பினர்) போல்வாரும் ஸம்வ்ருதம் முதலியபேரால் ப்ரமாணப்ரமேயவழக்கை உடன்பட்டுள்ளார்கள். தமது சமயம் ஒன்றிலேயே சித்தமாயும் சமயத்தார் பிறரால் மறுக்கப்பட்டதாயும் உள்ள சித்தாந்தம் ப்ரதிதந்த்ரசித்தாந்தம் என்னப்படும். அதற்கு உதாரணம்:- (பிற்காலத்து) வையாகரணர்க்கு ஸ்போடம் பௌத்தர்க்கு ஷணபங்கம், திகம்பரர்க்கு ஸப்தபங்கி, கௌமாரிலர் முதலியர்க்கு சப்தபாவனை முதலிய ஏவற்பொருண்மை, வேதாந்தம் வல்லார்க்கு இறைவனது ஸர்வசரீரித் தன்மை முதலியது. இவைகள் ஏனைய சித்தாந்தங்களுக்கு உடன்பாடற்ற ப்ரசித்தநிலையில் பிரதிதந்த்ரங்கள் என்னப்படும். மற்றோர் சித்தாந்தியும் அந்த (ப்ரதிதந்த்ர)ப் பொருள்களை உடன்படுவாரேல் அப்பொழுது அவை அந்த சித்தாந்திக்கு அப்யுபகமசித்தாந்தத் தன்மையை (உடன்படுசித்தாந்தத் தன்மையை) அடையும், என்று ந்யாயபரிசுத்தியில் இம்மஹாதேசிகர் விளக்கினார். நீதிநெறியில் தத்துவங்களைக் கசடற ஆய்ந்து தெளியக் கண்டு மதிநலத்தில் நிலையுற்று ஒழுகும் துய்யரே நல்லாராவார் என்ற இம்மஹாதேசிகர் தெளிவிக்கும் நயப்பொருள் காண்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக