வெள்ளி, 26 ஜூன், 2009

மதுரகவி திருப்புகழ்

ஏற்கனவே இங்கு மதுர கவி ஸ்ரீநிவாஸய்யங்கார் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். திருப்புகழ் என்றாலே நினைவுக்கு வருபவர் அருணகிரிநாதர். வைணவத்துக்கும் திருப்புகழ் உண்டு என நம் மதுர கவியார் 108 திவ்ய தேசங்கள் மீதும் அற்புதமாகத் திருப்புகழ் இயற்றியுள்ளார். அதிலிருந்து திருவேங்கடத் திருப்புகழ் ஒன்று இங்கே. 150 வருடங்களுக்கு முன்னேயே தமிழன் தமிழை மறக்க ஆரம்பித்து விட்டதை எவ்வளவு வேதனையோடு சாடுகிறார் பாருங்கள். பாடல்களுக்கு திரு கம்பன் என்பவர் சிறு குறிப்பு அளித்துள்ளார். அதையும் காணலாம்.
மதுரகவி திருப்புகழ்
திருவேங்கடம்

தானன தானன தானன தானன
தானன தானன தனதான

ஆங்கில பாடையின் மேம்பட லேபெரி
தாம்பல னாம்என அறியாதே
ஆன்றவ ரோதிய தீந்தமிழ் தேர்கிலர்
ஆய்ந்தறி யாரணு வளவேனும்

மாங்குயில் நேர்மொழி வாய்த்தவ ரோடிறு
மாந்தொரு வாகன மதினேறி
வாஞ்சையி னேகுதல் தான்தவ மாமென
மான்றவ ரோவுனை நினைவாரே

தேங்கிள நீர்முலை வாங்கிய நூலிடை
தேங்கமழ் தாமரை மயில்மார்பா
சேந்தனு மாதுமை காந்தனு மாலொடு
சேர்ந்தெமை யாள்கென அருள்வோனே

வேங்கையு நாகமு மான்களு மாடுற
வேங்கையு நாகமு மிடைவாகி
மீன்கண மேல்வளர் பூம்பொழில் மாமலை
வேங்கட மேவிய பெருமாளே!


திரு கம்பன் உரை:-
ஆங்கில பாடையின் -- இங்கிலாந்து நாட்டினரின் இங்கிலீசு மொழியில்; மேம்படலே -- மேலான புலமை பெறுதலே; பெரிதாம்பலன் ஆம்என -- (ஆங்கில ஆட்சியில் அடிமைப் பட்டு) மிகு பலன் தருவதாகும் என ; அறியாதே-- அறிவின்மையால்; ஆன்றவர் -- அறிவிற் சிறந்த பெரியார்கள்; ஓதிய -- கூறிவரும்; தீந்தமிழ் -- இனிய (தாய் மொழி) தமிழ் மொழியை;தேர்கிலர் -- பயிலாதிருக்கின்றனர் ; ஆய்ந்தறியார் அணுவளவேனும் -- மிகச் சிறிதளவுகூட ஆராய்ந்து அறிகிலர்; மாங்குயில் நேர்மொழி -- மாஞ்சோலையில் கூவும் குயிலனைய சொற்கள்; வாய்ந்தவரோடு -- இயல்பாகப் பெற்ற மாதர்களுடன் ; இறுமாந்து -- கருவமுடன் ; ஒருவாகனமதில் ஏறி -- ஒரு தேரில் (காரில்) ஏறியமர்ந்து; வாஞ்சையில் --அன்புடன் ; ஏகுதல்தான் -- செல்வது ஒன்றே; தவம் ஆமென -- தவமாகும் என்று; மான்றவரோ --மயங்கியவர்களோ; உனை நினைவாரே --உன்னை மனதில் நினைப்பார்கள்; தேங்கிள நீர்முலை -- தெங்கின் இளநீரனைய கொங்கைகளும்; வாங்கிய நூலிடை -- (அதன் பாரத்தால் ) வளைந்த நூல் போன்ற இடையும்; தேங்கமழ் -- வாசனை பொருந்திய ; தாமரை மயில் -- தாமரை மலரிலிருக்கும் மயிலனைய திருமகளை; மார்பா -- மார்பிற் கொண்டவனே; சேந்தனும் -- குமரக் கடவுளும்; மாதுமை காந்தனும் -- உமாதேவியின் கணவனாம் சிவனும்; மாலொடு சேர்ந்து-- அயர்வுடன் உன் திருமுன்பில் சேர்ந்து; எமையாள்கென -- எங்களை ஆண்டருள்க எனப் பிரார்த்திக்க ; அருள்வோனே -- அவ்வண்ணமே அருள் புரிபவனே; வேங்கையும்-- புலியும்; நாகமும்-- யானையும் ; மான்களும் -- மான் இனங்களும்; மாடுற -- பக்கலில் தங்கி இருக்க; வேங்கையும் -- வேங்கை மரமும்; நாகமும் -- நாவல் மரமும்; மிடைவாகு -- நெருங்கி; மீன்கண மேல் வளர் -- விண்மீன் கூட்டங்களுக்கு மேலும் வளர்ந்து வரும்; பூம்பொழில்-- பூஞ்சோலைகள் உடைய ; மாமலை வேங்கடம்-- திருவேங்கடமென்னும் பெரிய மலையில்; மேவிய -- பொருந்தி விளங்கிய; பெருமாளே -- திருமாலே;

பெருமாளே, அறியாதே மான்றவரோ உனை நினைவாரே -- என இயைக்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக